அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...புதுடெல்லி : நாடு முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை விமானங்களுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பி உள்ளது. டெல்லியிலுள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் மற்றும் புறப்பட்டுச் செல்லும் விமானங்களின் இரைச்சலால், உடல்நலம் பாதிக்கிறது என விமான நிலையத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளுக்கு முன் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது.

இரைச்சல் கட்டுப்பாட்டு விதிகளை மீறும் வகையில் பெரும் ஓசை எழுப்பும் விமானங்களால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என மருத்துவமனைகளும் புகார் கூறின. பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள பாடாவதி விமானங்களால் பெரும் இரைச்சல் எழுகிறது என குற்றச்சாட்டில் கூறப்பட்டது. இந்த மனு மீதான உச்ச நீதிமன்ற விசாரணையில், ‘இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிப்பதுதான் உகந்தது. விசாரணையின்போது இடைக்காலத் தடை கோரி தீர்ப்பாயத்தை யாரும் அணுகக்கூடாது’ என கடந்த நவம்பரில் உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. தீர்ப்பாயத்தின் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையில் தீர்ப்பளித்து நீதிபதி சுதந்திர குமார் கூறியதாவது: ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியும், அரசு தரப்பில் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாதது அதிருப்தி அளிக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சகம், விமான போக்குவரத்து துறை இயக்குநர், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோர் இணைந்து ஆலோசனை மேற்கொள்ளும்படி கூறிய அறிவிப்பு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.

விமான நிலையங்களின் அருகே குடியிருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், விதிமுறைகளை கடைபிடிக்க தவறியது, சர்வதேச தரத்திற்கு இணையாக விமான நிலையங்களில் ஒலி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்தாதது ஏன் என்றும் அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். நாட்டிலுள்ள முக்கியமான விமான நிலையங்களில் இரைச்சலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தீர்ப்பாயத்துக்கு தெரிவிக்க வேண்டும். டெல்லி விமான நிலையத்தில் இரவு 10.00 முதல் காலை 6.00 மணி வரை விமானங்களுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என்பது குறித்து விளக்கம் தர வேண்டும். இதேபோல் நாடு முழுவதும் இரவு நேரத்தில் விமான போக்குவரத்து ஏன் நிறுத்தக்கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-