அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
தேர்தலில் பணியாற்றும் காவல்துறை அலுவலர்களுக்கான மேலாண்மை பயிற்சி வகுப்பு பெரம்பலூர் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

பயிற்சி வகுப்பு

தேர்தலில் பணியாற்றும் காவல்துறை அலுவலர்களுக்கான மேலாண்மை பயிற்சி வகுப்பு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

நடைபெறவுள்ள சட்டமன்றத்தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்திட காவல்துறையினர் பங்கு மிகவும் அளப்பரியது. எனவே தேர்தலில் பணியாற்ற உள்ள காவல்துறையினருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த தகவல்கள் தெரிந்திருப்பது மிகவும் அவசியமாகும். எனவேதான் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

வாகனங்கள் பறிமுதல்

வேட்புமனு தாக்கலின்போது மனுதாக்கல் செய்யவரும் வேட்பாளர்களுடன் வேட்புமனு நடைபெறும் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் பகுதிக்குள் மூன்று வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தரும் வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்களை மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் அனுமதிக்க வேண்டும். அவ்வாறு வருகைதரும் பொழுது ஒலிப்பெருக்கி, பிரசாரம் உள்ளிட்டவைகளை காவல் துறையினர் அனுமதிக்கக்கூடாது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை தேர்தல் முடியும் வரை விடுவிக்கக்கூடாது.

கண்காணிப்பு கேமரா

வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் வாகனங்கள் செல்வதையும், அரசியல் கட்சியினரால் சுவரொட்டிகள், பேனர் வைத்தல் உள்ளிட்ட தேர்தல் விளம்பரங்களையும், 100 மீட்டர் தொலைவிற்குள் அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்வதை தடுத்திட காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நாளன்று வாகனங்களின் நடமாட்டம், மதுவிற்பனைகளை தடை செய்வது, தொழிலாளிகளுக்கு விடுமுறையினை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும். வாக்குப் பதிவிற்கு பின் வாக்குப்பதிவு எந்திரங்களை மண்டல அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, அவைகளை பாதுகாப்புடன் எடுத்துச்சென்று சேகரிப்பு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அறைக்கு கண்காணிப்பு கேமராவுடன் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள்

இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) மாரிமுத்து, கீதா (தேர்தல்), கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவக்குமார், தனி துணைகலெக்டர் சிவப்பிரியா மற்றும் வட்டாட்சியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-