அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...






’கடலில் குளித்த கல்லூரி மாணவர்களை அலை இழுத்துச் சென்றது’, 'ஆக்ரோஷ அலைக்கு சுற்றுலாப் பயணிகள் பலி’ என்று கடல் விபத்துகள் தொடர்கதையாக இருக்கின்றன. ''என்னதான் அரசாங்கமும், காவல்துறையும் அக்கறையுடன் செயல்பட்டாலும்... அறியாமை, சாகசம் போன்ற காரணங்களால் உயிரிழக்கிறார்கள் பலர்'' என்று வேதனைப்படும் கடல் ஆராய்ச்சியாளர் முனைவர் சந்திரமோகன், கடலின் ஆபத்தான இயல்பையும், கடலில் குளிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பட்டியலிட்டார்.

கிணறு, ஆறு, குளங்களில் அடிப்பது போல அல்ல கடல் நீச்சல். உள்ளிழுக்கும் கடல் அலையின் தாக்கம், அதன் உயரத்தையும், வேகத்தையும் பொறுத்து மாறுபடும். நீச்சல் திறமைசாலிகள்கூட இங்கு கரை சேர முடியாது.

ஒவ்வொரு கடலும் ஒவ்வொரு இயல்பில் இருக்கும். உதாரணமாக, திருச்செந்தூரில் கரையிலிருந்து 1 கி.மீ தூரத்துக்கு முன்பே அலைகளை பாறைகள் தடுத்து நிறுத்திவிடுவதால், அலைகளின் வேகம் குறைவு. இதனால் இதை 'பாதுகாப்பான கடல்பகுதி’ என்று சொல்லலாம். இதுவே சென்னை, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் அலை ஆக்ரோஷமாக இருக்கும் என்பதால், இவை 'ஆபத்தான கடல்பகுதி’கள்.

கடல் குளியலை சாகசமாக்க நினைப்பது, மற்றவர்கள் முன்னிலையில் பந்தா செய்வது, ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு ஆழத்துக்குச் செல்வதெல்லாம் உயிர் பறிக்கவல்ல ஆபத்துகள்.

கடலில் குளிக்க ஆசைப்படுபவர்கள், குறைந்தபட்ச விலையாக ஆயிரம் ரூபாயிலிருந்து கிடைக்கும் 'லைஃப் பாய்’ (காற்று நிரப்பிய டியூப்), இரண்டாயிரம் ரூபாயிலிருந்து கிடைக்கும் 'லைஃப் ஜாக்கெட்’ போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

கடலில் குளிக்க காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை பாதுகாப்பான நேரம். அமாவாசை, பௌர்ணமி தினம் மற்றும் அதற்கு முன், பின் இரண்டு நாட்களில் அலையானது அதிக ஆக்ரோஷத்துடன் கரையைத் தாக்கும் அல்லது உள்வாங்கும். எனவே, இந்த நாட்களிலும், மற்றும் காற்று அதிகமாக வீசும்போதும், மழை பொழிகிற போதும் கடல் பக்கம் செல்ல வேண்டாம்.

சென்னை மெரீனா கடற்கரையில் மட்டும் ஆண்டுக்கு 50-க்கும் மேலானோர் கடல் அலையில் சிக்கி இறந்து போகிறார்கள். இந்தக் கடற்கரையைப் பொறுத்தவரை, வடகிழக்குப் பருவக்காற்று வீசும் அக்டோபர் முதல் ஜனவரி மாதங்களில் கடல் அலை ஆக்ரோஷமாக இருக்கும். தென்மேற்குப் பருவக்காற்று வீசும் மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை சில நாட்கள் சாதாரணமாகவும், சில நாட்கள் வேகம் அதிகரித்தும் காணப்படும். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பெரும்பாலும் அலையின் உயரம் குறைவாகவும், ஆக்ரோஷம் இல்லாமலும் காணப்படும் உயிரின் மதிப்பை நீங்களும் அறிந்தவரெனில் அதிகம் பகிருங்கள்,
கட்டாயம் இந்த பதிவு பல உயிர்களை காப்பாற்றும் என்பதில் சந்தேகமில்லை-

#‎உயிர்காக்க_உதவுங்கள்_அதிகம்_பகிருங்கள்‬

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-