அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தேர்வுகள் முடிந்துவிட்டன. பள்ளிக்கூடத்துக்கு டாட்டா... பாடப் புத்தகங்களுக்கும் டாட்டா. இனி, இரண்டு மாதங்களுக்கு நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்; மகிழ்ச்சியாக விளையாடிப் பொழுதைக் கழிக்கலாம். இது மட்டுமா? விடுமுறை என்றதும் நம் நினைவுக்கு வந்து உற்சாகம் தருவது சுற்றுலா.

சுற்றுலா என்பது பொழுதுபோக்கு மட்டும் அல்ல. ‘ஒவ்வொரு 25 கிலோமீட்டருக்கும் நிலத்தின் இயற்கை அமைப்பு மாறும்’ என்று சொல்வது உண்டு. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்குச் செல்லும்போது, நமது முன்னோர்களின் கலாசாரம், வாழ்வியல் முறைகளை அறியலாம். மலை, காடு, அருவி எனச் செல்லும்போது, இயற்கையின் பிரமாண்டத்தையும், அதைப் பாதுகாக்கவேண்டிய கடமையையும் உணரலாம். தீம் பார்க், அறிவியல் அரங்கம் போன்ற இடங்களில் அறிவியலின் புதுமைகளைச் சந்திக்கலாம்.ஊருக்கு ஊர் மனிதர்களின் பேச்சுவழக்கு, உணவு மாற்றம், அவர்களுக்கு என இருக்கும் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அறியும் வாய்ப்பு, சுற்றுலாப் பயணத்தில் கிடைக்கும். நீங்கள் செல்லும் சுற்றுலாப் பயணத்தில், கட்டடங்களை, இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்கும் அதே சமயம், உங்களைச் சுற்றி இருக்கும் மனிதர்களையும் கவனியுங்கள். அவர்களோடு உரையாடுங்கள். புதிய அனுபவம் கிடைக்கும்.

உங்கள் கைகளில் தவழும் இந்த இணைப்புப் புத்தகம், சுற்றுலா வழிகாட்டியாக உங்களுக்கு உதவும். தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலாப் பகுதிகளை, சுருக்கமாகக் கொடுத்திருக்கிறோம். அப்புறம் என்ன? அப்பா, அம்மாவிடம் காட்டுங்கள்; அழகா ஒரு பயணத் திட்டம் போடுங்கள். சந்தோஷத்தோடு, அறிவையும் சேகரித்து வாருங்கள்!

அன்புடன்

ஆசிரியர்

சென்னை

தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் இருந்து நம் பயணத்தை ஆரம்பிக்கலாம்!

சென்னையில் பொழுதுபோக்க... தீம் பார்க், மல்ட்டிபிளெக்ஸ் தியேட்டர்கள் என, அதிக செலவுவைக்கும் இடங்களும் உள்ளன. மிகக் குறைந்த செலவில் கண்டு மகிழும் இடங்களும் உண்டு.கடற்கரை என்றாலே உற்சாகம்தானே. உலகின் நீளமான கடற்கரைகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மெரீனாவில், மாலை நேரத்தை சுகமான காற்றோடு கழிக்கலாம். சென்னையின் எந்தப் பகுதியில் இருந்தும் வருவதற்கு பேருந்து வசதி உண்டு.

கிண்டி சிறுவர் பூங்காவில் பறவைகள், பாம்புகள், முதலைகள், ஆமைகள், பல வகை மான்கள் உங்களை வரவேற்கும். காலை 9 முதல் மாலை 5.30 வரை கண்டு ரசிக்கலாம்.

எழும்பூர் - கன்னிமாரா நூலகத்தை ஒட்டி உள்ளது, அரசு அருங்காட்சியகம். உலகப் புகழ்பெற்ற அமராவதி மென்கல் சிற்பத் தொகுப்பு இங்கே உள்ளன. தலைமைச் செயலகம் பகுதியில் புகழ்பெற்ற தலைவர்களின் அசல் கையெழுத்து ஆவணம் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம் இருக்கிறது.அண்டவெளியில் உள்ள கோள்கள், அவற்றின் செயல்பாடுகள் எனப் பல்வேறு ஆச்சர்யங்களை கோட்டூர்புரம், பிர்லா கோளரங்கத்தில் பார்க்கலாம். தொலைநோக்கி மூலம் வான்வெளிக் காட்சிகளைக் கண்டு வியக்கலாம்.

காஞ்சிபுரம்

‘நல்ல பட்டுப் புடவை எங்கே வாங்கலாம்?’ என்று அம்மாவிடம் கேளுங்க... உடனே சொல்வாங்க காஞ்சிபுரம் என்று. சென்னைக்கும் காஞ்சிபுரத்துக்கும் இடைப்பட்ட பகுதிகளில் புகழ்பெற்ற சுற்றுலா இடங்கள் ஏராளம்.

மாமல்லபுரச் சிற்பங்கள்: தமிழர்களின் சிற்பக் கலைப் பெருமையை உலகுக்குச் சொல்லும் மாமல்லபுரம். கடற்கரைக் கற்கோயில்கள், மகிஷாசுரமர்த்தினி குகை, அர்ஜுனன் தவம், ஐந்து ரதம், குகைக் கோயில்கள் என ரசிப்பதற்கு ஏராளம் உண்டு.

புலிக் குகை: மாமல்லபுரத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதன் அருகிலேயே வராகக் குகை. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மண்டபம், சிற்ப அருங்காட்சியகமும் உள்ளன.ஆலம்பாறைக் கோட்டை: மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் இருக்கும் இதைக் கட்டியது, நவாப்புகள். இங்குள்ள கழி முகத்துவாரமும் குளிர்ந்த மணல்வெளியும் புகழ்பெற்றவை.

முதலியார்குப்பம் படகுத்துறை: ஜாலியாக படகு சவாரி செய்ய ஏற்ற இந்த இடம். மாமல்லபுரத்தில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ளது. கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள மற்றொரு படகுத்துறை முட்டுக்காடு. நீர் விளையாட்டுகள், புதிய படகு ஓட்டுநர்களுக்கான பயிற்சிகளையும் கண்டு ரசிக்கலாம்.

முதலைப் பண்ணை (வடநெமிலி): சென்னையில் இருந்து 44 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்தப் பண்ணை, ‘ரோமுலஸ் விட்டேகர்’ என்ற வெளிநாட்டவரால் நிறுவப்பட்டது. இங்கே, மணிக்கு ஒரு முறை பாம்பு விஷம் எடுக்கும் நிகழ்ச்சியைக் காணலாம். அனகோண்டா பாம்புகளையும் பாதுகாப்பாகப் பார்க்கலாம்.

