அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவுதி அரேபியா நாட்டுக்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இங்குள்ள இந்திய தொழிலாளர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அப்போது, அவர்களிடையே பேசிய பிரதமர், ‘உங்கள் குடும்பத்தில் நானும் ஒரு அங்கம்’ என நெகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டார்.
ரியாத்:

சவுதி அரேபியாவில் சுமார் 30 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர் உடலுழைப்பை மட்டுமே நம்பி கூலி தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். இந்நிலையில், அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறைப் பயணமாக நேற்று சவுதி அரேபியாவுக்கு வந்தார்.

தலைநகர் ரியாதில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்யும் இந்திய தொழிலாளர்களின் வசிப்பிடத்துக்கு சென்ற மோடி, அங்கு அவர்களிடையே உரையாற்றினார்.

இன்று உலகளாவிய அளவில் தேவைப்படும் மனித ஆற்றலை வழங்கக்கூடிய நாடாக இந்தியா திகழ்வதாக பெருமையுடன் குறிப்பிட்ட பிரதமர் மோடி, சவுதி அரேபியாவின் உள்கட்டமைப்புக்கு இந்திய தொழிலாளர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பை பெரிதும் பாராட்டினார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ள ‘மதத்’ என்னும் இணையதளத்தின் மூலம் வெளிநாடுகளில் வாழும் இந்திய தொழிலாளர்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று கூறிய அவர், இந்த இணையதளத்தின் மூலம் உங்கள் குரல் என்னை வந்து சேரும். இந்தியர்கள் துன்பப்படும் வேளையில் நாங்கள் உடனடியாக உதவிக்கு வருவோம் எனவும் குறிப்பிட்டார்.

உங்களது அயராத கடின உழைப்பும், இங்கு நீங்கள் சிந்தும் வியர்வைத் துளிகளும்தான் என்னை இங்கு வரவழைத்தது. உங்கள் கடின உழைப்பும், வியர்வையும்தான் இந்தியாவின் பெருமிதம். உங்களது நம்பிக்கை, எதிர்பார்ப்பு, மன வருத்தம் ஆகியவற்றை குறிப்பிட்டு உங்களில் பலரும், உங்கள் குடும்பங்களை சேர்ந்தவர்களும் எனக்கு கடிதம் எழுதியதுண்டு. அன்பு சகோதரர்களே..! உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே நான் உணர்கிறேன் என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பின்னர், இந்திய தொழிலாளர்களுடன் அமர்ந்து அவர் உணவு அருந்தினார். பிரதமர் தங்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டதை எண்ணி நெகிழ்ந்துப்போன சில இந்திய தொழிலாளர்கள், அவரது எளிமையை வியந்து, பாராட்டினர். இந்தநாள் எங்களது வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு நன்னாள் என சில தொழிலாளர்கள் பூரிப்புடன் கூறினர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-