அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சென்னை: அமைச்சர்களின் பினாமியாக செயல்படும் அன்புநாதனுக்கு சொந்தமான வர்த்தக வளாகம் துபாயில் இருப்பதை மத்திய உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. அதன் மதிப்பு ரூ.1900 கோடி என தெரியவந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. மாநிலம் முழுவதும் அதிமுக முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. அரசுக்கு எதிராக மக்கள் திரண்டுள்ளதால், பணம் கொடுத்தால்தான் ஓரளவாவது வெற்றிபெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பணத்தை போலீஸ் வாகனம், ஆம்புலன்ஸ், ஏடிஎம் வாகனங்களில் கடத்தி செல்வதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறினர். ஆனால் போலீஸ் அதிகாரிகள், கலெக்டர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில்தான் கரூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் உள்ள அன்புநாதன் என்பவரது குடோனில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் சப்ளை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் எஸ்பி வந்திதா பாண்டே தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதில் ரூ.11 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அதை தொடர்ந்து, அன்புநாதனின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ரூ.5 கோடி ரொக்க பணத்தை கைப்பற்றினர். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில் அன்புநாதனின் குடோனில் சிசிடிவி கேமரா கைப்பற்றப்பட்டது. அதில், தனது பெயருக்கு முன்னால் சொந்த ஊரின் பெயரை போட்டுள்ள மூத்த அமைச்சர், கட்சியில் 2ம் நிலையில் உள்ள ஒரு மூத்த அமைச்சர், நெற்களஞ்சியத்தின் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அமைச்சர் ஆகியோர் அடிக்கடி வந்து சென்ற தகவல்கள் வெளியாகின. மேலும் சுமார் ரூ.500 கோடி வரை பணம் மாநிலம் முழுவதும் தேர்தல் செலவுக்காக அனுப்பி வைக்கப்பட்டதும், கடைசியாக மீதம் இருந்த ரூ.5 கோடிதான் சிக்கியது என்றும் தெரியவந்தது.

மேலும் ஒரு மூத்த அமைச்சர் ஹாங்காங் அருகில் ஒரு தனி தீவு வாங்கியிருப்பதும், அந்த தீவுக்கு மூத்த அமைச்சர்கள் 3 பேர் சென்று நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து வந்ததும் தெரியவந்தது. தாய்லாந்தில் இருந்து அழகிகளை அழைத்து வந்து அமைச்சர்களுடன் சந்திக்க வைத்ததும், தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமிகரமான நடிகை உட்பட 2 பேர் அன்புநாதன் மற்றும் 3 மூத்த அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்ததும் தெரியவந்தது. மேலும் துபாய், ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் 3 மூத்த அமைச்சர்களின் முறைகேடு மூலம் கிடைத்த பல ஆயிரம் கோடி ரூபாய் அன்புநாதன் மூலம் முதலீடு செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இந்த விவகாரங்கள் குறித்து மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள், வருவாய் புலனாய்வுத்துறையினர், அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த விவகாரம் பெரிய அளவில் வெளியாகி வருவதால் அன்புநாதன் திடீரென்று தலைமறைவாகிவிட்டார். தற்போது அவரது முதலீடு குறித்து மத்திய உளவுத்துறையினரும் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. அதில், தெற்கு துபாயில் உள்ள தெய்ரா என்ற பகுதியில்தான் அதிகமாக கருப்பு பணம் முதலீடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியர்கள் பலரும் அந்த பகுதியில்தான் முதலீடு செய்துள்ளனர். 2004ம் ஆண்டு கோவை மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்த சுரேந்திரகுமார் தற்போது துபாயில் பெரிய அளவில் முதலீடு செய்ததாக அமலாக்கப் பிரிவு வழக்குப்பதிவு செய்தது. அவர் கட்டிடம் வாங்கிய அதே தெருவில்தான் அன்புநாதனும் ஒரு பெரிய வர்த்தக வளாகத்தை கட்டியுள்ளார்.

மெட்ரோ ரயில்நிலையத்தின் அருகில் அல் எத்திகா சாலையில் ‘செஞ்சுரியன் ஸ்டார்’ என்ற பெயரில் அந்த வளாகம் கட்டப்பட்டுள்ளது. 12 மாடிகள் கொண்ட அந்த கட்டிடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1900 கோடி. அதில் ஷாப்பிங் மால், அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளன. கட்டிட உச்சியில் அதிநவீன வசதியுடன் கூடிய நீச்சல்குளமும் உள்ளது. ஒரு சதுர அடி ரூ.35 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அந்த கட்டிடத்தை முழுமையாக வாடகைக்குத்தான் அன்புநாதன் விட்டுள்ளார்.

மத்திய உளவுத்துறை அதிகாரிகள், செஞ்சுரியன் ஸ்டார் என்ற வளாகத்துக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அங்கு உள்ள கடை வாடகைக்கு வேண்டும் என்று விசாரித்தபோது, அதற்கு உரிமையாளர் அன்புநாதன் என்றும் அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த இடத்தை பிரேம் ராமச்சந்திரன் என்பவர் மூலம்தான் வாங்கியுள்ளார். இந்த தகவல்களை எல்லாம் மத்திய உளவுத்துறை திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஒரு முதலீட்டை மட்டுமே விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும் விசாரணை நடத்தினால் பல ஆயிரம் கோடிக்கு அன்புநாதனின் முதலீட்டை கண்டுபிடிக்கலாம் ரூ.2013ல் ரூ.3 கோடி மட்டுமே வைத்திருந்த அன்புநாதனுக்கு ரூ.1900 கோடி கட்டிம் எப்படி கட்ட முடியும். அவருக்கு நெருக்கமான 3 அமைச்சர்களின் ஊழல் பணம்தான் அங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்தும் உளவுத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளில் விசாரணை தொடங்கினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும் என்கிறார் மத்திய புலனாய்வு உயர் அதிகாரி ஒருவர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-