அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே காவிரி குடிநீர் வழங்கப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மக்கள் தொகை உயர்வு

பெரம்பலூர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. பெரம்பலூர் நகரின் மக்கள் தொகை 60ஆயிரத்தில் இருந்து ஒன்றரை லட்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் 1.3 லட்சம் முதல் 1.5 லட்சம் வரை உயர்ந்துள்ளது.

கிராமப்புறங்களில் இருந்தும், சுற்றப்புற மாவட்டங்களில் இருந்தும் தொழில், வியாபாரம் மற்றும் தங்களது குழந்தைகளின் கல்விக்காக பெரம்பலூர் நகருக்கு குடியேறி வருபவர்களின் எண்ணிக்கை பெருகி விட்டதால் மக்கள் தொகை கடந்த 3 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்து விட்டது.

வாரம் இருமுறை குடிநீர் வினியோகம்

முற்றிலும் ஏரிப்பாசனத்தை நம்பி உள்ள பெரம்பலூருக்கு டோல்கேட் அருகே தாளக்குடியில் இருந்து கொள்ளிடத்தில் இருந்து குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் உப்புஓடையில் 3 குடிநீர் கிணறுகள், ஆலம்பாடியில் கோனேரி ஆற்று ஓடையில் 2 குடிநீர் கிணறுகள், நகரின் நடுவே உள்ள தெப்பக்குளத்தில் 2 குடிநீர் கிணறுகள் மூலம் தெருக்குழாய்களில் வாரம் இருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பெரும்பாலான மக்கள் தெருக்குழாய் நீரை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தினர் வாரம் ஒரு முறை மட்டுமே காவிரி குடிநீர் வழங்கி வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 2,020 மக்கள் தொகைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட காவிரி கொள்ளிட குடிநீர் திட்டத்தில் குடிநீர் போதிய அளவு வழங்கமுடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.

135 லிட்டர் தண்ணீர்

பெரம்பலூரில் கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்து ஏரி, குளங்கள் நிரம்பி இருந்தாலும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பொதுமக்கள் காவிரி கொள்ளிட குடிநீர் திட்டத்தையே முழுமையாக நம்பி உள்ளனர். நபர் ஒன்றுக்கு தினமும் 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட வேண்டும். ஆனால் காவிரி கொள்ளிடக்குடிநீர் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே நகராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்படுகிறது.

அப்படி வினியோகம் செய்யப்படும் குடிநீர் எந்த நேரத்திற்கு வரும் என்று தெரிவதில்லை. இதனால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனிடையே பெரம்பலூரில் விரிவாக்க பகுதிகளுக்கும், நகரில் உள்ள சில குடியிருப்பு பகுதிகளுக்கும் காவிரி குடிநீர் இணைப்பு வழங்கப்படாமலேயே உள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் மற்றும் பெரம்பலூர் ஒன்றிய பகுதிகளில் கொள்ளிடக்குடிநீர் திட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது. பெரம்பலூர் நகரில் மட்டுமே குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. பற்றாக்குறையை போக்கிட அரியலூர் மாவட்டம் திருமழப்பாடியில் கொள்ளிடத்தில் கிணறுஅமைத்து குழாய்கள் மூலம் பெரம்பலூர் நகருக்கு குடிநீர் கொண்டுவரும் ரூ.82 கோடி மதிப்பிலான சிறப்பு திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பரிசீலனையில் உள்ளது. அடுத்த ஆட்சி அமைந்த பிறகே இந்த திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு கிடைக்கும். இந்த திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றினால் தான் பெரம்பலூர் நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யமுடியும். பெரம்பலூர் பக்கத்து மாவட்டத்தின் தலைநகரான அரியலூரில் ஒரு நாளைக்கு இருவேளை கொள்ளிடக்குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுவருகிறது. எனவே பெரம்பலூரில் தினமும் குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நகர பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-