அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சென்னை : பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கலை, அறிவியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் வாங்க மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இன்ஜினியரிங், மருத்துவம், கால்நடை, கலை அறிவியியல் என அவரவர்களுக்கு விருப்பம் உள்ள துறையை தேர்வு செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஊருக்கு ஒரே ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி மட்டுமே இருந்து வந்த நிலை மாறி, காலப்போக்கில் அதிகரித்த விழிப்புணர்வு மற்றும் தனியார் கல்லூரிகளின் பெருக்கம் காரணமாக இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் சராசரியாக 1.5 லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகள் உருவாகின்றனர். 2000ம் ஆண்டுக்கு முந்தைய காலக்கட்டத்தில் கலை அறிவியல் படிப்புகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் இருந்தது. பிஎஸ்சி, பிகாம், பிஏ, பி.லிட் உள்ளிட்ட பட்ட படிப்புகள் முடித்த பெரும்பாலானோர் அரசு வேலைகளில் சேர்ந்தனர். ஆனால் நாளடைவில் இப்படிப்புகளுக்கு மவுசு குறைந்தது. அந்த சமயத்தில் தான் மாணவர்களின் பார்வை இன்ஜினியரிங் படிப்பு பக்கம் திரும்பியது.

இன்ஜினியரிங் படிப்புகளில் வேலைவாய்ப்பு ஒருபுறம் இருந்தாலும், சக மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் அது ஒரு கவுரவ படிப்பாக பார்க்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் போட்டிப் போட்டுக்கொண்டு இன்ஜினியரிங் படிக்க வைத்தனர். இதன் காரணமாக இன்ஜினியரிங் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வேலைவாய்ப்பு குறையத் தொடங்கியது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் தான், தமிழகத்தில் தற்போது மீண்டும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. பல லட்சம் செலவு செய்து இன்ஜினியரிங் பட்டம் வாங்குவதைவிட, குறைந்த செலவில் கலை, அறிவியல் படிப்புகளை முடித்துவிட்டு ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்துவிடலாம் என்ற மனநிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பெரும்பாலான அரசு பணி தேர்வுகள் டிகிரி கல்வி தகுதியாக கொண்டு நடத்தப்படுகிறது.

எனவே ஏதாவது ஒரு டிகிரி முடித்துவிட்டு அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறலாம் என்ற விழிப்புணர்வும் மாணவர்கள் இடையே அதிகரித்துள்ளது.அதன்படி பிளஸ் 2 தேர்வு முடிவான நாளில் இருந்து மாணவர்கள் அருகில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு சென்று ஆர்வமுடன் விண்ணப்பங்கள் வாங்கி செல்கின்றனர். தமிழகத்தில் மொத்தம் 658 கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகள் மூலம் ஆண்டுக்கு 3 லட்சத்து 35 ஆயிரத்து 418 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். சென்னையில் முக்கிய கல்லூரிகளான ராணிமேரி, மாநில கல்லூரி, ஸ்டெல்லா மேரீஸ், லயோலா ஆகிய கல்லூரிகளில் நாள்தோறும் மாணவர்கள் கூட்டம், கூட்டமாக வந்து விண்ணப்பங்கள் வாங்கி செல்கின்றனர். இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஜூன் மாதம் 20ம் தேதிக்கு பின்னர் கலை அறிவியல் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்குகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-