அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 

 

புதுடெல்லி : அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, 2 நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றடைந்தார் பிரதமர் மோடி. மூன்று நாடுகள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து தனது பயணத்தின் இறுதிக்கட்டமாக நேற்று அவர் சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு சென்றடைந்தார். இன்று பிரதமர் மோடி, சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத்தை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது, தீவிரவாதத்தை எதிர்கொள்வது, வர்த்தகம், அணு ஆற்றல் உள்ளிட்ட விவகாரங்களில் இருநாட்டு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சவுதியிடம், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் மேற்கொள்ளும் நாச வேலைகள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியாத்தில் முதல் நிகழ்ச்சியாக, அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் மோடி நேற்று உரையாற்றினார். அப்போது, உலக பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்த நிலையிலும், இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து சவுதியின் முன்னணி நிறுவன சிஇஓக்கள், இந்திய தொழில்முனைவோர் கூட்டத்திலும் மோடி உரையாற்ற உள்ளார்.

அணுசக்தி பாதுகாப்பில் இந்தியாவின் செயல்பாடு

அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டின் கடைசி நாளில், 50 நாடுகளின் தலைவர்கள் முன் உரையாற்றிய பிரதமர் மோடி, அணுசக்தி பாதுகாப்பில் இந்தியாவின் செயல்பாடு குறித்து விளக்கம் அளித்தார். அணு ஆயுத பரவல் தடுப்பு, அணுசக்தி கொள்ளை தடுப்பு, அணுசக்தி தீவிரவாதத்தை தொழில்நுட்ப உதவியுடன் முறியடிப்பது உள்ளிட்டவற்றில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து அவர் தெரிவித்தார். அணுசக்தி பாதுகாப்புக்கு இந்தியா தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என்றும் மோடி உறுதி அளித்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-