அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 பாட்னா: பீகாரில் அமல்படுத்தப்பட்ட மதுவிலக்கால் அங்கு குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார். அமோக வெற்றிபெற்று முதல்வராக பதவியேற்ற பின் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. மதுக்கடைகள் மூடப்பட்டது பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இதையடுத்து வெளிநாட்டு மதுபானங்கள் விற்கவும் தடை விதிக்கப்பட்டது. ஏப்ரல் 5ம் தேதி முதல் பீகாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.மதுவுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதை மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டன. முற்றிலுமாக மதுக்கடைகள் அகற்றப்பட்ட நிலையில், பீகாரில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது சுமார் 27 சதவீதம் அளவுக்கு குற்றச்செயல்கள் குறைந்துள்ளன.கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பலாத்காரம், பெண்களுக்கு எதிரான அடக்குமுறை, வன்முறை உள்ளிட்டவை வெகுவாக குறைந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் கொலை தொடர்பாக 206 வழக்குகள் பதிவாகியுள்ளது.

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 276 வழக்குகள் பதிவாகியிருந்தன. பலாத்கார வழக்குகள் 112ல் இருந்து 59 ஆக குறைந்துள்ளன. மதுவிலக்கு கொண்டுவந்த காரணத்தால் குற்றசம்பவங்கள் குறைந்துள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல் கள்ளச்சாராயம் பெருகி விடாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதோடு, அண்டை மாநிலங்களில் இருந்து திருட்டுத்தனமாக மது வாங்கி வந்து குடிப்போர், கடத்துவோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-