அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


மனித சமுதாயத்தில் பலரும் தங்களுக்கு ஆண்குழந்தைதான் வேண்டுமென விரும்புவதை பார்க்கின்றோம். மேலும், பெண்குழந்தை பிறந்து விட்டால் அதனை வெறுப்பதையும் நடைமுறையில் காண்கின்றோம்.

ஒரு தம்பதியருக்கு தொடர்ச்சியாக ஆண்குழந்தை இல்லாமல் பெண்குழந்தையாகவே பிறந்து கொண்டிருந்தால் அந்த கணவன் தன்னுடைய மனைவியை சடைந்து கொள்வதும், அந்த மணமகனுடைய உறவினர்கள் தங்கள் வீட்டு மருமகளைப்பார்த்து “இவள் உனக்கு ஆண்பிள்ளை பெற்றுத்தரமட்டாள்; நீ வேறு ஒரு திருமணம் செய்து கொள்” என்று கூறும் நிகழ்வுகளும், ஆண்பிள்ளை பெற்றுத்தராததால் மனைவியை அடித்து துவைக்கும் கணவன்மார்களையும் நாம் காண்கின்றோம்.

இத்தகையவர்களுக்கு ஒரு அடிப்படை அறிவியல் உண்மை விளங்காமலிருப்பதுதான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணமாகும். அந்த அறிவியல் உண்மையை அவர்கள் அறிந்து கொள்வார்களேயானால் அந்த கணவன்மார்களும், அவர்களுடைய உறவினர்களும் தங்களைத் தாங்களே நொந்து கொள்ள வேண்டியதுதான்.

காரணம் என்னவென்றால், ஒரு பெண் பெற்றெடுக்கக்கூடிய குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தீர்மானிப்பதில் அந்தப்பெண்ணுக்கு எந்த பங்கும் இல்லை என்றுதான் அறிவியல் உலகம் கூறுகின்றது. அந்தப்பெண் ஆண்குழந்தையை பெற்றெடுப்பதற்கும், பெண்குழந்தையை பெற்றெடுப்பதற்கும், ஆணிணுடைய விந்தணுவில் உள்ள குரோமோசோம்கள்தான் காரணம் என்பதை இன்றைய அறிவியல் உலகம் தெளிவுபடுத்துகின்றது.

கரு உருவாவது எப்படி?

ஒரு கரு உருவாவதற்கு ஆணின் உயிரணுவும், பெண்ணின் சினை முட்டையும் இணைய வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து வைத்துள்ளோம். இவ்வாறு ஒரு கரு உருவாவதற்கு மொத்தம் 46 குரோமோசோம்கள் தேவை. அந்த 46 குரோமோசோம்களில் 23 குரோமோசோம்கள் ஆணுடையதும், 23 குரோமோசோம்கள் பெண்ணுடையதுமாகும்.

இந்த 46 குரோமோசோம்களில் ஆணுடைய 22 குரோமோசோம்களும், பெண்ணுடைய 22 குரோமோசோம்களும், ஆக மொத்தம் 44 குரோமோசோம்களும் ஒரே போன்று ஒத்ததாகத்தான் அமைந்துள்ளன. கடைசி இரண்டு குரோமோசோம்கள்தான் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தீர்மானிக்கின்றது.

X மற்றும் Y என்று இரண்டு பிரிவுகளாகவுள்ள குரோமோசோம்களில் பெண்ணிடத்தில் வெறும் X குரோமோசோம்கள் மட்டும்தான் உள்ளது. ஆண்களிடத்தில்தான் X மற்றும் Y என்று இரண்டு வகையான குரோமோசோம்களும் உள்ளன.

இப்போது ஆண்குழந்தை பிறப்பதாக இருந்தால்,
ஆணின் உயிரணுவிலுள்ள Y குரோமோசோமும், பெண்ணிடத்திலுள்ள X குரோமோசோமும், இணையுமானால் குழந்தை ஆண்குழந்தையாக பிறக்கின்றது.

இப்போது பெண்குழந்தை பிறப்பதாக இருந்தால், ஆணின் உயிரணுவிலுள்ள X குரோமோசோமும், பெண்ணிடத்திலுள்ள X குரோமோசோமும், இணையுமானால் குழந்தை பெண்குழந்தையாக பிறக்கின்றது.

ஆக அறிவியலின் கூற்றுப்படி ஆணுடைய உயிரணுவிலிருந்து X குரோமோசோம் செல்லுமேயானால், அது பெண்குழந்தை.
Y குரோமோசோம் செல்லுமேயானால், அது ஆண்குழந்தை.

இப்போது சொல்லுங்கள் குழந்தை ஆணாகவும், பெண்ணாகவும் பிறக்க யார் காரணமென்று?.
இந்த உண்மை தெரியாமல்தான் ஆண்குழந்தை பிறக்கவில்லை எனவே நான் வேறு ஒரு திருமணம் செய்யப்போகின்றேன் என்று நடக்கும் கூத்துக்களும், ஆண்குழந்தை வேண்டுமென்றால் பெண்கள் அதிகமாக வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்று மூடநம்பிக்கைகளும் இந்த கணிணிகாலத்திலும் மலிந்து கிடக்கின்றன.

இந்த அளவுக்கு அறிவியல் அறிவு அதிகமாக உள்ள காலகட்டத்திலேயே நமக்குத் தெரியாத அறிவியல் உண்மையை இறைவனின் இறுதி வேதமாம் திருக்குர்-ஆன் தெள்ளத்தெளிவாக கூறிக்காட்டுகின்றது. அல்லாஹ் கூறுகின்றன்:
அவன் செலுத்தப்படும் விந்தின் சிறு துளியாக இருக்கவில்லையா?

பின்னர் கருவுற்ற சினை முட்டையானான்.365 பின்னர் (இறைவன்) படைத்துச் சீராக்கினான்.
அவனிலிருந்து ஆண் பெண் என ஜோடியை ஏற்படுத்தினான்.
அல்குர்-ஆன் 75 : 37

மேற்கண்ட வசனத்தில் விந்தாக இருந்து கருமுட்டையாக மனிதன் உருவாவதைப்பற்றி சொல்லிக்காட்டும் திருமறை அவனிலிருந்து அதாவது அந்த ஆணிலிருந்து ஆண், அல்லது பெண் என்ற ஜோடியை ஏற்படுத்துவதாக சொல்லிக்காட்டுகின்றது.

இதிலிருந்து இப்போது மருத்துவ நிபுணர்கள் பல்வேறு ஆராய்ச்சிக்குப் பிறகு சொல்லும் இந்த அறிவியல் உன்மையை திருக்குர்-ஆன் 1400ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருப்பதை நாம் அறிகின்றோம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-