அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் பெரம்பலூரில் நடந்தது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு ஊர்வலம்

தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்ட “வாக்களிக்கும் வைபோகம்’’ விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நேற்று பெரம்பலூர் பாலக்கரையிலிருந்து தொடங்கியது.

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் 2016-ல் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக கலெக்டர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் இரு சக்கர வாகனங்களில் பயணித்த வாக்காளர்கள் வாகனத்தில் மாட்டிக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வு அட்டைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

சிலம்பாட்டம்-கும்மியாட்டம்

சமூகத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் தவறாமல் தங்கள் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், நரிக்குறவர்கள், மூத்த குடிமக்கள், இளம் வாக்காளர்கள் என அனைத்து தரப்பு வாக்காளர்களும் கலந்து கொண்ட ஊர்வலத்தில் சிலம்பாட்டம், கும்மியாட்டம், கோலாட்டம் மற்றும் மாவட்ட அரசு இசைப்பள்ளியின் மங்கள இசை முழக்கம் என வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன. சாலையின் இருபுறமும் உள்ள கடைகள், உணவகங்களில் அனைவரும் ஜனநாயகத்திருவிழாவில் பங்கேற்க வலியுறுத்தி அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.

பாலக்கரையில் தொடங்கிய இந்த ஊர்வலம் வெங்கடேசபுரம், சங்குபேட்டை, காமராஜர் வளைவு வழியாக சென்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது.

விழிப்புணர்வு குறும்படங்கள்

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சிவராமன் பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்திலுள்ள தெருவோரக்கடைகளில் உள்ள வியாபாரிகளிடம் அனைவரும் வாக்காளர் திருவிழாவில் பங்கேற்று நேர்மையுடன் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அழைப்பிதழை வழங்கினார். ஊர்வலத்தின் முடிவில் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டன.

அதிகாரிகள்

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான பேபி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாவேந்தன், வட்டாட்சியர்கள் சிவா, தமிழ்ச்செல்வன், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-