அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



பெரம்பலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதனை பாரபட்சமின்றி பறிமுதல் செய்ய வேண்டும் என தேர்தல் பறக்கும்படை-கண்காணிப்புக்குழுவினருக்கு கலெக்டர் நந்தகுமார் உத்தரவிட்டார்.

ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை எவ்வாறு கண்காணிப்பது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் நந்தகுமார் கூறியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களை தீவிரமாக கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை, தீவிர கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பறக்கும் படை மற்றும் தீவிர கண்காணிப்பு குழுவினரால் வாகன சோதனை செய்யப்படும் போது அதனை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யும் போது வாகனத்தின் எண், சோதனை செய்யும் அலுவலர்கள் மற்றும் சோதனை செய்யப்படும் பொருட்கள் உள்ளிட்டவை முழுமையாக இடம் பெறும் வகையில் வீடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும். இவ்வாறு எடுக்கப்படும் வீடியோக்கள் வீடியோ கண்காணிப்புக்குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

ரூ.50 ஆயிரத்திற்கு மேல்...

தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் மட்டுமின்றி உள்வட்ட சாலைகளிலும் வாகன சோதனையில் அலுவலர்கள் ஈடுபடவேண்டும். இந்த வாகன சோதனையின் போது யாராவது உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணமோ, பொருட்களோ எடுத்துச்சென்றால் அவற்றை பாரபட்சமின்றி பறிமுதல் செய்ய வேண்டும். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எவ்வித பாகுபாடும் பார்க்காமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு வாகன சோதனையின் போது பறிமுதல் செய்யப்படும் ரொக்கம் மற்றும் பொருட்களுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் பறிமுதல் செய்யப்பட்டவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள்

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி மீனாட்சி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மாரிமுத்து, வருவாய் கோட்டாட்சியர் பேபி, மாவட்ட வழங்கல் அலுவலர் கள்ளபிரான், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) சிலுப்பன் மற்றும் வட்டாட்சியர்கள், பல்வேறு குழுக்களின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-