அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஊட்டி,

ஊட்டியில் 27-ந் தேதி தொடங்கும் மலர் கண்காட்சியை முன்னிட்டு மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தாவரவியல் பூங்கா

மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் சிறந்த கோடைவாசஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. ஊட்டியில் ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் கோடை சீசன் காலம் ஆகும். இந்த சீசன் காலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 120-வது மலர் கண்காட்சி வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இந்த மலர் கண்காட்சிக்காக சுமார் 3 லட்சம் மலர் செடிகள் பூங்காவில் நடவு செய்யப்பட்டு உள்ளன. அவைகள் தற்போது பூத்து குலுங்குவதால் பூங்கா வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணி மும்முரம்

இந்த நிலையில் தாவரவியல் பூங்காவில் உள்ள அலங்கார மலர் தொட்டிகள் பூங்காவில் அடுக்கி வைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஒரியண்டல் லில்லி, ஏசியாடிக்லில்லி, கேலஞ்சியோ, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரி கோல்டு, ஆஸ்டர், சால்வியா, பிகோனியா, பெட்டுனியா, பேன்சி, டேலியா உள்ளிட்ட 194 ரகங்களை சேர்ந்த சுமார் 3 லட்சம் மலர் நாற்றுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்டன. மேலும், சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக 15 ஆயிரம் தொட்டிகளில் பல வண்ணங்களில் பூக்க கூடிய மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டு உள்ளன. இந்த மலர் தொட்டிகள் மலர் மாடத்தில் அடுக்கி வைக்கும் பணி இன்று (நேற்று) தொடங்கி உள்ளது. இந்த பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுறும். அதன் பிறகு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்படும். மேலும், இந்த ஆண்டு மலர் கண்காட்சிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புது பூங்காவில் மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-