அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது மோசமான வானிலை காரணமாக மாயமானார்.
தொடர்ந்து உறவினர்கள் புகாரின் பேரில் கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இருந்தும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் கடலில் விழுந்து மரணம் அடைந்து இருக்கலாம் என கருதினர்.
ஆனால் ஆச்சரியப்படும் விதமாக மிகப்பெரிய் ராட்சத திமிங்கில கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர்.
தான் 72 மணி நேரம் திமிங்கிலம் வயிற்றில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டதாகவும் கூறி உள்ளார்.
இது குறித்து மார்கியூஸ் கூறியதாவது:-
நான் இது வரை உயிருடன் இருந்தது ஆச்சரியமான விஷயம் தான்.நான் நல்ல குளிரிலும், இருட்டிலும் இருந்தேன். எனது வாட்டர் புரூப் வாட்சின் ஒளியில் திமிங்கலத்தின் கழிவுகளைத்தான் சாப்பிட்டேன். அங்கிருந்த நாற்றம் தாங்க முடியவில்லை. அங்கிருந்த செறிக்காத உணவுகளின் துர்நாற்றம் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.மூன்று நாட்கள் குளித்தால்தான் இந்த நாற்றம் போகும் என கூறினார்.
இது உண்மையில் மிகவும் அதிசயமான விஷயம்தான் எனது வேண்டுதலை கடவுள் கேட்டு உள்ளார்.நான் நம்பிக்கையை கைவிடாமல் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தேன்.இப்போது நான் மீண்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இது குர் ஆன் கூறும் யூனுஸ் நபியின் வரலாற்றை நினைவு படுத்துகின்றது

சில தினங்கள் நபி அவர்கள் மீனின் வயிற்றில் வாழ்ந்த வரலாற்றை திருகுர்ஆன் குறிப்பிடுகிறது இனி யூனுஸ் நபியின் வரலாற்றை பற்றி குர்ஆன் கூறுவதை கேளுங்கள்
'இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது.
அவர் நம்மை துதிக்காது இருந்திருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்.
அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம்'
-குர்ஆன் 37: 143,144,145
யூனுஸ் நபி அவர்கள் பல நாட்கள் மீன் வயிற்றி்ல் இருந்தார்கள். அல்லாஹ்வின் அருளால் அவர்கள் மீண்டும் உயிருடன் இவ்வுலகிற்கு வந்தார்கள் என்ற நிகழ்ச்சியை திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கிறது.
நபி யூனுஸ் பின் மத்தா அவர்கள் (யோனா - Jonah) கி.மு 8-ம் நூற்றாண்டில் இராக்கிலுள்ள நைனுவா என்னும் பகுதிக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள். சிலைவழிபாட்டில் ஈடுபட்டிருந்த அவருடைய சமூக மக்களைச் சீர்திருத்துவதற்காக பல்லாண்டுகள் பாடுபட்டார்கள். ஆனாலும் அவருடைய சமூகம் அவரை நிராகரித்துவிட்டது. இதனால் மனம் வெறுத்துப் போன நபி யூனுஸ் அவர்கள் அல்லாஹ்வின் ஆணையைப் பெறாமலேயே அந்த ஊரை விட்டும் வெளியேறி விட்டார்கள்.
அல்லாஹ்வின் ஆணையின்றி வெளியேறுவது தவறு என்று உணராமலேயே அங்கே பயணிக்க தயாராக இருந்த கப்பலில் ஏறி சென்று விட்டார்கள். எனவே அல்லாஹ் அவரை தண்டிக்க நினைத்தான். அவர் பயணித்த கப்பலை நடுக்கடலில் தடுமாற, தத்தளிக்க வைத்தான். இறுதியில் அக்கப்பலில் யாராவது ஒரு நபர் இறங்கினால் தான் மற்றவர்கள் தப்பிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே அவர்களுக்கிடையில் சீட்டு குலுக்கி போட்டார்கள். அதில் நபி யூனுஸ் அவர்களின் பெயர் வரவே அவர் கடலில் தூக்கி வீசப்பட்டார். அச்சமயம் அல்லாஹ் நபி யூனுஸ் அவர்களை விழுங்கும் படி ஒரு மீனுக்கு கட்டளையிட்டான். மீன் வயிற்றில் சிறைபிடித்தான். தவறை உணர்ந்து இறைத் தூதர் மன்னிப்புக் கேட்டவுடன் மீன் வயிற்றிலிருந்து அவரை விடுவிக்கிறான் இறைவன்.
