அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அந்தேரி : திருமணம் செய்வதாக ஆசைகாட்டி துபாய் பெண்ணிடம் நூதன முறையில் ரூ80 லட்சம் மோசடி செய்த அந்தேரியைச் சேர்ந்த காதல் மன்னனை போலீசார் தேடிவருகின்றனர். அந்தேரி கிழக்கு பகுதியைச் சேர்ந்த அவரது பெயர் சமீர் மெஹ்ரா (35). ஏற்கனவே திருமணமான சமீருக்கு சமூக வலைத்தளம் மூலம் துபாயில் வசிக்கும் பெண் ஒருவர் அறிமுகமானார். கடந்த 2010ல் அவர்களுக்கிடையே தொடர்பு ஏற்பட்டது. அப்போது விவாகரத்தான அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சமீர் ஆசை காட்டினார். அதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், அவரை இந்தியாவுக்கு வரும்படி சமீர் ஆசைவார்த்தை கூறி அழைத்தார். அதை நம்பி அந்த பெண் இந்தியா வந்து காந்திவலியில் உள்ள அவரது வீட்டில் தங்கினார். துபாய் பெண் இந்தியா வந்தபோது சமீர் ஆடம்பர கார் ஒன்றில் சென்று அவரை வரவேற்றார். அதில் சமீர் மீது அந்த பெண்ணுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது.

இருவரும் முதல் முறையாக அந்தேரியில் நேருக்கு நேர் சந்தித்தனர். அதன்பிறகு அவர்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகமானது. துபாய் பெண் சில நாட்கள் காந்திவலியில் தங்கி இருந்தார். அப்போது அவரை நிரந்தரமாக இந்தியாவுக்கு வரும்படி சமீர் வற்புறுத்தினார். இந்தியாவுக்கு வந்தால் தனது ஆட்டோ மொபைல் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிலை விரிவுபடுத்த உதவியாக இருக்கும் எனவும் அந்த பெண்ணிடம் பேசி அவரது மனதை மாற்றினார். அதன்பிறகு அந்த பெண் துபாய் சென்றுவிட்டார். அந்த நேரத்தில் தனது தொழிலில் ஏற்பட்ட இழப்பை சரிக்கட்ட பண உதவி செய்யும்படி கேட்டார். சமீரின் இனிமையான பேச்சில் மனதை பறிகொடுத்த அந்த பெண் முதலில் ரூ2 லட்சம் கொடுத்தார். அதன்பிறகு பல தவணைகளிலாக ரூ80 லட்சம் கொடுத்தார் இடைப்பட்ட காலத்தில் தன்னை திருணம் செய்யும்படி சமீரை துபாய் பெண் வற்புறுத்தினார். பல சாக்கு போக்கு சொல்லி அந்த பெண்ணை சமீர் ஏமாற்றி வந்தார். இதனிடையே அந்த பெண் இரண்டு முறை மும்பை வந்து திரும்பிச் சென்றார். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு பெண் முகநூலில் துபாய் பெண்ணை எச்சரித்தார்.

இதே சமீர் தன்னையும் இது போன்று திருமணம் செய்வதாக கூறி ரூ7 லட்சம் மோசடி செய்ததாக தெரிவித்தார். சமீர் மீது கொண்ட காதல் காரணமாக துபாய் பெண் அந்த உண்மையை நம்பவில்லை. இந்த நிலையில், அந்த பெண் சமீரின் பெற்றோருடன் தொடர்பு கொண்டு தனது நிலையை தெரிவித்தார். அவர்கள் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். “உனக்கு திருமணம் ஆகி இரு குழந்தைகளும் இருக்கின்றன. இந்த நிலையில் திருமணம் என்பது முடியாது” என தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அந்த பெண் சமீருடன் பல முறை போனில் தொடர்பு கொண்டும் முடியவில்லை. அதனால் மும்பை வந்து கடந்த மார்ச் 23 ம் தேதி எம்.ஐ.டி.சி. போலீசில் புகார் செய்தார். அத்துடன் தென் ஆப்பிரிக்கா பெண் சொன்ன புகாரையும் போலீசில் தெரிவித்தார். இரு சம்பவங்கள் தொடர்பாகவும் சமீருக்கு எதிராக போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். சமீரை கைது செய்ய இரண்டு முறை அவரது வீட்டுக்கு சென்றோம். அவர் தலைமறைவாகி விட்டார். அவரை வலைவீசி தேடிவருகிறோம் என எம்.ஐ.டி.சி. போலீஸ் சீனியர் இன்ஸ்பெக்டர் சைலேஷ் பசால்வர் தெரிவித்தார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-