அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
 
சென்னை,

தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை ஏதும் இல்லை, மாறாக அடிக்கடி ஏன் மின்சார தடை ஏற்பட்டது என்பது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இதுவரை இல்லாத சாதனை

சென்னையில் கடந்த மாதம் 30-ந்தேதி மின் தொடர்களில் பழுது காரணமாக மின்தடங்கல் ஏற்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கடந்த மாதம் 29-ந்தேதி 34.6 கோடி யூனிட் மின் நுகர்வையும், 15 ஆயிரத்து 343 மெகாவாட் மின்தேவையையும் பூர்த்தி செய்தது. கடந்த ஏப்ரல் முதல் தேதியில் 320 மில்லியன் யூனிட் இருந்த மின் நுகர்வும் 14 ஆயிரத்து 682 மெகாவாட் இருந்த மின்தேவையையும் இம்மாத இறுதியில் இதுவரை இல்லாத சாதனை அளவாக 346 மில்லியன் யூனிட் மின் நுகர்வையும் 15 ஆயிரத்து 343 மெகாவாட் மின்தேவையையும் எட்டியுள்ளது. இந்த மின்தேவையையும், மின் நுகர்வையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எந்த மின்வெட்டும் இல்லாமல் சந்தித்துள்ளது. மின் உற்பத்தி நன்றாக இருப்பதால் மின் பற்றாக்குறை ஏதும் இல்லை.

தமிழகத்தின் தேவை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் 600 மெகாவாட் திறன் கொண்ட மூன்று அலகுகள், 210 மெகாவாட் திறன் கொண்ட 12 அலகுகள், நீர் மின் நிலையங்கள், தனியார் மின் நிலையங்கள், காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள், மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்தின் பங்கு மற்றும் நீண்ட கால, மத்திய கால மற்றும் குறுகிய கால திறந்த வெளி மின் கொள்முதல் மூலம் பெறப்படும் மின்சாரம் மூலமாகவும், தமிழகத்தின் மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

கடந்த 30-ந்தேதி அன்று அதிகாலை சென்னை மாநகரத்திற்கு மின்சாரம் கொண்டு செல்லும் மிக முக்கியமான வடசென்னையிலுள்ள 230 கிலோவோல்ட் உயரழுத்த மின் தொடர்களில் ஒரே சமயத்தில் ‘கரோனா பாதிப்பு’ என்ற தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டு மின்தடை ஏற்பட்டது. இதனை பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் உடனடியாக ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் பழுது சீர் செய்து பகல் 12.30 மணியளவில் சீரான மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.

சீரான மின்வினியோகம்

மீண்டும் அன்று பகல் 12.45 மணியளவில் தென்சென்னையில் ஏற்பட்ட மூன்று மிக முக்கியமான 230 கிலோவோல்ட் உயரழுத்த மின் தொடர்களில் பழுது ஏற்பட்டு மின்தடை ஏற்பட்டது.

ஒரு 230 கிலோவோல்ட் உயரழுத்த மின் தொடரில் பழுது விரைவில் சீர் செய்யப்பட்டு வீட்டு பயனீட்டாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மாலை 5.30 மணியளவில் சீரான மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தேவையான அளவுக்கு மின் உற்பத்தி செய்து வருவதால், மாநிலம் முழுவதும் மின் பற்றாக்குறை ஏதுமின்றி தடையில்லா மின்சாரம் வழங்கி வருகிறது. அதிக வெப்பம் காரணமாகவோ அதிக மின் பளு காரணமாகவோ மின் தொடர்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் சிறப்பு பயிற்சி பெற்ற ஊழியர்கள் கொண்ட நடமாடும் குழுவினர் பணியில் அமர்த்தப்பட்டு பழுது உடனடியாக சீர் செய்யப்பட்டு மின் விநியோகம் வழங்கப்படுகிறது.

மின்தடங்கல் தகவல்

மின் விநியோகத்தில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால், மின் உபயோகிப்பாளர்கள் ஏற்கனவே அறிவித்தவாறு அந்தப் பகுதிகளில் உள்ள செயற்பொறியாளர்களை தொடர்பு கொண்டு மின் தடங்கல் குறித்த தகவலை தெரிவிக்கலாம்.அந்தந்த செயற்பொறியாளர்களின் செல்போன் எண்கள் ஏற்கெனவே தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணைய தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-