அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
வேப்பந்தட்டை அருகே ஆசிரியர் திட்டியதாக கூறி கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கல்லூரி பஸ்சை மறித்து உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

கல்லூரி மாணவி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகள் சீதா (வயது 20). இவர் பெரம்பலூர் தண்ணீர் பந்தலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரியில் பருவ தேர்வு எழுதும் மாணவ–மாணவியர்களில் முழுமையாக கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தியவர்களுக்கு கடந்த வாரம் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.

அப்போது சீதா கட்டணம் செலுத்தாததால் ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை எனவும், ஏன் பணம் கட்டாமல் இருக்கிறாய் என ஆசிரியர் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சீதா பருத்தி செடிக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வாயில் நுரைத்தள்ளியவாறு வீட்டில் கிடந்துள்ளார். உடனடியாக சீதாவை அவரது குடும்பத்தினர்கள் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பஸ்சை மறித்து போராட்டம்

பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சீதாவிற்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது உறவினர்கள் நேற்று காலை பசும்பலூருக்கு மாணவர்களை ஏற்றுவதற்காக வந்த கல்லூரி பஸ்சை வழிமறித்து மாணவியை திட்டிய கல்லூரி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கல்லூரி நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-