அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 
சென்னை விமான நிலையத்தில் 61 முறை விபத்து: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
புதுடெல்லி,

சென்னை விமான நிலையத்தில் 61 முறை கண்ணாடி மேற்கூரை நொறுங்கி விழுந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமான நிலைய ஆணையத்துக்கு விளக்கம் கோரி தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீசு அனுப்பியது.

இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் சார்பில் உறுப்பினர் நீதிபதி டி.முருகேசன் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது:–சென்னை விமான நிலையம்

2012–ம் ஆண்டில் சென்னை விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு இருந்தும் இதுவரை விமான நிலையத்தில் கண்ணாடி மேற்கூரை நொறுங்கி விழுந்த சம்பவங்கள் 61 முறை நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் பயணிகளின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலைய நிர்வாகத்தின் முக்கியமான கடமையாகும். மேலும் விமான நிலையங்களின் கட்டுமானம் தொடர்பான தரம், தேவையான பாதுகாப்பு நிபந்தனைகளின் அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும்.நடவடிக்கை இல்லை

இதுவரை 61 தடவைகளுக்கு மேல் மேற்கூரை இடிந்து விழுந்தும் நிர்வாகம் அதுகுறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது. பயணிகளின் பாதுகாப்பு குறித்து நிர்வாகம் எந்தவகையிலும் அக்கறை காட்டவில்லை என்பது தெளிவாகிறது.

இதுபோன்று மேற்கூரை தொடர்ச்சியாக உடைந்து சரிவதால் பயணிகளும், விமான நிலைய ஊழியர்களும் ஒருவகையான அச்சத்துடனேயே விமான நிலையத்துக்குள் நடமாட வேண்டியுள்ளதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. சென்னை விமான நிலையத்தின் கட்டுமானம் குறித்து பல கேள்விகள் எழுகின்றன.விளக்கம் அளியுங்கள்

எனவே, இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு தேசிய மனித உரிமை ஆணைய நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-