அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ட்டமன்றத் தேர்தலில் மக்களின் கவனத்தைக் கவரும் வகையில் 'ஊழல் மின்சாரம்' என்ற பெயரில் ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார் பொறியாளர் சா.காந்தி. அனைத்து தொகுதிகளுக்கும், மின்சாரத்தின் வலியை உணர்த்தும் வகையில் இந்தப் படத்தைக் கொண்டு செல்ல இருக்கிறார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர் அமைப்பின் சா.காந்தியிடம் பேசினோம்.

"மின்துறையில் ஊழலின் அளவு எந்த மாதிரியான வடிவங்களில் உருமாறியிருக்கிறது என்பதைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். மின்சாரத்துறையின் வரலாறு, தொடக்ககால மின்வெட்டு, மின்வெட்டு சரிசெய்யப்பட்ட காலம், மீண்டும் மின்வெட்டு எப்படி உருவாக்கப்பட்டது? மத்திய அரசின் மின்கொள்கை எப்படியிருக்கிறது என்பதையெல்லாம் அலசி ஆவணப்பட நோக்கில் அலசியிருக்கிறோம்.

அரசியல்வாதிகள் ஊழல் செய்தவற்கு மின்சாரம் எப்படி ஒரு வாய்ப்பாக அமைகிறது என்பது மிக முக்கியமான புள்ளி. சந்தைப் பொருளாதாரத்தில் ஈடுபடாத ஏழை மக்களை இந்த பூமியில் இருந்து எப்படியெல்லாம் தூக்கி எறிவதற்கு இவர்கள் முயற்சி செய்கிறார்கள். இதன் அபாயம் என்ன என்பதை இன்றைய தலைமுறை அறிய வேண்டும். வாழ்வின் அங்கத்தோடு இணைந்துவிட்ட மின்சாரத்தில், நமக்கே ஷாக் அடிக்கும் வேலைகளை இந்த அரசியல்வாதிகள் தைரியமாகச் செய்கிறார்கள். ஆவணப்படத்தின் உள்ளார்ந்த பொருளே இதுதான். மின்வெட்டும், மின்வெட்டு காரணமான மின்தேவையும், அதன்மூலம் நடக்கும் ஊழலும்தான் மையக்கரு.

உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன். கடந்த ஐந்தாண்டுகளில் மின்துறையில் மட்டும் நாற்பதாயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு மின்சாரத்தை விற்கும் தனியார்கள் வெளி மாநிலங்களுக்கு விற்கக் கூடாது என விதியை வகுத்திருக்கிறார்கள். மின்சாரம் தேவையில்லை என்று சொல்லிவிட்டால், அதற்கான இழப்பீடு வேண்டும் என்றுகூறி வழக்கு தொடுக்கிறார்கள் தனியார் மின் உற்பத்தியாளர்கள். மின்சாரம் வாங்காமலேயே இரண்டாயிரம் மெகாவாட்டுக்கு, ஒரு யூனிட் 4 ரூபாய் 90 பைசா என இழப்பீட்டைக் கொடுக்கப் போகிறார்கள்.

இதற்காக, தனியாருக்குச் செல்லக் கூடிய தொகையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மே மாதத்திற்குள் இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்வைச் சொல்ல இருக்கிறது. மே மாதம் தாண்டியதும் நமக்கு காற்று மூலம் மின்சாரம் வந்துவிடும். மின்தேவையும் குறைந்து போகும். வெளியில் இருந்து வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இதைப் பற்றி மின்வாரியத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும். தெரிந்தே முன்கூட்டியே தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடுகிறார்கள் என்றால், ஊழலைத் தவிர வேறெந்த நோக்கமும் இல்லை.

2008-ம் ஆண்டில் இருந்து 2011ம் ஆண்டு வரையில் நடந்த மின்துறை ஊழலைப் பற்றி இதில் சொல்கிறோம். எட்டு ஆண்டுகளில் 60,000 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது. தி.மு.க அரசு ஊழல் செய்தாலும், 'பிளாண்ட் ஆரம்பித்தால்தான் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்' என 28,000 கோடிக்கு நான்கு பிளாண்டுகளை அமைக்க முயற்சி எடுத்தது. ஆனால் 2011 தேர்தலில் அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாததால், ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.வுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக இந்த பிளாண்டுகள் அமைந்தன. அதை முறையாகப் பயன்படுத்தாமல் மூன்று வருடங்களுக்கு அ.தி.மு.க அரசு கிடப்பில் போட்டது. காரணம், மின்கொள்முதலில் நல்ல ருசியைக் கண்டதுதான். எதிர்காலத்திலும் இந்த ருசி வேண்டும் என்பதற்காகத்தான் புதிய திட்டங்களையும் ஜெயலலிதா கொண்டு வரவில்லை.

'எண்ணூர் திட்டத்தைக் கொண்டு வந்தோம்' என இவர்கள் சொல்வது எல்லாம், தி.மு.க ஆட்சியின் கடைசி காலத்தில் போடப்பட்ட திட்டம்தான். இந்த வேலையும் இன்னமும் தொடங்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சாலையின் மின் தேவை 35 சதவீதமாக இருந்தது. இப்போது 24 சதவீதமாக சுருங்கிவிட்டது. அப்படியானால், தொழில்துறை நசுங்கிவிட்டது என்பதுதானே உண்மை. இதையெல்லாம் ஆவணப்படத்தில் கொண்டு வந்திருக்கிறோம். படம் எடுப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை ஆர்.ஆர்.சீனிவாசன் அளித்தார். 42 நிமிடம் ஓடக் கூடிய படம் இது.நாளை மாலை சனிக்கிழமை எழும்பூர் இக்சா மையத்தில் ஆவணப்படத்தை வெளியிடுகிறோம். மின்சாரத்துறையில் அரசின் ஊழல் ராஜ்ஜியத்தை 'ஷாக்'கடிக்கும் விதமாக ஆவணப்படுத்தியிருக்கிறோம்" என்றார் நிதானமாக.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-