அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வேப்பந்தட்டை,


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே மதுக்கடை ஊழியர்களின் கண்ணில் மிளகாய் பொடி தூவியும் தாக்கியும் ரூ.80 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையன் விட்டு சென்ற செல்போன் மூலம் சில மணி நேரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பணம் கொள்ளை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் அரசு மதுபானக்கடையில் மேற்பார்வையாளராக வேலைபார்ப்பவர் முருகேசன்(வயது44).அதே கடையில் விற்பனையாளராக வேலை பார்ப்பவர் ராமர்(40). நேற்று முன்தினம் இரவு முருகேசனும், ராமரும் மதுபானக்கடையை பூட்டிவிட்டு மது விற்பனையான ரூ.80 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் வேப்பந்தட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது முகமூடிக் கொள்ளையர்கள் 3 பேர் திடீரென மோட்டார்சைக்கிளை வழிமறித்து முருகேசன் மற்றும் ராமர் கண்களில் மிளகாய் பொடியை தூவினர். பின்னர் அவர்களை தாக்கிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் கைப்பையில் வைத்திருந்த ரூ.80 ஆயிரத்தை மின்னல் வேகத்தில் பறித்துச்சென்றனர்.

3 பேர் கைது

பின்னர் சிறிதுநேரம் கழித்து இருவரும் கண்ணில் பட்ட மிளகாய் பொடிகளை துடைத்துக்கொண்டு சுதாரித்து எழுந்தனர். அப்போது அந்த இடத்தில் முகமூடிக்கொள்ளையர்களில் ஒருவன் தவறவிட்டுச்சென்ற செல்போன் கிடந்தது. அதனை முருகேசனும், ராமரும் எடுத்துச்சென்று அரும்பாவூர் போலீசில் கொடுத்து புகார் செய்தனர். புகாரைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவுசெய்து உடனடியாக விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த செல்போன் அரசலூரை சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவனுக்குரியது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த சிறுவனை கைது செய்து விசாரித்தபோது அவனுடன் 16 வயதுடைய மற்றொரு சிறுவன் மற்றும் பாண்டகப்பாடியை சேர்ந்த மாணிக்கம் மகன் சண்முகம் (34) ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் 3 பேரையும் கைது செய்து கொள்ளையடித்துச்சென்ற பணம் ரூ.80 ஆயிரத்தை மீட்டனர். மேலும் கைதான சண்முகம் உள்பட 3 பேருக்கும் வேறு ஏதேனும் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகளை போலீசார் பிடித்து பணத்தை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-