அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்மாவட்ட அளவில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாணவ-மாணவிகள் 3 பேர் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். 2-வது இடத்தை 4 பேர் பிடித்தனர்.

96.52 சதவீதம் தேர்ச்சி

தமிழ்நாடு முழுவதும் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் 27 பேர் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை புரிந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 47 மாணவர்களும், 4 ஆயிரத்து 530 மாணவிகளும் என மொத்தம் 9 ஆயிரத்து 577 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 4 ஆயிரத்து 841 பேரும், மாணவிகள் 4 ஆயிரத்து 403 பேரும் என மொத்தம் 9 ஆயிரத்து 244 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் 96.52ஆகும்.

2014-ம் ஆண்டில் பெரம்பலூர் மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தேர்ச்சியில் 92.33 சதவீதத்தை பெற்றிருந்தது. கடந்த 2015-ம் ஆண்டில் தேர்ச்சி சதவீதம் 97.25 பெற்று மாநில அளவில் 5-வது இடத்திற்கு முன்னேறியது. தற்போது 96.52 ஆக குறைந்து 9-வது இடத்திற்கு சென்றுள்ளது.

மாணவி டி.ஹேமலதா

பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி டி.ஹேமலதா 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளார். பெரம்பலூர் ரோஸ் நகரில் வசித்து வரும் இவரது பெற்றோர் தங்கபாண்டியன்-கஸ்தூரி. தங்கபாண்டியன் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறையில் பெரம்பலூர் அலுவலகத்தில் தட்டச்சராக பணிபுரிந்து வருகிறார்.

மாநில அளவில் சாதனை புரிந்த ஹேமலதாவிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா மற்றும் ஸ்ரீசாரதா கல்விக்குழுமத்தின் தலைவர் சிவசுப்ரமணியன், செயலாளர் என்ஜினீயர் விவேகானந்தன் மற்றும் பள்ளி முதல்வர் கோமதி, உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்.

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி

பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி இ.சவுந்தர்யா 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளார். பெரம்பலூர் கல்யாண் நகரைச்சேர்ந்த இவரது பெற்றோர் இளங்கோவன்-சித்ரா. இளங்கோவன் வேளாண்மைத்துறை உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

இதேபோல் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் எஸ்.ஆர். செல்வகணேஷ் 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளனர். பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்த இவரது பெற்றோர் ரமேஷ்- சிவதர்ஷினி. ரமேஷ் ரியல்எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இப்பள்ளியில் பயின்று வெற்றி பெற்ற மாணவர்கள் சவுந்தர்யா, செல்வகணேஷ் இருவரையும் பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன், முதல்வர் அங்கையர்க்கன்னி ஆகியோர் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

2-வது இடம் பிடித்தமிருளாளினி

பெரம்பலூர் செயிண்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மிருளாளினி 497 மதிப்பெண் பெற்று பெரம்பலூர் மாவட்ட அளவில் 2-வது இடத்தை பெற்றுள்ளார். அவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:- தமிழ்-98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100 மொத்தம்- 497. மாவட்ட அளவில் 2-வது இடம் பிடித்த மாணவி மிருளாளினி கூறுகையில், உயிரியல் பாடம் தேர்வு செய்து மருத்துவம் பயில விரும்புவதாக தெரிவித்தார். இவரது தாய் கடலூர் மாவட்டம் தொழுதூரை சேர்ந்த கலைவாணி, இவர் மிருளாளினி படிக்கும் பள்ளியிலேயே ஆசிரியையாக பணிபுரிகிறார். மிருளாளினிக்கு பள்ளி முதல்வர் அருட்சகோதரி ரோணிக்கம் இனிப்பு வழங்கி பாராட்டினார்.

ஆண்ட்ரூஸ் மெட்ரிக் பள்ளி

திருமாந்துறை செயிண்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் பள்ளி மாணவி ஏ.எழில்மதி 497 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2-வது இடத்தை பெற்றுள்ளார். அவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-

தமிழ்-99, ஆங்கிலம்- 98, கணிதம்- 100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100, மொத்தம்- 497. மாவட்ட 2-வது இடம்பெற்ற இவர், உயிரியல் பாடத்தை தேர்வு செய்து மருத்துவம் பயிலவிரும்புவதாக தெரிவித்தார். இவரது பெற்றோர் வேப்பந்தட்டை தாலுகா பசும்பலூரை சேர்ந்த ஆறுமுகம்-வள்ளியம்மை. மாணவி எழில்மதிக்கு பள்ளி தாளாளர் ஜார்ஜ்பெர்னாண்டஸ், முதல்வர் தாமஸ் ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டினார்கள்.

கலெக்டர் ஆவதே லட்சியம்

பெரம்பலூரில் தந்தை ரோவர் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு தலைமை வளாகத்தில் அமைந்துள்ள தந்தை ரோவர் மெட்ரிக் பள்ளி மாணவி கே.லிசா, 497 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2-வது இடத்தை பெற்றுள்ளார். அவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-

தமிழ்-99, ஆங்கிலம்-98, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100, மொத்தம்- 497. மாவட்டத்தில் 2-வது இடம் பெற்ற இவர், மருத்துவம் படித்து ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று கலெக்டராக ஆவதே தனது லட்சியம் என்று தெரிவித்தார். இவரது பெற்றோர் வேப்பந்தட்டையை அடுத்த தொண்டபாடியை சேர்ந்த கிருஷ¢ணசாமி- மகேஸ்வரி. கிருஷ்ணசாமி வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.

தந்தை ரோவர் மெட்ரிக் பள்ளி

தந்தை ரோவர் மெட்ரிக் பள்ளியின் மற்றொரு மாணவி ஆர்.என்.ரஷ்மிபிரியா 497 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2-வது இடத்தை பெற்றுள்ளார். அவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:- தமிழ்-98, ஆங்கிலம்-99, கணிதம்- 100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100, மொத்தம் - 497. மாவட்டத்தில் 2-வது இடம் பெற்ற இவர், உயிரியல் பாடம் படித்து எம்.பி.பி.எஸ். பயிலவிரும்புவதாக தெரிவித்தார். இவரது பெற்றோர் நெப்போலியன்-பூங்கோதை, நெப்போலியன் ரோவர் மருந்தியல் கல்லூரியில் முதல்வராக பணிபுரிந்து வருகிறார். தாய் பூங்கோதை ரஷ்மிபிரியா பயிலும் பள்ளியிலேயே ஆசிரியையாக பணிபுரிந்துவருகிறார். மாவட்ட அளவில் 2-வது இடம்பெற்ற லிசா மற்றும் ரஷ்மிபிரியாவிற்கு தந்தை ரோவர் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் தலைவர் ரோவர் வரதராஜன், துணைத்தலைவர் ஜான்அசோக்வரதராஜன், பள்ளி முதல்வர் சுமதி ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-