சோழமண்டலம் ஓவிய கிராமம்: கிழக்குக் கடற்கரைச் சாலையின் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளது. தமிழகத்தின் பிரபல ஓவியர்கள் இங்கே வந்து, ஓவியங்கள், சிற்பங்களை உருவாக்கி, பொது மக்களின் பார்வைக்கு வைப்பார்கள். பார்வையிடக் கட்டணம் எதுவும் கிடையாது.

வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா: இந்தியாவின் பெரிய விலங்கியல் பூங்காக்களில் ஒன்று. சுதந்திரமாக நடமாடும் விலங்குகள், பறவைகள், ஊர்வன எனப் பல உயிரினங்களைப் பார்க்கலாம். லயன் சஃபாரி, எலிஃபென்ட் சஃபாரியும் உண்டு.

வேடந்தாங்கல்: உலகின் பல நாடுகளிள் உள்ள பலவிதமான பறவைகள் கூடும் அழகான இடம். தொலைநோக்கி மூலம் பார்க்கும் வசதியும் உண்டு. எண்ணற்ற பறவைகளைப் பார்க்கப் பார்க்க, நேரம் செல்வதே தெரியாது.

காஞ்சிபுரம்: கோயில் நகரமான காஞ்சிபுரத்தில், நமது முன்னோர்களின் சிற்பக் கலைத்திறனைச் சொல்லும் கைலாசநாதர் கோயில், ஏகாம்பர நாதர் கோயில், மீனாட்சி அம்மன் என சிறப்பான பல கோயில்கள் பார்க்கவேண்டியவை.

வேலூர்

சரித்திரப் புகழ்பெற்ற ஊர், வேலூர். இங்குள்ள கோட்டையில்தான் சிப்பாய்க் கலகம் உருவாகி, ஆங்கிலேயருக்கு எதிரான முதல் போராட்டம் தொடங்கியது. வேலூரின் மையப் பகுதியில் இருக்கும் கற்கோட்டையைச் சுற்றிலும் உள்ள 8,000 அடி நீளமான அகழியில், படகு சவாரி செய்யலாம்.வேலூர் அருங்காட்சியகம்: அபூர்வப் பொருட்களும் வட ஆற்காடு மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னங்களும் உள்ள இடம்.

ஸ்ரீபுரம் தங்கக் கோயில்: 100 ஏக்கர் பரப்பளவில், 600 கோடி ரூபாய் செலவில் தங்கம் மற்றும் தாமிரத்தால் கட்டப்பட்டுள்ள கோயில்.

ஏலகிரி: குறைந்த செலவில் சென்று வருவதற்கு ஏற்ற அழகான மலைவாசஸ்தலம். ‘பாரா க்ளைடிங்’ இங்கே புகழ்பெற்றது. மலையின் கீழே உள்ள ஒரு குன்றின் மீது அழகாகக் கொட்டும் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, பார்க்க ஏற்ற இடம்.

ஜவ்வாது மலைத்தொடர்: சந்தன மரமும் பழ மரங்களும் அதிகம். இந்த மலைத்தொடருக்குக் கீழே, அமிர்தி விலங்கியல் பூங்கா உள்ளது. பறவைகள், விலங்குகள், சந்தன மரங்கள், மூலிகைச் செடிகள், அருவி என ரம்மியமான இடம்.

ஏற்காடு

‘ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப்படும் ஏற்காடு, சேலத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது.

தேசியத் தாவரவியல் பூங்கா: 1963-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தப் பூங்கா, 18.4 ஹெக்டேர் பரப்பளவுகொண்டது. பாடப் புத்தகங்களில் படித்த பூச்சி தின்னும் பிட்சர் தாவரத்தை இங்கு காணலாம். இந்தப் பூங்காவில் 3,000 வகையான மரங்கள் உண்டு.

ஏற்காடு ஏரி: ஏரியின் நடுவில் நீருற்றும், ஏரியின் அருகே அண்ணா பூங்காவும் உள்ளன. இந்தப் பூங்காவுக்குள் ஜப்பான் தோட்டக்கலையைப் பின்பற்றி அமைக்கப்பட்ட சிறிய பூங்காவும் உள்ளது. மே மாதம் இங்கு நடைபெறும் மலர்க் கண்காட்சி புகழ்பெற்றது.லேடி சீட்: ஏற்காட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. இரவு நேரத்தில், இந்த இடத்திலிருந்து பார்த்தால், சேலம் மாநகரம் ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும். லேடி சீட் போல சேலம் மாநகரின் அழகைக் காணும் மற்றொரு இடம் பகோடா பாயின்ட்.

ஏற்காடு ஏரியில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கிள்ளியூர் நீர்வீழ்ச்சி. ஏற்காட்டில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது, கரடியூர் காட்சி முனை. இவற்றையும் காணத் தவறாதீர்கள்.

ஒகேனக்கல்

தருமபுரி மாவட்டத்தின் சிறப்புகளில் முதன்மையானது. தருமபுரியில் இருந்து 48 கி.மீ. தொலைவில் இருக்கிறது, ஒகேனக்கல் அருவி. வேகமாக விழும் அருவி என்பதால், கவனமாகக் குளிக்க வேண்டும். உடலையும் மனத்தையும் நிச்சயம் குளிர்ச்சியாக்கும். மலையின் அழகை ரசித்துக்கொண்டே, பரிசல் சவாரி செய்யலாம். பரிசல் பயணத்தின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவது, இங்கே விற்கப்படும் மீன் உணவுகள்.தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் இருக்கிறது, தியாகி சுப்ரமண்ய சிவா நினைவகம். அவரது அபூர்வப் புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்களை இங்கே காணலாம்.

ஓசூரில் இருந்து 7 கி.மீ தூரத்தில் இருக்கிறது, கிருஷ்ணகிரி அணை. 1957-ல் கட்டப்பட்ட இந்த அணையைச் சுற்றி உள்ள பூங்காக்கள், பார்ப்பவர் மனதைக் கவரும்.

‘லிட்டில் இங்கிலாண்ட்’ என்று பிரிட்டிஷ்காரர்களால் அழைக்கப்பட்ட ஊர், தளி. இங்கே உள்ள பள்ளத்தாக்குகள், குன்றுகள், அதனைச் சூழ்ந்த மேகக் கூட்டங்கள் கொள்ளை அழகு.
இயற்கைச் சூழலுடன் இனிமையாக விடுமுறையைக் கழிக்கலாம்.

