அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூரில் கடையின் கதவை உடைத்து ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரூ.6 லட்சம் கொள்ளை

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் S.S.எலக்ட்ரானிக் கடை வைத்து நடத்தி வருபவர் சுல்தான் இப்ராகிம் (வயது48). இவரது கடை ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர். நேற்று காலை 9.30 மணி அளவில் சுல்தான் மற்றும் ஊழியர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது கடையின் கிரில் கதவு உடைக்கப்பட்டு மேற்கூரை உடைந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் உள்ளே சென்று பார்த்த போது மேஜையில் இருந்த ரூ.6 லட்சம் கொள்ளை போய் இருந்தது. கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம மனிதர்கள் மேஜையை உடைத்து ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசில் சுல்தான் புகார் செய்தார்.

கண்காணிப்பு கேமரா

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்கள் விட்டு சென்ற இரும்பு பொருட்களை அறுக்க உதவும் சிறிய கருவி மற்றும் இரும்பு ஆப்பு ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். எலக்ட்ரானிக் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவங்களை வைத்து பார்க்கும் போது கொள்ளையர்கள் வடஇந்தியாவை சேர்ந்தவர்கள் போல் இருப்பதாகவும், அவர்கள் சுமார் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் போல் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

வலைவீச்சு

கேமராவில் பதிவான உருவங்களை கொண்டு அவர்கள் யார்? பெரம்பலூரில் நடந்துவரும் தொடர் கொள்ளை சம்பவங்களுக்கும், இந்த கொள்ளை சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா? வடமாநில கொள்ளையர்கள் பெரம்பலூரில் தங்களது கைவரிசையை காட்டிவருகிறார்களா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கோரிக்கை

பெரம்பலூரில் சமீபகாலமாக கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. போதிய அளவில் போலீசார் இல்லாததால் கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தவண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பெரம்பலூருக்கு கூடுதல் எண்ணிக்கையில் போலீசாரை பணியில் அமர்த்திடவும், கூடுதல் போலீஸ் நிலையம் அல்லது குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-