அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருந்தாளுனர்கள் பற்றாக்குறையால் புறநோயாளிகள், அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அரசு மருத்துவமனை

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் புறநோயாளிகள் 1,500 பேர் வந்து செல்கின்றனர். 356 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் மருந்தியல் (பார்மசி) பிரிவில் மருந்தாளுனர்கள் பற்றாக்குறையால் தினமும் மருந்து மாத்திரைகள் வாங்குவதற்கு கிராமப்புறங்களில் வரும் நோயாளிகள் நீண்ட கியூ வரிசையில் 1 மணிநேரம் காத்திருந்து மருந்துகள் வாங்கவேண்டியுள்ளது.

அரசு மருத்துவமனையில் 75 உள்நோயாளிகளுக்கு 1 மருந்தாளுனரும் (75–1) வெளிநோயாளிகளில் 100 பேருக்கு 1 மருந்தாளுனரும் (100–1) பணியில் இருக்கவேண்டும் என்பது மருத்துவத்துறையின் விதிமுறையும், வழிகாட்டு நெறிமுறையும் ஆகும். ஆனால் மருந்தியல் பிரிவில் தற்போது ஒரு தலைமை மருந்தாளுனர், ஒரு மெடிக்கல் ஸ்டோர் அலுவலர் என மொத்தம் 7 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களில் பகல்நேரம் மற்றும் இரவு நேர பரிவுகளில் பணியாற்றவேண்டியுள்ளது.

24 மணிநேரமும்

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எக்ஸ்ரே, மருத்துவ பரிசோதனை ஆய்வகம், மருந்தியல் பிரிவு ஆகியவை நோயாளிகளின் வசதிக்காக அவசியம் 24 மணிநேரமும் இயங்கவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் நந்தகுமார் உத்திரவிட்டதன் அடிப்படையில் கடந்த 2 மாதங்களாக அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட 3 பிரிவுகளும் 24 மணிநேரமும் இயங்கிவருகின்றன. இதற்கிடையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மருந்தியல் பிரிவில் ஏற்பட்டுள்ள ஆட்கள் பற்றாக்குறையை ஓரளவு சரி செய்ய வேப்பூர், கிருஷணாபுரம் அரசு மருத்துவமனைகளில் இருந்து தலா ஒருவரை டெபுடேசன் பணியில் பெரம்பலூர் மருத்துவமனையில் இருக்குமாறு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை

அதன்அடிப்படையில் ஒரு மருந்தாளுனர் வேப்பூரில் இருந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். ஆனால் கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனை மருந்தியல் பிரிவில் மருந்தாளுனர் பதவி உயர்வு பெற்று சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 8 பணியாளர்களை மட்டுமே கொண்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனை மருந்தியல் பிரிவு இயங்கிவருகிறது. இதனால் வெளிநோயாளிகள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்து நின்று மருந்து–மாத்திரைகளை வாங்கி செல்லவேண்டியுள்ளது. கிராம புறங்களில் இருந்து வந்து செல்லும் நோயாளிகள் மற்றும் டாக்டர்களின் மருத்துவ ஆலோசனையை பின்பற்றிட (பாலோ–அப்) அன்றாடம் வந்து மருந்து–மாத்திரைகளை பெற்று செல்லவேண்டி மணிக்கணக்கில் கால்கடுக்க நின்று காத்திருக்கவேண்டிய நிலையில் உள்ளனர். வயதான நோயாளிகளின் நிலை இன்னும் பரிதாபமாக உள்ளது.

கூடுதல் மருந்தாளுனர்கள் நியமிக்க வேண்டும்

மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 75:1 வீதம் 4 மருந்தாளுனர்களும், தினந்தோறும் வந்துசெல்லும் வெளிநோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 100:1 வீதம் 15 மருந்தாளுனர்களும் பணியில் இருக்கவேண்டும். இதுதவிர மாவட்ட மெடிக்கல் ஸ்டோர் பிரிவில் ஒரு சர்ஜிக்கல் மருந்தாளுனரும், 1 மெடிக்கல் மருந்தாளுனரும் பணியில் இருக்கவேண்டும். இந்த பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாமலேயே உள்ளன. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. புதிய அரசு பதவி ஏற்று அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறையை போக்குவது ஒரு புறம் இருந்தாலும், தற்போது நெருக்கடியில் இருந்துவரும் அரசு மருத்துவமனை மருந்தியல் பிரிவிற்கு தற்காலிக அடிப்படையிலாவது கூடுதல் மருந்தாளுனர்களை நியமித்திட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது நோயாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-