அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பாடாலூர் அருகே குடிலில் காளி படங்கள், எலும்புகளை வைத்து மாந்திரீகத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் நரபலி கொடுக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாந்திரீகம்

ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பாடாலூர் மருதடி செல்லும் சாலையில் ஒரு குடில் அமைத்து அதில் மர்ம நபர்கள் சிலர் கடந்த ஒரு மாதமாக மாந்திரீகத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிலுக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கிருந்த சிலர் பொதுமக்களை உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இதைதொடர்ந்து அங்கு ஏதாவது குற்ற செயல்கள் நடைபெறுகிறதோ? என்ற சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள் நாரணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சிவானந்தத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் ஆய்வு

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர், பாடாலூர் போலீஸ் நிலையம் மற்றும் தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் சுரேஷ், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த குடிலை ஆய்வு செய்தனர். ஆய்வில் அந்த குடிலில் பெரம்பலூர், கல்யாண் நகர் பகுதியை சேர்ந்த சேகர் மகன் கார்த்திக் (வயது32), பாரதி நகர் பகுதியை சேர்ந்த சேட் மகன் சித்திக் (34), வடக்குமாதவி சாலையை சேர்ந்த ஷாஜகான் மகன் சலீம், எளம்பலூர் சாலையை சேர்ந்த அஹமதுபாஷா மகன் சாதிக் (27) உள்பட 5 பேர் மாந்தீரீகம் செய்து வந்தது தெரியவந்தது.

5 பேர் கைது

மேலும் அந்த குடிலில் காளி படங்கள், எலும்புகள் வைக்கப்பட்டிருந்தது. கணினிகள் மற்றும் சி.டி. ரைட்டர்களும் இருந்தன. இதனையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞான சிவக்குமார், கார்த்திக் உள்பட 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், அந்த குடிலில் எலும்புகள் உள்ளிட்டவைகள் கண்டு பிடிக்கப்பட்டதால் மாந்திரீகம் என்ற பெயரில் நரபலி கொடுக்கப்பட்டதா? என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து அந்த குடிலை போலீசார் பூட்டி சீல் வைத்தனர். இதனை அறிந்த பொதுமக்கள் குடில் முன்பு திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-