நீலகிரி

நீலகிரி என்றதும் உள்ளம் துள்ளும் இடம் ஊட்டி. பொட்டானிக்கல் கார்டன், ரோஸ் கார்டன், தொட்டபெட்டா, லேக், ஆகியவை இதன் சிறப்பு.

கற்பூர மரம்: இங்கு அமைந்துள்ள கற்பூர மரம், 12 மீட்டர் சுற்றளவுகொண்டது. இந்த மரத்தை, 12 ஆட்கள் கைகோர்த்தால்தான் கட்டிப்பிடிக்க முடியும். இது, பழைய மைசூர் சாலையில் அமைந்துள்ளது.நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்வதே அழகான அனுபவம். ஊட்டியின் தாவரவியல் பூங்கா, படகு சவாரி ஆகியவை சுற்றுலாவைக் குதூகலப்படுத்தும்.

குன்னூர் மற்றும் கோத்தகிரியும் பார்க்க வேண்டிய அற்புதமான பகுதிகள். சிம்ஸ் பார்க், செயின்ட் காத்ரினா நீர்வீழ்ச்சி, கொடநாடு வியூ பாயின்ட், டால்ஃபின் நோஸ் என நிறைய இடங்கள் உள்ளன.

மற்றொரு சிறப்பான இடம், கூடலூர். முதுமலைக்காடுகள், பைக்காராவில் லேக், அருவி ஆகியவை நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும்.

புதுச்சேரி

கடற்கரை: மும்பையை அடுத்து, புதுச்சேரியில்தான் கடற்கரை ஒட்டிய சாலை அமைந்துள்ளது. இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு நேராக நீண்டிருக்கும். நடுவே அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைதான் கடற்கரையின் அடையாளம். இந்தப் பகுதியில் இருக்கும் கட்டடங்கள், வீடுகள் பிரெஞ்ச் கால நாகரிகத்தின் பிரதிபலிப்புகள். கடற்கரையிலிருந்து சில அடி தூரத்தில் உள்ள அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோயில் ஆகியன ஹைலைட்டான இடங்கள்.

பாரதி பூங்கா: கடற்கரை காந்தி சிலை அருகில் உள்ளது பாரதி பூங்கா. குழந்தைகள் விளையாடுவதற்காக, மலைப் போன்ற சிறிய குன்றுகள் இங்கு அமைந்துள்ளன. பூங்காவுக்கு மேலும் அழகூட்டுவது, அங்குள்ள ஆயி மண்டபம். பிரெஞ்ச் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு, பழமை மாறாமல் பேணிக் காத்துவருகிறது புதுவை அரசு.பாரதி பூங்காவில் இருந்து இரண்டு கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது, ஜவஹர் பால் பவன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகை மரங்கள், தாவரங்களை இங்கு காணலாம். பால் பவனின் சிறப்பு, இங்கு இயக்கப்படும் மினி ரெயிலில் பயணம் செய்யும் அனுபவம்.

ஆரோவில்: புதுச்சேரியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது, ஆரோவில். இயற்கை எழில் கொஞ்சும் ஆரோவில்லில், மூங்கில் தொடர்பான ஆய்வு மையம் அமைந்துள்ளது. மூங்கில் சிற்பங்கள், கலைப் பொருட்களைக் காணலாம். மூங்கில் கழிகளால் செய்யப்பட்ட சைக்கிள், பிரபலம். ஆரோவில்லின் சிறப்பே, வெயிலில் மின்னும் மெகா சைஸில் அமைந்துள்ள உலகம் போன்ற கட்டட அமைப்பு. அதற்குள் தியான மண்டபம் உள்ளது. உள்ளே நுழைய முன் அனுமதி அவசியம். வெளி மாநில மற்றும் வெளிநாட்டு உணவு வகைகளை ஆரோவில்லில் ருசிக்கலாம்.படகுக் குழாம்: புதுச்சேரியில் சுண்ணாம்பாறு மற்றும் ஊசுட்டேரி ஆகிய இரண்டு இடங்களிலும் படகு குழாம் அமைந்துள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் சுண்ணாம்பாறு படகுக் குழாமில் இருந்து கடல் முகத்துவாரம் அருகே உள்ள மணல் மேட்டில் பயணிகள் இறக்கிவிடப்படுவார்கள். கடற்கரை மணலில் குடும்பத்தோடு பொழுதை கழிக்கலாம்.

கடலூரில் சில்வர் பீச், புதுச்சேரி கடற்கரையைப் போன்று பிரபலமானது. கடலூரிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில், பிச்சாவரம் படகுக் குழாம் அமைந்துள்ளது. சதுப்பு நிலக் காடுகளுக்கு மத்தியில் பரிசல் செல்லும் விதமே, த்ரில் அனுபவம். பாதுகாப்புடன் பரிசல் சவாரி செய்து, உற்சாகம் அடையலாம்.

நாகப்பட்டினம்

வரலாற்று அறிவை வளர்த்துக்கொள்ள உதவும் இடம், நாகப்பட்டினம். இந்த நாகப்பட்டினத்தில் இருந்து 35 கி.மீ தொலைவில் இருக்கும் தரங்கம்பாடிக் கோட்டை, டச்சுக்காரர்கள் கட்டியது. சுதந்திரத்துக்குப் பிறகு, பயணிகள் மாளிகையாக செயல்பட்டது. 1977-க்குப் பிறகு, அரசு நினைவுச் சின்னமாக உள்ளது.

சோழர்களின் முன்னாள் தலைநகர், பூம்புகார். இங்கே இருக்கும் சிலப்பதிகாரக் கலைக்கூடம் பிரசித்திபெற்றது. ஏழு அடுக்கு மாளிகை. சிலப்பதிகாரக் காட்சிகளை விளக்கும் சிற்பங்களும் ஓவியங்களும் உள்ளன. சித்திரை மாத பெளர்ணமி இரவில், பூம்புகார் விழாக்கோலம் பூண்டுவிடும்.கோடியக்கரையில் 312 ஹெக்டேர் பரப்பளவில் வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு பல வகை விலங்குகள், வெளிநாட்டுப் பறவைகளைக் காணலாம். இங்கே இருக்கும் கடற்கரையில், கடல் குதிரைகள், கடல் ஆமைகள், கடல் பசுக்கள் ஆகியவற்றையும் பார்க்கலாம். ஏராளமான பவளப்பாறைகளும் இங்கே உண்டு.

