அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் நகரில் கோடைகாலத்தை முன்னிட்டு, இளநீர் மற்றும் தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், இவற்றின் விலையும் உயர்ந்து வருகிறது.

தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், உடலின் சூட்டைத் தணிப்பதற்காக கரும்புச்சாறு, தர்ப்பூசணி, இளநீர், சர்பத், பழக்கூழ் உள்ளிட்ட குளிர்பானங்கள் பருகுவதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக, தர்ப்பூசணி, இளநீர் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. பழக்கூழ், கரும்புச்சாறு மற்றும் குளிர்பானங்களின் விலையும் அதிகரித்துள்ளது.

பொதுவாக கோடைகாலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். நிகழாண்டில், மார்ச் முதலே கடுமையான வெப்பம் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. மேலும், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும் கடுமையான அனல் காற்றால் அவதியுறுகின்றனர். இதனால், நெடுஞ்சாலைகளில் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வாகனப் போக்குவரத்தும் குறைந்தே காணப்படுகிறது.

கோடையைச் சமாளிக்கும் வகையில், பெரம்பலூர் நகரின் சாலை ஓரங்களில் இளநீர், தர்பூசணி பழம் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. தர்பூசணி பழம் கிலோ ரூ. 17 வரையிலும், ஒரு கீற்று ரூ. 10 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில், தற்போது பெரம்பலூர் நகரில் தர்பூசணியின் விற்பனை சூடுபிடித்துள்ளது. நகர்ப்புறம் மட்டுமின்றி, சுற்றுப்பகுதிகளிலும் கோடை வெயிலின் உக்கிரத்தைத் தணிக்கும் இளநீர், தர்பூசணி ஆகியவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தற்போது விற்பனையில் உள்ள நாட்டு இளநீர் ரூ. 20-க்கும், பொள்ளாச்சி இளநீர் ரூ. 25 முதல் 40 வரையிலும் விற்கப்படுகின்றன.

தமிழகத்தில் திண்டிவனம், விழுப்புரம், சென்னையைச் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து தர்பூசணி கொண்டுவரப்படுகிறது.

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கடந்தாண்டைவிட, நிகழாண்டு விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது. நகரின் ஒரு சில இடங்களில் சுகாதாரமற்ற வகையில், சாலையோரங்களில் தர்பூசணி பழங்களை விற்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-