அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாயில் கடலுக்கு அடியில் சொகுசு வீடுகள் தயாராகி வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு குடியேறலாம்.


துபாய்:

துபாயில் உலகின் மிகப்பெரிய கட்டிடம், வணிக வளாகம் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரீச்சை மரம் வடிவிலான தீவுகள் போன்ற உலகின் மிகச்சிறந்த இடங்கள் உள்ளன. இதன் காரணமாக துபாய்க்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மக்கள் நிலத்தில் உள்ள வீடுகளில் மட்டுமல்லாமல் இனி கடலுக்கு அடியில் தங்கும் வகையில், பிரமிக்கத்தக்க அளவில் சொகுசு வீடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

துபாயை சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்று கடலுக்கு அடியில் மக்கள் தங்கக்கூடிய வகையில் சொகுசு வீடுகளை உருவாக்கி வருகிறது. இந்த வீட்டில் மக்கள் தங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. மீன்கள் சுற்றி வலம் வரக்கூடிய சூழலில் கடலுக்கு அடியில் உள்ள வீட்டில் தங்கி மகிழலாம்.

இதுகுறித்து அந்த கட்டுமான நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

இந்த சொகுசு வீடுகள், துபாய் கடல்பகுதியில் அலைகள் இல்லாத பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வீட்டின் மேல் பகுதி கடல் மட்டத்தில் இருந்து வெளியே இருக்கும். வீட்டின் உள்பகுதி கடலுக்கு அடியில் இருக்கும். இந்த வீட்டுக்குள் சென்றால் நீர்மூழ்கி கப்பலில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

இந்த வீட்டுக்கு படகு மூலம் செல்லவேண்டும். படகில் இருந்து இறங்கி வீட்டின் மேல் பகுதி வழியாக உள்ளே சென்றால் பிரமிக்க வைக்கும் உள்பகுதியை காண முடியும். மேல்புறத்தில் இருந்து அடிப்பகுதிக்கு செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த சொகுசு வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் கடலுக்கு அடியில் வசிப்பது போல் இருக்கும். வீட்டில் இருந்தபடியே வண்ண மீன்களை பார்த்து மகிழ்ச்சி அடையலாம். மேலும் அந்த வீட்டுக்குள்ளேயே மீன்களை வளர்க்கும் வசதியும் உள்ளது. இந்த வீடுகளில் படகு போல் என்ஜின் இருக்காது. அடுப்பறை, விளையாட்டு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கும். இந்த வீடுகளை கடலுக்கு அடியில் அமைந்துள்ள சொகுசு வீடு என அழைக்கலாம்.

4 படுக்கை அறைகள் கொண்ட 4,004 சதுர அடி கொண்ட இந்த வீடு ஒன்றின் விலை 12 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 கோடியே 68 லட்சம்) ஆகும். ஏற்கனவே 60 வீடுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

இந்த வீடுகள் கட்டி முடிந்ததும் விரைவில் அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். முதற்கட்டமாக 50 வீடுகள் வரும் அக்டோபர் மாதம் ஒப்படைக்கப்படும். இந்த வீடுகளின் உரிமையாளர்கள் 2017-ம் ஆண்டில் கடலுக்கு அடியில் அமையும் சொகுசு வீட்டில் குடியேறலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வீடுகளை வாங்க முடியாதவர்களுக்கு வாடகைக்கு வழங்கவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பொதுமக்களின் ஆர்வத்தை பொறுத்து 10 ஆயிரம் திர்ஹாம் முதல் 25 ஆயிரம் திர்ஹாம் வரை தினசரி வாடகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புதுமையான விஷயங்களை செய்வதில் துபாய் எப்பொழுதும் முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-