மத நல்லிணக்கத்தைச் சொல்லும் வகையில் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோயில், சிக்கல் முருகன் கோயில் ஆகியவை உள்ள மாவட்டம் நாகப்பட்டினம்.

தஞ்சாவூர்

தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலா ஊர், தஞ்சாவூர்.

தஞ்சைப் பெரிய கோயில்: ராஜராஜ சோழனால் இந்தக் கோயில் 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. சோழர் காலக் கட்டடக் கலையின் பெருமையைச் சொல்கிறது.

அரண்மனை: மராட்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. அரண்மனையில் மன்னர்கள், சிப்பாய்கள் பயன்படுத்திய உடைகள், அணிகலன்கள், போர் வாள்கள், ஈட்டி, கேடயம், பீரங்கிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.சிவகங்கைப் பூங்கா: உலகின் முதல் ‘மழைநீர் சேகரிப்புத் திட்டம்’ அமல்படுத்தப்பட்டது இங்குதான். பெரிய கோயிலில் விழும் மழை நீர், இந்தப் பூங்காவின் குளத்துக்கு வந்து சேர்வதுபோல, ராஜராஜ சோழன் வழி அமைத்திருக்கிறார்.

சரஸ்வதி மகால் நூலகம்: ஒரு லட்சம் நூல்களுக்கு மேல் உள்ளன. சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மராத்தி, இந்தி மொழி ஓலைச்சுவடிகளும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.

தஞ்சை நகரின் மற்றொரு சிறப்பான இடம், சரபோஜி மன்னர் அரண்மனை. பழங்கால கலைப் பொருட்கள், சரபோஜி மன்னர் பயன்படுத்திய ஆடை, ஆபரணங்களைக் கண்டு ரசிக்கலாம்.

வடுவூர் ஏரி: பறவைகளுக்கான சரணாலயமாக இருப்பது வடுவூர் ஏரிப் பகுதி. கிட்டத்தட்ட 178 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. இங்குள்ள ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரத்துக்கான நடைபாதை, பறவைகளுக்கு அருகிலேயே உங்களை அழைத்துசெல்லும்.கங்கைகொண்ட சோழபுரம் கோயில்: சோழர்களின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக தஞ்சைப் பெரிய கோயிலும் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலும் மிடுக்காக நிமிர்ந்து நிற்கின்றன.

ஜெயங்கொண்டத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது கங்கை கொண்ட சோழபுரம். தந்தை ராஜராஜன் கட்டிய பெரிய கோயிலைப் போன்று கட்டப்பட்டது இந்தக் கோயில். தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கழித்து கட்டப்பட்டது. கோயிலின் மூலஸ்தானத்தில் சந்திரகாந்தக் கல் இருப்பதால், குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளுமையாகவும் இருக்கும்.

சித்தன்ன வாசல்

புதுக்கோட்டையில் இருந்து 12 கி.மீ தொலைவில் இருக்கிறது, சித்தன்னவாசல். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்த ஊர் அன்னல்வாயிலுக்கு (அன்னவாசல்) அடுத்த சிற்றூராக இருப்பதாலும், சித்தர்கள் வாழ்ந்து வந்ததாலும் சித்தர் அன்னல்வாயில் என்பது மருவி, சித்தன்னவாசல் எனப்படுகிறது.மகேந்திரவர்ம பல்லவர் காலத்தில், சமணர்கள் தங்களது மதத்தைப் பரப்புவதற்காக இங்கு வந்திருக்கிறார்கள். அவர்கள், இந்த மலையில் தங்கியதற்கான சுவடுகள் இன்னும் இருக்கின்றன. அவர்கள் படுத்திருந்த பாறைப்படுக்கை, ‘சமணர் படுக்கை’ என அழைக்கப்படுகிறது. அவர்கள் வரைந்த ஓவியங்கள், உலகப் புகழ்பெற்று விளங்குகின்றன. முழுக்க முழுக்க இயற்கை மூலிகைகளால் மட்டுமே அந்த ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள். நாளடைவில் அழியத்தொடங்கிய ஓவியங்களை, தொல்லியல் துறை பாதுகாத்துவருகிறது.

பூங்கா, படகுக் குளம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை இங்கே ஏற்படுத்தியிருப்பதால், தினம் தினம் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓவியங்களை மகிழ்ச்சியோடு சுற்றிப் பார்க்கலாம்.

திருச்சி

திருச்சி என்றதும் நினைவுக்கு வருவது, மலைக்கோட்டை. உச்சிப் பிள்ளையார் கோயில் உள்ள இந்த மலைக்கோட்டையின் உயரம், 215 அடி. இது, 6-ம் நூற்றாண்டில் பல்லவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, நாயக்க மன்னர்களால் முடித்துவைக்கப்பட்டது. இங்கே உள்ள குடைவரைக் கோயில்கள் அற்புதமானவை.

திருச்சிக்கு மிக அருகிலேயே உள்ளது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். விஷ்ணு கோயில்களில் மிகவும் பிரமாண்டமானது. புகழ்பெற்ற திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலும் திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது.திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் வடக்கே 80 கி.மீ தொலைவில் உள்ளது பச்சைமலை. வனவிலங்குகளும் நீர்நிலைகளும் இருக்கும். ஒரு நாள் டிரெக்கிங் பயணத்துக்கும் ஏற்ற இடம்.

மணப்பாறைக்குத் தெற்கே உள்ளது பெண்ணையாறு அணை. பெருமாள் மலை மற்றும் செம்மலையின் மேல் கட்டப்பட்டு இருக்கும் இடம். மலையேற்றம், சுற்றுச்சூழல் கேம்ப், மீன் பிடித்தல் போன்றவற்றுக்கு ஏற்றது.

மேலூரில் இருக்கிறது அய்யனார் கோயில். கோயிலைச் சுற்றி களிமண்ணால் செய்யப்பட்ட பெரிய பெரிய குதிரைகளின் சுடு சிற்பங்கள், இந்தக் கோயிலின் சிறப்பம்சம்.

திருச்சியில் இருந்து 72 கி.மீ தொலைவில் உள்ளது புளியஞ்சோலை. இங்கே இருக்கும் சுனைகளும் அருவிகளும் இதற்குக் கூடுதல் அழகு.

