அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஏழை மக்கள் கொண்டாடும் ஒரு திருவிழாவாக மாறிப்போனது தேர்தல் காலங்கள். ஏழை மக்களின் வாக்குகளை பெற என்னவேண்டுமோ அதை செய்ய தயாராக இருக்கின்றன அரசியல் கட்சிகள். தேர்தலின்போது வாக்குகளை பெற, பண வினியோகத்துக்கு இணையாக வாக்குறுதிகளை வாரி இறைக்க வேண்டியிருக்கிறது. நம்பவே முடியாத இலவச திட்டங்களையும், மானியங்களையும் கொட்டுகிறது அரசியல் கட்சிகள்.

தேர்தலையொட்டி, இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்களில் இலவசங்களும், மானியங்களும் வழங்குவதாக அரசியல் கட்சிகள் அறிவித்தாலும், இந்த இலவசங்களுக்கெல்லாம் முன்னோடியும், முன்னிலையில் இருப்பதும் தமிழகம்தான். கேரளாவிலேயே 'ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு தரப்படும்' என்ற கவர்ச்சி அறிவிப்பை அறிவிக்கச் செய்தது தமிழகம்தான்.

2006ல் துவங்கிய இலவச மேளா

2006 சட்டமன்ற தேர்தல், கற்பனையில் கூட நினைத்திராத இலவச திட்டங்களை வாரி வழங்கியது. இந்த தேர்தலின் கதாநாயகனே தேர்தல் அறிக்கைதான் என திமுகவின் தேர்தல் அறிக்கையை புகழும் வகையில் ஏராளமான இலவச திட்டங்களை அறிவித்தது திமுக. இலவச கலர் டிவி, 2 ஏக்கர் நிலம், மாணவர்களுக்கு சைக்கிள், விவசாய கடன் ரத்து, ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் (தேர்தல் வெற்றிக்குப்பின் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என மாற்றப்பட்டது) என ஏராளமான இலவச திட்டங்கள் இந்த தேர்தலில் ஒரு சேர அறிவிக்கப்பட்டு, வாக்காளர்களை திணறடித்தன.

மறுபுறம் அதிமுகவும் லேப்டாப் உள்ளிட்ட இலவச திட்டங்களை அறிவித்தன. இதில் திமுக வெற்றி பெற, திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணம் தேர்தல் அறிக்கைதான் என சொல்லப்பட்டது. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த இலவச திட்டங்களே வெற்றிக்கு காரணம் என்ற ரீதியிலேயே விமர்சனங்கள் இருந்தன. அதனாலோ என்னவோ அந்த தேர்தலில் வென்ற உடன், விவசாய கடன் ரத்து, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்ற திட்டங்கள் உடனடியாகவும், இலவச கலர் டிவி, மாணவர்களுக்கு சைக்கிள் போன்ற திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாகவும் அமலானது. 2006 முதல் 2011 வரையிலான ஆட்சியில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான இலவச கலர் டிவிக்கள் வினியோகம் செய்யப்பட்டன. 7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பல நூறு கோடி மதிப்பீட்டிலான இலவச சைக்கிள்கள் மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்டன. இப்படி பல ஆயிரம் கோடி இலவசங்களுக்காக வாரி இறைக்கப்பட்டது.

2011 தேர்தலில் தொடர்ந்தது

2011 தேர்தலிலும் இதே முறையை பின்பற்றியது திமுகவும், அதிமுகவும். இந்தமுறை அதிமுக அதிக வாக்குறுதிகளை கொட்டியது. இலவச கிரைண்டர், மிக்ஸி, ஃபேன், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், தாலிக்கு தங்கத்துடன் 50 ஆயிரம் திருமண உதவித்திட்டம் என கவர்ச்சி திட்டங்களை அடுக்கியது அதிமுக. அதிமுக வெற்றி பெற்றதும், இந்த இலவசங்களும் படிப்படியாக செயல்படுத்தப்பட்டன. திமுக, அதிமுக என ஆட்சி மாறினாலும், 2006 முதல் 2016ம் ஆண்டு வரை இலவசங்கள் பொழியும் ஆண்டுகளாகவே இருந்தது.

இந்த சூழலில்தான் 2016ம் ஆண்டு தேர்தலை தமிழகம் எதிர்கொள்கிறது. இந்த தேர்தலை பொறுத்தவரை அதிமுக, திமுக இரு கட்சிகளும் பெரும் நெருக்கடியில் இருப்பதுதான் உண்மை. அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, சென்னை பெரு வெள்ளம், நிர்வாக ரீதியிலான பிரச்னைகள் என நெருக்கடிகள் கொஞ்சம் அதிகம். அதற்கிணையாக தலைக்கு மேல் தொங்கும் 2ஜி ஊழல், கட்சியினரிடையே உற்சாகமின்மை என திமுகவுக்கும் நெருக்கடி அதிகமாகவே உள்ளது.

ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின்

இதையெல்லாம் சமாளிக்க இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் இலவசங்களை வாரி வழங்க உள்ளதாகவே சொல்கிறார்கள். திமுக, அதிமுக என இரு கட்சிகளும் கடந்த இரு தேர்தல்களில் ஏராளமான இலவச திட்டங்களை வாரி இறைத்தன. அது ஓரளவுக்கு பலனையும் அளித்தது. எனவே இந்த முறையும் அதே வழியை பின்பற்ற தயாராகி விட்டனர். அப்படியென்றால் இந்த முறை எதுவெல்லாம் முக்கிய வாக்குறுதிகளாக இருக்கும்?. திமுகவை பொறுத்தவரை, 2006 ம் ஆண்டு தேர்தலை போல, வேளாண் வங்கி கடன்களை ரத்து செய்வது என்பதை முக்கிய திட்டமாக வைத்துள்ளது. 'கடந்த 10 ஆண்டு கால விவசாய கடன்களை ரத்து செய்வோம் எனச்சொல்லி திமுக தேர்தலை சந்திக்கும்' என்கிறார் திமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர். அதோடு கல்வி கடனையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவிக்கும் என்கிறார்கள்.

இலவசங்களை பொறுத்தவரை ஏற்கனவே டிவி, மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் எல்லாம் கொடுக்கப்பட்டு விட்டதால், ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்றவை இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெறுகிறது. இது இல்லாமல் முதியோர் உதவித்தொகை, மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தில் மாற்றம் செய்து பயன் பெறும் தொகையை உயர்த்தி அறிவிக்கும் திட்டமும் இருக்கிறதாம். இது போக மதுவிலக்கு அமல், புதிய தொழிற்கொள்கை போன்ற வளர்ச்சி திட்ட அறிவிப்புகளையும் திமுக தேர்தல் அறிக்கை கொண்டிருக்கும் என்கிறது அக்கட்சி வட்டாரம்.செல்போனும் கிடைக்கலாம்

அதிமுகவிலும் இதே நிலைதான். கடந்த முறை திமுக கிரைண்டர் அல்லது மிக்ஸி என அறிவித்தபோது, இரண்டையும் இலவசம் என அறிவித்தது அதிமுக. அதே போல்தான் இந்தமுறை ப்ரிட்ஜ், வாஷிங்மெஷினை இலவசமாக வழங்கும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்மார்ட் போன் உள்ளிட்ட இலவச அறிவிப்புகளோடு, வளர்ச்சி திட்டங்களையும் முன்னிறுத்தும் என்கிறார்கள். எப்படியும் இரு கட்சிகளும் அடுத்த 5 ஆண்டுக்கான பல ஆயிரம் கோடி இலவச திட்டங்களை தாங்கிய தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளன. இன்னும் ஓரிரு தினங்களில் இந்த தேர்தல் அறிக்கைகள் வெளியாகும்.
ஏழை மக்களின் வாக்குகளை பெறுவதற்காக செய்யப்படும் தந்திரங்கள்தான் இவை. இலவசங்கள் கூடாது என ஒரு தரப்பில் அழுத்தம் திருத்தமாக சொல்லப்பட்ட போதும், பெரும்பாலான மக்களான ஏழை மக்கள் இந்த இலவசங்களை கொண்டாடுகின்றனர் என்பது மறுக்க முடியாது. முன்னர் வாக்குகளுக்கு பணம் என்பது மட்டுமே இருந்தது. அது இப்போது கொஞ்சம் மாறி இருக்கிறது. இப்போது வாக்குக்கு பணம் என்பது மட்டுமில்லை. தேர்தலில் வென்றால் இதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும் என சொல்வது கூட வாக்குகளை பெறும் முயற்சியாகி விட்டது. இதை தேர்தல் ஆணையமோ, வேறு யாருமோ தடுக்க முடியாது.

உங்களுக்காக அல்ல, உங்கள் ஓட்டுக்காக

இது போன்ற இலவசங்களை மக்கள் விரும்புகிறார்கள். ஏனென்றால் தினசரி வாழ்க்கையை நடத்துவதே பெரும்பாடாக இருக்கும் ஏழைகளுக்கு, இந்த இலவசங்கள் கற்பனைக்கு எட்டாத பொருட்களாக உள்ளன. இலவசங்களால்தான் இந்த பொருளை நாம் பெற முடியும் என்ற நிலையில் மக்கள் உள்ளனர். அதனால் இந்த இலவசங்கள் ஒரு புறம் ஏழைகளின் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வருகின்றன. ஆனால் இது நல்லதல்ல. இந்த இலவசங்கள் எல்லாம் நம் வாக்குகளை பெறுவதற்கான முயற்சிதான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அரசியல் கட்சிகள் குவிக்கும் இலவசங்கள் எதுவும் நமக்கானவை அல்ல. எல்லாமே அந்தந்த அரசியல் கட்சிகளுக்கானவை. சொல்லப்போனால் அவர்களின் நலனுக்கானவை. இந்த இலவசங்கள் அவர்களின் வெற்றிக்கு உதவலாமே தவிர, மக்களுக்கு பெரிய பலனளிக்காது என்பதுதான் உண்மை.

இலவசங்கள் எதுவும் அரசியல் கட்சிகள் தங்கள் சொந்த பணத்தில் வழங்குபவை அல்ல. நம் பணத்தில் இருந்து கொடுக்கப்படுபவைதான். இலவச டிவிக்களையும், மிக்ஸி, கிரைண்டர்களையும் வாங்கும்போது ஒரு வேளை நாம் மகிழ்ந்திருக்கலாம். ஆனால் இப்போது...?

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-