ஆக்ஸிஜன் இல்லாமல் மனிதன் செத்துவிடுவானே என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
இறைவன் நாடினால் இது போன்ற அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்றாலும் மீன் வயிற்றில் யூனுஸ் நபியவர்கள் உயிருடன் இருந்ததற்கு அறிவியல் சாத்தியம் உள்ளது என்பதைக் கூடுதல் தகவலாகத் தருகிறோம். மேலே சொன்ன தினத் தந்தியின் செய்தியும் இதனை உண்மைப்படுத்துகிறது.
மனிதனை விழுங்கும் அளவில் கடலில் ஒரு மீன் உள்ளது என்றால் அது திமிங்கலம் என்ற மீன்தான். கடலில் உள்ள பல்வேறு திமிங்கலங்களில் நீலத் திமிங்கலம் என்ற ஒரு வகை உண்டு.
இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும். பெரும் கப்பலையே சாய்த்து விடும் வல்லமை உடையது இது என்றால் அதன் வயிற்றுப் பகுதி எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று நாம் ஊகம் செய்து கொள்ளலாம்.
திமிங்கலம் மற்ற மீன்களில் இருந்து மாறுபட்ட படைப்பாகும். இது மீன் இனமாக இருந்தாலும் இது விலங்கினங்களைப் போல் தனது குட்டிகளுக்குப் பாலூட்டக் கூடிய உயிரினமாகும். மேலும் மீன்கள் தமது செவுள்களால் சுவாசிக்கின்றன.
ஆனால் திமிங்கலங்கள் மனிதனைப் போன்ற நுரையீரல்களைக் கொண்டுள்ளதால் தமது நுரையீரல்களால் சுவாசிக்கக் கூடியவை. நீரின் மேல்மட்டத்துக்கு வந்து தேவையான காற்றை உள் இழுத்துக் கொள்ளும். நீருக்கு அடியில் மூச்சுவிடாமல் இரண்டு மணி நேரம் கூட மூச்சடக்கிக் கொள்ளும். மனிதர்கள் சுவாசிக்கும்போது காற்றில் இருந்து 15 சதம் ஆக்ஸிஜனை உள் இழுக்கிறோம், ஆனால் திமிங்கலங்கள் காற்றில் இருந்து 90 சதம் ஆக்ஸிஜனை உள் இழுத்துக் கொள்வதால் 7000 அடி ஆழம் சென்றாலும் இவற்றால் நீண்ட நேரம் மூச்சடக்க முடிகிறது.
திமிங்கலத்தின் இந்த தனித்தன்மையைக் கவனத்தில் கொண்டால் அவை சுவாசித்து உள்ளே சேமித்துக் கொள்ளும் ஆக்ஸிஜன் அதன் வயிற்றுக்குள் இருந்த யூனுஸ் நபி சுவாசிக்க போதுமானதாகும். ஆக்ஸிஜன் முடியும் நேரத்தில் அவை நீருக்கு மேல் தலையை நீட்டி காற்றை உள் இழுத்துக் கொள்ளும் அவசியம் உள்ளதால் யூனுஸ் நபிக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வழியில்லை.
ஒரு கண்ணாடி அறையில் வெளிக்காற்று புகாமல் அடைத்து ஒருவரை உள்ளே வைத்தால் அந்த அறைக்குள் இருக்கும் காற்றே சில மணி நேரங்கள் அந்த மனிதன் சுவாசிக்கப் போதுமானதாகும். திமிங்கலம் உள்ளிழுக்கும் காற்றில் அதிக ஆக்ஸிஜன் இருப்பதால் யூனுஸ் நபி மீன் வயிற்றில் உயிருடன் இருந்தது அறிவியலுக்கு உடன்பாடானது தான்.
இதில் அறிவியல் பூர்வமாக கேள்வி கேட்க வழியில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் கடலில் இது போன்ற தனித்தன்மை வாய்ந்த மீன்களும் உள்ளன என்ற அறிவியல் முன்னறிவிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
குர்ஆன் இறை வேதம் தான் என்பதற்கு இந்நிகழ்வும் ஆதாரமாக இருக்கிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-