ஆரம்ப கால சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கியது, உறையூர். அப்போது இருந்த உறையூர், ‘மணற் புயலால்’ அழிந்துபோய்விட்டதாகக் கருதப்படுகிறது. கோச்செங்கன் சோழன், இங்கே 78 மாடக் கோயில்களைக் கட்டினார்.கல்லணை: திருச்சியில் இருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் இருக்கிறது கல்லணை. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், கரிகால் சோழனால் காவிரி ஆற்றின் குறுக்கே பாறாங்கற்களால் கட்டப்பட்டதுதான் கல்லணை. கல்லைக்கொண்டு அணை கட்டப்பட்டதால், ‘கல்லணை’ என்று பெயர் வந்தது. 1,080 அடி நீளமும், 40 முதல் 60 அடி அகலமும், 15 முதல் 18 அடி உயரமும்கொண்ட கல்லணை, பாம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு போன்ற ஆறுகள் கல்லணையில் இருந்து பிரிகின்றன. கரிகால் சோழனின் மணிமண்டபம், மூன்று ஆறுகள் பிரியும் இடம் ஆகியவை சுற்றுலாப் பயணிகள் கண்டு களிப்பதற்கு இயற்கை தந்த பொக்கிஷம்.

கொடைக்கானல்

மலைகளின் இளவரசி கொடைக்கானல், கோடைக்காலத்துக்கு ஏற்ற சுற்றுலாத் தலம். வத்தலக்குண்டில் இருந்து 61 கி.மீ. தொலைவில் உள்ளது.டம்டம் பாறை, வெள்ளி அருவி, பிரையன்ட் பூங்கா, பேரிஜம் ஏரி, கொடைக்கானல் லேக், பாம்பர் அருவி, பசுமைப் பள்ளத்தாக்கு, தூண் பாறை, தொப்பி தூக்கிப் பாறை, கோக்கர்ஸ் வாக் என, பார்க்கும் இடங்களின் பட்டியல் மிக நீளமானது. மே மாதம் கொடைக்கானலில் மலர்க் கண்காட்சி நடைபெறும். அப்போது, சுற்றுலாப் பயணிகளுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கப்படுகிறது.

வத்தலகுண்டில் இருந்து 38 கி.மீ. தொலைவில் தடியன்குடிசை உள்ளது. காபி, மிளகு, ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய்த் தோட்டங்கள் இந்தப் பகுதியில் அதிகம் உள்ளன. ஆரஞ்சு, அவகோடா, எலுமிச்சை மரங்கள் நிறைந்துள்ளன. ஏலக்காய் வாரிய அலுவலகமும், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையமும் உள்ளன.

மதுரை

மதுரையில் பார்க்கவேண்டிய முதன்மையான இடம், தமுக்கம் மைதானம் அருகில் உள்ள காந்தி மியூசியம். காந்தியின் அரிய புகைப் படங்கள், அவரது குடில் உள்ளன. இங்கே உள்ள அருங்காட்சியகத்தில், பழங்காலச் சிலைகள், கல்வெட்டுகள், கலாசாரச் சிற்பங்களையும் காணலாம்.

மாலை நேரத்துக்கு ஜாலியான பொழுதுபோக்கு இடம், ராஜாஜி பூங்கா. விளையாட நிறைய அம்சங்கள் இருக்கின்றன. காந்தி மியூசியத்துக்கு மிக அருகில் உள்ளது இந்தப் பூங்கா.திருமலை நாயக்கர் மகால்: 1636-ல் மதுரை மன்னர் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. இங்கே உள்ள ஓவ்வொரு தூணும் 20 மீட்டர் உயரமும், 4 மீட்டர் அகலமும்கொண்டவை. இங்கே, மாலை வேளைகளில் நடைபெறும் ஒலி, ஒளிக் காட்சிகள், திருமலை நாயக்கரின் காலத்தின் கலை, வீரம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும்.

மீனாட்சி அம்மன் கோயில்: மதுரை என்றாலே நினைவுக்கு வரும் கோயில். தமிழத்தில் மிகப் பழைமையான கோயில்களில் ஒன்று. பொற்றாமரைக்குளம், ஆயிரங்கால் மண்டபம் ஆகியவை கோயிலின் சிறப்புக்குச் சான்று. சித்திரையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா, மிகவும் புகழ்பெற்றது.எக்கோ பார்க்: மதுரைக்கு அருகில் இருக்கும் திருப்பரங்குன்றம் கோயிலின் மலை அடிவாரத்தில் சுட்டிகளுக்காகவே அமைக்கப்பட்டது, ஹெர்பல் பிளான்ட் ஹவுஸ். அறிவியல் கோட்பாடுகளை நேரடியாகச் செய்துபார்க்கும் வகையில் அமைந்து இருக்கும் சாதனங்கள், அறிவுக்குத் தீனி போடுன்கிறன. மாலையில் நீர் ஊற்று நடனம் நடைபெறும்.

தேனி

வைகை அணை: தேனியில் இருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கே, சிறுவர்கள் விளையாடுவதற்கான பூங்கா உள்ளது.

வனவியல் பயிற்சிக் கல்லூரி: இங்கே உள்ள அருங்காட்சியகத்தில், 1,320 வகையான விலங்குகள் பதப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் மிகப் பெரிய அருங்காட்சியகம். சனி, ஞாயிறு தவிர, மற்ற நாட்களில் அனுமதி உண்டு.

சின்னமனூர் சிவகாமி அம்மன் கோயில்: தேனியில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. 12-ம் நூற்றாண்டில், ராஜசிம்ம பாண்டியனால் கட்டப்பட்டது.

தேனியில் இருந்து 26 கி.மீ தொலைவில் உள்ளது, குரங்கனி. தென்னிந்தியாவிலேயே உயரமான பகுதி (1,600 அடி). இங்கே ‘முதுவான்’ என்ற பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை அறிந்துகொள்ளலாம்.

தேனியில் இருந்து 46 கி.மீ தொலைவில் மேகமலை அடிவாரத்தில், ‘சின்ன சுருளி’ என்ற அருவி உள்ளது. மேகமலையில் இருந்து வரும் மணலாறு, இரவங்கலாறு, வெண்ணியாறு மூன்றும் இணைந்து விழும் இடம், சுருளி அருவி. மூலிகைகள் அதிகமாக விளையும் பகுதி. அங்கே உள்ள குகைக் கோயில், சித்தர்கள் வாழ்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது.

ராமேஸ்வரம்

தமிழ்நாட்டின் தென்கிழக்கில் அமைந்திருக்கும் தீவு, ராமேஸ்வரம். நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட எழில் கொஞ்சும் இடம்.

