அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

* மின்வெட்டு, இன்டர்நெட் சென்டர் இல்லாமை
* வெகுதூரத்தில் சேவை மையங்கள்

சென்னை : இன்ஜினியரிங் படிப்பில் சேர ஆன்லைன் மூலமாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதால் நகர, கிராமபுற மாணவர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். காரணம் மின்வெட்டு, இன்டர்நெட் சேவை மையங்கள் குறைவு, பஸ் வசதி குறைவு மற்றும் சேவை மையங்கள் வெகுதொலைவில் இருப்பது போன்ற காரணங்களால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார், சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான சேர்க்கை ஒற்றை சாளர முறையில் வழக்கம் போல் அண்ணா பல்கலைகழகம் மூலம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்ஜினியரிங் படிப்புக்கு இந்த முறை இணையதளம் (ஆன்லைன்) மூலமாகதான் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப படிவங்கள் வாங்கி பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கேட்பதற்கு எளிதாக தெரியும் இந்த புதிய முறையால் கிராமபுற மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கம்ப்யூட்டர் வசதி குறைவு: தமிழகத்தில் எல்லோரது வீட்டிலும் கம்ப்யூட்டர் கிடையாது. இருப்பவர்கள் வீட்டிலும் இணைய இணைப்பு வசதி இல்லை. இந்த நிலையில் இன்ஜினியரிங் கலந்தாய்வில் கலந்துக் கொள்ள விண்ணப்பிக்க வேண்டும் என்றால் தனியார் இணைய மையங்களை நாட வேண்டியுள்ளது.

கட்டணம் அதிகம்.. க்யூவும் அதிகம்: தனியார் மையங்களில் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய குறைந்தது 100 ரூபாய் வாங்குகின்றனர். புகைப்படங்களை நகலெடுக்க தனிக் கட்டணம். அதேபோல் விண்ணப்பத்துடன் பொதுபிரிவினர் 500 ரூபாயும், தாழ்த்தப்பட்டவர்கள் 250 ரூபாயும் கட்டணமாக செலுத்த வங்கிகளை நாடினால் கட்டணத்துடன் கூடுதலாக தரகு கட்டணம் 45 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் ஒரு சென்டரில் ஒருவரே இருப்பதாலும் அவருக்கு இதில் அனுபவம் குறைவு என்பதாலும் ஒருவர் விண்ணப்பிக்க பல மணிநேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. வெறும் 12 ரூபாயில் கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும் என்றால் கிரடிட், டெபிட் கார்டு வைத்திருக்க வேண்டும். அல்லது வங்கிக் கணக்கிற்கு இணைய பயன்பாட்டு வசதி இருக்க வேண்டும். இதெல்லாம் கிராமபுற மக்களுக்கு மட்டுமல்ல, நகர்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கும் தொல்லைதான் என்று தகவல் பரவியது.

ஈ மொய்க்கும் ஈ சேவை மையங்கள்: தமிழக அரசின் ஈ சேவை மையங்கள் மூலம் பணம் செலுத்தலாம் என்று பல்கலைக்கழக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2 நாட்களில் தமிழகத்தில் உள்ள பல ஈ சேவை மையங்களில் ஆட்கள் இல்லாமல் இருக்கின்றனர். கேட்டால் தேர்தல் பணிக்காக சென்றுள்ளனர் என்கிறார்கள். அதனால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.இத்தனையும் சமாளித்து இணையத்தில் விண்ணப்பித்து விட்டாலும் பிரச்னை முடியாது. மேலும் ஈ சேவை மையங்கள் விடுமுறை காலங்களில் இயங்குவதில்லை. அரசு மருத்துவமனைப் போல இங்கும் இழுத்தடிப்பு வேலைகள்தான் நடக்கிறது. மேலும் ஒரு பகுதியில் ஒரு ஈ சேவை மையம் இருப்பதால் பலரும் இங்கே வருவதால் ஒரு மாணவன் ஒரு நாள் இங்கேயே முடங்கிக் கிடக்க வேண்டி உள்ளது.

ஒன்றுக்கு இரண்டு வேலை: இணையத்தில் விண்ணப்பித்ததை அச்செடுத்து, அத்துடன் விண்ணப்பக் கட்டணத்திற்கான வரைவோலை, 10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் உட்பட 10 வகையாக சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பொறியியல் சேர்க்கை மையத்திற்கு நேரிடையாகவோ, அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
இணையதளம் மூலமாக விண்ணப்பித்தாலும், அதனை அச்செடுத்து , நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்றால் இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பதால் மாணவர்களுக்கு என்ன பலன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 59 மையங்கள் மூலம் பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. அப்போது விண்ணப்பக்கட்டணம் 500 ரூபாய். இப்போதும் விண்ணப்பக்கட்டணம் 500 ரூபாய். கூடவே வரைவோலை(டிடி) எடுக்க 45 ரூபாய். இது தவிர தனியார் இணைய மையங்கள் மூலம் விண்ணப்பிக்க 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள்். அதன்பிறகு விண்ணப்பபடிவத்தை அச்செடுக்க கட்டணம் குறைந்தபட்சம் 50 ரூபாய். பஸ் கட்டணம், பெண் பிள்ளைகளாக இருந்தால் அன்று அவரின் தந்தையின் தினசரி கூலி காலி என்று ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதால் மாணவர்களுக்கு பல மடங்கு செலவு. அலைச்சல்.

மின்வெட்டு: மேலும், கிராமங்கள், பேரூராட்சி மற்றும் நகர்புறங்களில் எப்போது மின்சாரம் போகும் எப்போது வரும் என்று தெரியாத நிலை. இந்தப் பகுதியில் உள்ள இன்டர்நெட் சென்டர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு. எனவே, இன்டர்நெட்சென்டர்களை தேடி அலைந்து திரிய வேண்டி இருக்கிறது. அப்படியே ெசன்றாலும் அந்த மையத்தின் ஸ்பீடு குறைவாக இருப்பதால் வெகு நேரமாகிறது. எனவே, காலத்திற்கு ஏற்ப விண்ணப்பிக்கும் முறையிலும் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவது வரவேற்க தகுந்ததுதான். ஆனால் அது ஏழை, எளிய, கிராமபுற மக்களை பாதிப்பதாக இருக்கக்கூடாது. ஆனால் இங்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் வசதியை மட்டும் கருத்தில் கொண்டு ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தியள்ளனர். இதன் மூலம் பல்கலைக்கழகத்திற்கு பணிச்சுமை குறையும். மாணவர்களுக்கு அவதி.

மருத்துவதுறை எஸ்கேப்

மருத்துவ படிப்பிற்கான சேர்க்கைக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அமல்படுத்த மாட்ேடாம். அதனால் கிராமபுற மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு 1.19 லட்சம் இடங்களுக்கு ஆள் இல்லை

கடந்த ஆண்டு மொத்தமிருந்த 2,88,681 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 1,79,796 இடங்கள் மட்டுமே நிரப்பின. மீதியிருந்த சுமார் 42 சதவீத இடங்கள் அதாவது 1,18,887 இடங்கள் காலியாக இருந்தன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-