அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


விவசாயிகளின் பிள்ளைகளை குறிவைத்து சீர்கெடுக்க துடிக்கிறது இந்த அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம்
அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்ற பெயரில் எமது இளைய தலைமுறையை சாராய கடைகளில் சாராயம் ஊற்றிகொடுக்க வகுப்பு எடுக்கும் இந்த கல்வி நிறுவனம் முழுக்க முழுக்க தமிழகத்தின் விவசாயிகளை குறிவைத்து சீர்கெடுக்கும் நோக்கோடு பல விளம்பரங்களை செய்து வருகிறது. அந்த விளம்பரத்தில் விவசாயம் என்பது ஏதோ சொல்லவும் நாகூசும் தொழில் போலவும் அதிலிருந்து தனது பிள்ளையை காப்பாற்றி இந்த சாராயம் ஊற்றிக்கொடுக்கும் பட்டப்படிப்பில் சேர்த்து அவரின் பிள்ளையின் வாழ்கையை காத்துவிட்டது போலவும் அவர் பெருமிதத்துடன் பேசுவது போலவும் உள்ளது.
இதன் மூலம் எம் தமிழ்நாட்டில் குத்துயிரும் கொலையுயிருமாக இருக்கும் வேளாண்மையையும் வேளான் தொழிலாளர்களையும் நசுக்கும் வேலையை இந்த நிறுவனம் செய்து வருகிறது.
இப்போதைய காலத்தில் தங்களிடம் பாரம்பரியமாக இருந்த பறந்து விரிந்த சொத்தை, நிலத்தை , விவசாய பூமியை விற்று தனது பிள்ளைகளை படிக்கவைத்து அந்த பிள்ளையை ஏதோ ஒரு நிறுவனத்தில் கூலி வாங்கும் வேலைக்கு அனுப்பிவிடுகின்றனர். அந்த வேலையின் மூலம் வருகின்ற வருமானத்தில் ஏதோ ஒரு நகர பகுதிகளில் ஒரு குருவிக் கூட்டை விலைக்குவாங்க வேண்டும் என்பதை தான் பெருமையாகவும், தங்களது வாழ்நாள் கனவாகவும் விவசாயிகள் நினைக்க வைத்துவிட்டனர்.
அதன் காரணமாக கிராமங்களில் வேளாண்மை செய்து வந்த எங்கள் மக்கள் தத்தம் நிலங்களை விற்றுவிட்டு தங்கள் பிள்ளைகளை வெளிமாவட்டத்திற்கும், வெளிமாநிலத்திற்கும், வெளிநாட்டிற்கும் அனுப்பிவைத்துவிட்டு தங்கள் ஊரில் வேறு ஏதோ ஒரு பணமுதலையிடம் கழனி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .
இதுவும் போதாதென்று இன்று விவசாயத்தையே இழிவாக தோற்றுவிக்கும் இது போன்ற விளம்பரங்கள் அழிந்து வரும் விவசாயத்தை குழிதோண்டி புதைக்கும் வேலையாகும். இதற்கு மேலும், எங்கள் பெண் பிள்ளைகளையும் இது போன்ற கல்வி முறையில் சேர்ப்பித்து அவர்களுக்கும் சாராயம் ஊற்றி தருவது என்பது எப்படி என்று வகுப்பெடுகின்றனர் . எமது பெண் பிள்ளைகளையும் இது போன்ற பணிகளில் அமர்த்தி நமது பண்பாட்டையும், பழக்கவழக்கத்தையும் நன்னெறியையும் குலைத்து. நமது குடும்ப முறையை தகர்த்தெறியும் செயல்திட்டம் தான் இப்படியான கல்வி நிறுவனங்களின் முக்கிய நோக்கம்.
பல காலங்கள் அறியாமையில் இருந்து வேளாண்மையையும் , சுற்று சூழலையும் கவனிக்காமல் இருந்த இன்றைய தலைமுறை இப்போதுதான் தங்களது பார்வையை வேளாண்மையின் பக்கமும் சுற்று சூழல் பாதுகாப்பின் பக்கமும் திருப்பிவருகின்றனர்.
இச்சூழலில் இது போன்று சில விளம்பரங்கள் இத்தலைமுறையில் வேளான்மையில் ஆர்வம் காட்டும் மாணவர்களையும், இளைஞர்களையும் திசை திருப்பி அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்லாது அடுத்த தலைமுறையின் வாழ்வாதாரத்தையும் அடியோடு அழித்துவிடும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேதனையாக உள்ளது.
- ஆசிரியர் குழு

மாவேள் இதழ் (மாதமிருமுறை)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-