ராமநாதசுவாமி கோயில்: காசிக்கு நிகரான புனிதத்தலமான ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது ராமநாதசுவாமி திருக்கோயில். உலகின் நீளமான பிரகாரம் என அழைக்கப்படும் மூன்றாம் பிரகாரத்தில், 1,212 தூண்கள் உள்ளன.தனுஷ்கோடி: நாட்டின் முக்கியத் துறைமுக நகரமாக விளங்கியது தனுஷ்கோடி. 1964-ல் ஏற்பட்ட புயலால் உருக்குலைந்த அந்த நகரின் மிச்சங்களைக் காண்பதுடன், ஒருபுறம் அலையில்லாத கடலையும், மறுபுறம் ஆர்ப்பரிக்கும் கடலையும் கண்டு ரசிக்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லம்: இங்கு அப்துல் கலாம் பற்றிய மியூசியம் அமைந்துள்ளது. இந்த மியூசியத்தில் அப்துல் கலாமின் பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு, ஆராய்ச்சிகள், அவரது கண்டுபிடிப்புகள், அக்னி ஏவுகணை உருவான வரலாறு என கலாம் கடந்து வந்த பாதையை அறியலாம். (தினமும் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரையும், மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரையும்). அப்துல் கலாம் கல்வி பயின்ற தொடக்கப் பள்ளி, அவரது வீட்டுக்குச் செல்லும் வழியிலேயே உள்ளது.

வில்லுண்டி தீர்த்தம்: ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கரையில் இருந்து கடலுக்குள் 100 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த தீர்த்தம், உப்பு கரிக்காது.

குந்துகால்: ராமேஸ்வரத்தில் இருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ளது குந்துகால். அமெரிக்கப் பயணத்தை முடித்துகொண்டு இலங்கை வழியாக இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர், இங்கே இறங்கினார். இங்குள்ள கடற்கரையில், விவேகானந்தரின் அழகிய நினைவு மண்டபம் அமைந்துள்ளது.பாம்பன் பாலம்: ராமேஸ்வரம் தீவை, நாட்டின் நிலப் பகுதியுடன் இணைக்க, 1814-ல் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட முதல் பாலம். இந்தப் பாலத்தின் நடுவே அமைந்திருக்கும் ‘ஷெர்சர் பாலம்’ நாட்டின் வடபகுதியில் இருந்து தென்பகுதித் துறைமுகங்களுக்கு கப்பல்கள் செல்லும்போது, பாலம் இரண்டாகப் பிரிந்து வழிவிடும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது இதன் தனிச் சிறப்பு.

அன்னை இந்திராகாந்தி பாலம்: ராமேஸ்வரம் தீவுக்குள் வாகனங்களில் சென்றுவர அமைக்கப்பட்ட இந்தப் பாலம், நமது நாட்டின் மிக நீளமான கடல் பாலங்களில் ஒன்றாகும். 1988-ல் இருந்து பயன்படுத்தப்படுகிறது.

ராமேஸ்வரம் தீவின் நுழைவு வாயில்தான் மண்டபம். இங்கு அமைந்துள்ள பூங்காவில் இருந்து கண்ணாடி இழைப் படகுகள் மூலம் கடலில் சென்று வரலாம். இந்தப் படகில் செல்லும்போது, கடலுக்குள் விளையும் அரிய வகை உயிரினமான பவளப் பாறைகளைக் கண்டு ரசிக்கலாம். இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கடல்வாழ் உயிரின அருங்காட்சியகத்தில், பல்வேறு அரிய வகைக் கடல்வாழ் உயிரினங்களையும் காணலாம்.

விருதுநகர்

ராஜபாளையம் அருகே 5 கி.மீ தொலைவில் உள்ளது, அய்யனார் அருவி. அடர்ந்த வனப் பகுதிக்கு இடையே, சிறு குன்றின் மீது அமைந்துள்ள அய்யனார் கோயிலும், 15 அடி உயரத்தில் இருந்து விழும் அருவியும் சிறப்புகள்.

காமராஜர் நினைவு இல்லம்: விருதுநகர், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்து வளர்ந்த இடம். அவர் பயன்படுத்திய உடைகள், கைக்கடிகாரம், அரிய புகைப்படங்கள் இங்குள்ள அருங்காட்சியகத்தில் உள்ளன.குகன் பாறை: கழுகுமலையில் இருந்து வெம்பக்கோட்டை செல்லும் வழியில், ‘குகன் பாறை’ உள்ளது. பாறையின் அடிப்பகுதியில் உள்ள குகையில், ஜென் துறவிகள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நூற்றாண்டின் ஆரம்பகாலக் கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.

வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ளது, பிளவக்கல் அணை. இந்த அணையும், அதனைச் சுற்றி இருக்கும் வனப் பகுதிகளும் சிறப்பானவை. இங்கே ஒரு பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.

செண்பகத்தோப்பு: திருவில்லிப்புத்தூர் அருகே 480 கி.மீ பரப்பளவில் விரிந்துள்ளது வனப் பகுதி. புலி, சிறுத்தை, மான்கள், சாம்பல் நிற அணில், நூற்றுக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ள சரணாலயம்.

திருவில்லிபுத்தூர் அணில்கள் சரணாலயம்: விருதுநகரிலிருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்தச் சரணாலயத்தில், வித்தியாசமான அணில் வகைகளைக் காணலாம்.

திருநெல்வேலி

திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது, பாபநாசம். இங்கே, மலைக்கு அடியில் அகஸ்தியர் அருவி உள்ளது. பாபநாசத்தில் இருந்து மலைக்கு மேல் 10 கி.மீ தொலைவில்தான் காரையார் அணைக்கட்டு. இதற்குச் செல்லும் வழியில், பிரசித்திபெற்ற சொரிமுத்தையனார் கோயிலும் உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கட்டு: அம்பாசமுத்திரத்தில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ளது. தென் தமிழகத்தில் உள்ள பெரிய அணைக் கட்டுகளில் ஒன்று. மணிமுத்தாறில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள சிங்கம்பட்டி அரண்மனையில் குதிரை வண்டி, ராஜ உடைகள், அப்போதைய ஜமீனுக்கு விவேகானந்தர் பரிசாகக் கொடுத்த மர யானை போன்ற பொருட்களைக் காணலாம். அனுமதி இலவசம்.குற்றால அருவி: குற்றால அருவிகளில் உள்ள மகத்துவம் வேறு எங்கும் இல்லை. நடராஜர் நடனமாடிய ஐந்து சபைகளில் ஒன்று, குற்றாலம் சித்திரசபை. இங்கே உள்ள குற்றாலநாதர் திருக்கோயில் சுவரில் மூலிகைகளால் வர்ணம் தீட்டப்பட்ட நடராஜர் உருவமும் உள்ளது. தவிர, சுட்டிகளுக்காக இரண்டு பெரிய பூங்காக்களும் உள்ளன.

நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ளது, மாவட்ட அறிவியல் மையம். கடல் பற்றி விரிவான மூன்று கண்காட்சிகள், கோளரங்கம், அறிவியல் மற்றும் நாடகக் காட்சி, நடமாடும் அறிவியல் பொருட்காட்சி, மற்றும் 5 ஏக்கர் பரப்பில் அறிவியல் பூங்கா ஆகியவை உள்ளன.

களக்காடு வனவிலங்கு சரணாலயம் நெல்லையில் இருந்து 47 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கே புலிகள், சிங்கவால் குரங்கு, நீளவால் குரங்குகள் அதிகம் உள்ளன. நெல்லையில் இருந்து சுமார் 38 கி.மீ தொலைவில் உள்ளது, கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்.பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகம்: பழங்காலத்து நாணயங்கள், பொருட்கள், முதுமக்கள் தாழிகள், தொல்லியல் துறை சார்ந்த பொருட்கள் ஆகியவற்றைக் காணலாம்.

திருவள்ளுவர் இரட்டைப் பாலம்: இந்தியாவிலேயே முதன்முதலாகக் கட்டப்பட்ட இரண்டடுக்குப் பாலம். நெல்லை சந்திப்பில் உள்ளது. இது, ரயில் பாதையைக் கடப்பதற்காகக் கட்டப்பட்டது. 800 மீட்டர் நீளத்துடன், 25 குறுக்குத் தூண்கள், 13 வில்வளைவுத் தூண்கள் உடையதாக 30.30 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டுள்ளன.

நெல்லையில் இருந்து 72 கி.மீ தொலைவில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது கப்பல்மாதா திருத்தலம். கோவாவைச் சேர்ந்த இறையியல் திருச்சபையினரால் 1903-ம் ஆண்டு கட்டப்பட்டது.

கன்னியாகுமரி

இந்தியாவின் தென் எல்லைப் பகுதி, கன்னியாகுமரி. மூன்று கடல்களும் சங்கமிப்பது இங்குதான். சூரிய உதயம் மற்றும் மறைவு சுற்றுலாப் பயணிகளைச் சுண்டி இழுக்கும்.

காந்தி மண்டபம்: 1952-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கே காந்தியின் அஸ்தி பாதுகாக்கப்படுகிறது. மண்டபத்தில் உள்ள நூலகத்தில், பல வரலாற்றுத் தொகுப்புகளும், தத்துவக் குறிப்புகளும் அடங்கிய பல புத்தகங்கள் உள்ளன.கடலுக்கு நடுவே இருக்கும் விவேகானந்தர் பாறை, 1970-ல் கட்டப்பட்டது. அருகிலேயே 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் உள்ளது. இந்த இரண்டையும் பார்க்கப் படகில் செல்வது, சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

அரசு பழப் பண்ணை: கன்னியாகுமரிக்கு 2 கி.மீ. முன்பே உள்ளது. திருவிதாங்கூர் மன்னர், தன் அரண்மனை தேவைக்காக மாமரங்களை நடவு செய்தாராம். தற்போது, தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை பராமரித்து வருகிறது. இந்தியாவிலேயே பழப் பயிர்களுக்காக அமைக்கப்பட்ட ஒரே பண்ணை இதுதான். 300-க்கும் மேற்பட்ட மாமர வகைகள் இங்கே உள்ளன. எல்லா நாட்களிலும் பார்வையிடலாம். அனுமதி இலவசம்.

சுசீந்திரம் தாணுமலையான் திருக்கோயில்: நாகர்கோவிலில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் ஒரு சேரக் காட்சி அளிக்கும் தலம். இங்கே உள்ள அனுமன் சிலை 18 அடி உயரம்கொண்டது.

தொட்டிப் பாலம்: ஆசியாவிலேயே மிக நீளமான குறுக்குப் பாலம். 115 அடி உயரமும் ஒரு கி.மீ நீளமும்கொண்டது இந்தப் பாலம்.திருவிதாங்கூர் மன்னரின் சமஸ்தானத்துக்கு உட்பட்ட அரண்மனை உள்ள இடம் பத்மநாதபுரம். அரண்மனையின் உள் பகுதி மட்டும் 6 ஏக்கர் பரப்பில் உள்ளது. போர்த் தளவாடங்கள், பழங்காலப் பொருட்கள் உள்ளன. இங்கே உள்ள ராமசாமி ஆலயத்தில், ராமாயண இதிகாசத்தில் இருந்து பல காட்சிகள் 45 பிரிவுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

நாகர்கோவிலில் இருந்து 43 கி.மீ தொலைவில் கோதையாற்றுக்கு குறுக்கே உள்ள பேச்சிப்பாறை அணையும், கன்னியாகுமரியில் இருந்து 40 கி.மீ தூரத்தில் இருக்கும் முட்டம் கடற்கரையும் சுற்றிப் பார்க்கவேண்டிய எழில் மிகுந்த இடங்கள்.

நாகர்கோவிலில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது, வட்டக்கோட்டை. பண்டைய மன்னர்கள் ஆட்சி செய்த கோட்டை ஒன்று இங்கே உள்ளது. நாகர்கோவிலில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது, திற்பரப்பு அருவி. குற்றாலத்தைப் போல குளித்து மகிழ ஏற்ற இடம்.

மைசூர்

கர்நாடக மாநிலத்தின் இயற்கை சூழ்ந்த மைசூரைக் கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. கோவையிலிருந்து சுமார் 200 கி.மீ தூரத்தில் இருக்கிறது மைசூர். மைசூரின் புகழ்பெற்ற அரண்மனை, 1897-ம் ஆண்டு தொடங்கி 1912-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.

