அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


திட்டக்குடி: ராமநத்தம் அடுத்த கீழக்கல்பூண்டி, திருவாலந்துறை இடையே வெள்ளாற்றின் குறுக்கே தரைப் பாலம் அமைக்க வேண்டும் என கடலூர், பெரம்பலூர் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடலூர் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான கீழக்கல்பூண்டி, வடகராம்பூண்டி, ஆலத்தூர், வி.சித்தூர், கண்டமத்தான், புலிகரம்பலூர் உள்ளிட் ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள திருவாலந்துறை, பசும்பலூர், பேரையூர், வி.களத்தூர், வண்ணாரம்பூண்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் திருவாலந்துறை, கீழக்கல் பூண்டி வழியாக அத்தியாவசிய மற்றும் விளைபொருட்களை கொண்டு செல்ல வெள்ளாற்றின் குறுக்கே சென்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கடலூர் மாவட்ட எல்லையிலும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட எல்லையிலும் விளைநிலங்களும் உள்ளன. பயிர் செய்யவும், அறுவடை செய்யவும், விளை பொருட்களை வீட்டிற்கு எடுத்துச்செல்லவும் வெள்ளாற்றின் குறுக்கே செல்ல வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர். மேலும் திருவாலந்துறையில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவிலில் கடலூர் மாவட்ட மக்கள் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்தி வருகின்றனர். இரு மாவட்ட எல்லையோர கிராம மக்களிடையே உறவுகள் அதிகளவில் உள்ளதால் இருதரப்பினரும் ஆற்றின் வழியாக தினசரி ஏரானமானோர் வந்து செல்கின்றனர். மழைக்காலங்களில் இந்த போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் விவசாயிகள் எதிர் கரையிலுள்ள தங்கள் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் விளை பொருட்கள் வீணாகும் அவலநிலையும் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். எனவே இரு மாவட்ட கரையோர கிராம விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி கீழக்கல்பூண்டி, திருவாலந்துறை கிராமங்களின் இடையே வெள்ளாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-