அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சந்தேகத்திற்குரிய வரவு, செலவுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவித்து விசாரணை செய்ய வேண்டும் என்று தேர்தல் சிறப்பு போலீஸ் பார்வையாளர் ஆனந்த் கூறினார்.

ஆய்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகள் குறித்து கண்காணிப்பதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் தேர்தல் சிறப்பு போலீஸ் பார்வையாளராக ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சட்டமன்றத்தேர்தலை நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் நடத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. சிறப்பு போலீஸ் பார்வையாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் நந்த குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் நந்தகுமார் பேசுகையில்:-

நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும், 100 சதவீதம் நேர்மையான வாக்குப்பதிவை நடத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படை, தீவிர கண்காணிப்புக்குழு, தேர்தல் செலவின கண்காணிப்புக்குழு, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு, தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் குழு, வாக்குச்சாவடி அளவிலான விழிப்புணர்வுக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும், பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கூறினார்.

தேர்தலை நேர்மையாக நடத்திட வேண்டும்

அதனை தொடர்ந்து போலீஸ் பார்வையாளர் ஆனந்த் பேசியதாவது:-

நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தேர்தலை நேர்மையாக நடத்திட வேண்டும். மேலும் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு வேட்பாளர்கள் எவரேனும் தேர்தல் விதிமுறை மீறல்களில் ஈடுபடுகின்றனரா என்பதை தீவிரமாக கண்காணித்திட வேண்டும். வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் அதிக அளவில் பணம் வரவு செலவு ஆகின்றதா என்று வங்கியாளர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய வரவு செலவுகள் குறித்து உடனடியாக மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவித்து, உரிய விசாரணை செய்ய வேண்டும்.

பாகுபாடின்றி சோதனை

டாஸ்மாக் குடோன்களில் இருந்து சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள், கடைகளை சென்றடைவதற்கு ஆகும் நேரம் கண்காணிக்கப்படவேண்டும். வழக்கமான நேரத்தை விட கூடுதல் நேரமாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வண்டியின் ஓட்டுனர், டாஸ்மாக் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் உரிய விசாரணை மேற்கொள்ளவேண்டும். டாஸ்மாக் குடோன்கள் எந்த நேரமும் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் நடைபெற்ற மது விற்பனைக்கும் தற்சமயம் நடைபெறுகின்ற மது விற்பனைக்கும் பெருமளவில் வித்தியாசம் இருப்பின் அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும். வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ள குழுக்கள் எந்த வித பாகுபாடுமின்றி அனைத்து வாகனங்களையும் சோதனையிட வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனங்களில் நோயாளிகள் இல்லாதபட்சத்தில் அந்த வாகனங்களையும் முழுமையாக சோதனையிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகாரிகள்

இதில் பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா, தேர்தல் செலவின பார்வையாளர் ராஜேஷ் கவுலி, மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கீதா, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான பேபி, குன்னம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருமான கள்ளபிரான் மற்றும் மாவட்ட தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-