பிரமிக்கவைக்கும் நுழைவு வாயில், மைதானம், தர்பார் மண்டபம், மல்யுத்த மைதானம், அந்தப்புரம் என்று விரிந்துகொண்டே செல்கிறது. சுமார் 175 அறைகளைக் கொண்ட இந்த அரண்மனைக் கோபுரத்தின் உயரம், 145 அடி. நூலகம், வேட்டை அறை, படுக்கை அறை உள்ளிட்டவை இருக்கும் மூன்றாம் மாடிக்கு, லிஃப்ட் வசதி உண்டு. தசரா பண்டிகையின்போது, இந்த அரண்மனை ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும்.ஸ்ரீசாமராஜேந்திர விலங்கியல் தோட்டம்: மைசூர் விலங்கியல் காட்சி சாலை என்றும் அழைக்கப்படும் இது, 10 ஏக்கர் பரப்பளவில், மைசூர் அரண்மனை அருகிலேயே அமைந்துள்ளது.

பிருந்தாவன் பூங்கா: கிருஷ்ணராஜ சாகர் அணையை ஒட்டி இருக்கும் இந்தப் பூங்கா, உற்சாக உலகமாக இருக்கும். அணையைச் சுற்றிப் பார்க்கும்போது, நீர்ச் சாரல் பட்டு ஆளையே நனைத்துவிடும். பூங்காவில் அழகான பல வித பூச்செடிகள், புல்வெளிகள் பசுமைப் போர்த்தி இருக்கும். ஊஞ்சல், சறுக்கு மரம் என்று சிறுவர்களை மகிழ்விக்கும் பகுதிகள் உண்டு.இந்தப் பூங்காவின் இன்னொரு சிறப்பு, நடனமாடும் நீரூற்று. மாலை நேரத்தில், ஒளி வெள்ளத்தில் இருக்கும் நீரூற்று, இசைக்கேற்ப நடனம் ஆடுபவதைப் போல ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பிருந்தாவன் பூங்காவை ஒட்டி சுமார் 75 ஏக்கரில் அரசு பழப் பண்ணையும், 30 ஏக்கரில் ‘நகுவனம்’ என்ற தோட்டக்கலைப் பண்ணையும், 5 ஏக்கரில் ‘சந்திரவனம்’ என்ற தோட்டக் கலைப் பண்ணையும் உள்ளது.

கொச்சின்

கேரள மாநிலத்தின் பெரிய அழகு நகரம், கொச்சின். கோவையில் இருந்து சுமார் 200 கி.மீ தூரத்தில் இருக்கிறது கொச்சின்.

எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கும் கொச்சினில் சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உண்டு. இந்த நகரம், ‘அரபிக்கடலின் அரசி’ என்று அழைக்கப்படுகிறது. கொச்சினின் சிறப்பே, படகுப் பயணம்தான். நமது ஊரில் பேருந்தில் செல்வதுபோல கொச்சினில் படகு வழித்தடங்கள் அதிகம்.படகுப் பயணத்தில், கொச்சின் துறைமுகப் பகுதிகளை மிக அருகில் பார்க்கலாம். நதியும் கடலும் இணையும் இடத்தில் படகு சவாரி செய்வது, திகட்டாத இன்பம் தரும். கப்பல்கள் வருவதையும் செல்வதையும் பார்க்கலாம்.

எர்ணாகுளத்தில் இருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள மட்டஞ்சேரி அரண்மனை மிகவும் புகழ்பெற்றது. இதற்கும் நீங்கள் படகிலேயே செல்லலாம். இங்கு இருக்கும் அருங்காட்சியகம், 1956-ல் அமைக்கப்பட்டது. ஒரு நாள் முழுவதும் இங்கேயே செலவிட, அற்புத விஷயங்கள் இருக்கின்றன. கொச்சி நிலப் பகுதியை ஆண்ட அரசர்களின் உருவப்படங்கள், பல்லக்குகள், உடைகள், ஆயுதங்கள், குடைகள், வாள்கள், தபால்தலைகள், நாணயங்கள், அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 1864-ம் ஆண்டிலிருந்து ஆட்சிசெய்த அரசர்களின் உருவப்படங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு காட்சிக்கு உள்ளன. இங்குள்ள சீன நாட்டின் மீன் பிடி வலைகள், பார்ப்பதற்கு வித்தியாசமாக அழகூட்டுகின்றன.

மூணார்

தமிழ்நாட்டைத் தாண்டி சுற்றுலா செல்ல விரும்புவர்களுக்கு, குளுகுளு சுற்றுலாத் தலம்தான் மூணார். மதுரையிலிருந்து சுமார் 150 கி.மீ தூரத்தில் இருக்கிறது.கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்தப் பிரதேசம், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருக்கிறது. முத்தரப்புழை, நல்லதண்ணி, குண்டலை ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் இடம் என்பதால், மூன்றாறு என்று அழைக்கப்பட்டு, மூணார் என்று ஆனது.

தென்னிந்தியாவின் மிக உயரமான ஆனைமுடி சிகரம், இங்கேதான் இருக்கிறது. இதன் உயரம் 2,695 மீட்டர். இங்கே இருக்கும் மலைப் பகுதி, ராஜமலைத் தொடர் என்று அழைக்கப்படுகிறது. இந்த மலைத் தொடரில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்க்காடு, சுற்றுலா செல்பவர்களைக் கவர்ந்து இழுக்கும். தேயிலைத் தோட்டங்கள் பசுமையான அழகை மூணாருக்கு அளிக்கிறது. அழிந்துவரும் இனமான வரையாடுகள், இந்தப் பகுதியில் அதிகம் காணப்படுகின்றன.மூணார் அருகே அவசியம் பார்க்க வேண்டிய இடம், மாட்டுப்பட்டி அணை. இந்த அணையில் ஆண்டு முழுவதும் நீர் இருப்பதால், பல காட்டு விலங்குகள் இதன் அருகில் வாழ்கின்றன. இந்த அணையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நீங்கள் ஆச்சர்யப்படும் எதிரொலி முனை (Echo point) இங்கு இருக்கிறது. நீங்கள் சொல்வது அப்படியே எதிரொலிக்கும்.மூணாரில் இருந்து 20 கி.மீ தூரத்தில் இருக்கும் குண்டலா அணையில், படகுச் சவாரி செய்துகொண்டே இயற்கை அழகை ரசிக்கலாம்.

தொகுப்பு:

வி.எஸ்.சரவணன், வீ.மாணிக்கவாசகம், ஏ.ராம்,

எம்.திலீபன், இரா.மோகன், நா.இள.அறவாழி

படங்கள்:

கே.குணசீலன், ஜெ.முருகன், உ.பாண்டி.

ஓவியங்கள்:

மகேஸ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-