அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அடித்த திடீர் பல்டியைப் பற்றியும், தமீமுல் அன்சாரி திடீரென்று பாசம் பொங்கி அம்மாவை ஆதரிக்க முன்வந்ததைப் பற்றியும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அரசியல் என்ற களத்தில் குதித்த பிறகு அவரவர்கள் தங்களுடைய சுயநலனுக்காகவும், தன் கட்சியை வளர்க்க வேண்டியும், எக்கேடு கெட்டாவது ஆதாயம் தேட முற்படுவது என்பது எழுதப்படாத அரசியல் இலக்கணமாகி விட்டது.

இதில் சமுதாய நலன் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் என்பதை எல்லோரும் அறிவர். “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பதுதான் அரசியல்வாதிகளின் நோக்கம்.


ஜெயலலிதா ஜவாஹிருல்லாஹ்வை பழிவாங்குவதற்காகவே தமீமுல் அன்சாரிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கி இருக்கிறார் என்பது வெள்ளிடமலை. இது சிறுபான்மை முஸ்லீம்களின் நலனை மனதில் கொண்டு கொடுக்கப்பட்ட இடங்கள் என்று கருத முடியாது.

“எதிருக்கு எதிரி நண்பன்” என்ற பழமொழிக்கிணங்க ஜெயலலிதா புரிந்திருக்கும் இந்த அரசியல் திருவிளையாடல் ஒன்றும் புதிதல்லவே..! ஏற்கனவே கலைஞர் செய்ததைத்தான் இவரும் செய்திருக்கிறார்.

பாரம்பரிய வரலாற்றுடன் இருந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கை சின்னாபின்னமாக்கி இரண்டாக பிளவு செய்த வரலாற்றை முஸ்லீம்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டார்கள்.

அப்துல் லத்தீப் சாஹிபுக்கு ஐந்து சீட்டை ஒதுக்கி அவரை கைத்தூக்கிவிட்டு இந்திய யூனியன் முஸ்லீம் லீகை படிப்படியாக மங்கச் செய்த பெருமை யாருக்குச் சேரும் என்பதை நாம் அறிவோம்.

இந்த அரசியல் சதுரங்க விளையாட்டில் SDPI போன்ற கட்சிகள் அரசியல் சூட்சமங்களை புரிந்துக் கொள்ளாதவர்களாக ஆகிவிட்டார்களே என்பதை நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது.

அரசியல் என்று வந்துவிட்டால் கொள்கை, குறிக்கோள் இவைகளை காற்றில் பறக்கவிட்டு சந்தர்ப்பவாதம் எனும் சாணக்கிய தத்துவத்தில் இவர்கள் ஐக்கியம் ஆகிவிடுகிறார்கள் என்பதே யதார்த்தம்.
இதில் பேரா,ஜவாஹிருல்லாஹ்வையோ அல்லது தமீமுல் அன்சாரியையோ குறை சொல்வதில் ஒரு பலனும் கிட்டப்போவதில்லை.

எது எப்படியோ… காயிதே மில்லத் காலத்தில் ஒன்றிணைந்த மாபெரும் சக்தியாக இருந்த முஸ்லிம் சமுதாயம் இப்போது எண்ணற்ற பிரிவுகளாக பிளவுபட்டு நிற்பது நம் துர்பாக்கியம்.
அப்துல் கையூம்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-