அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 

 * வாக்காளருக்கு தர பதுக்கப்பட்டதா?
* நத்தம் ஆதரவாளரிடம் விசாரணை

கரூர் : கரூர் அருகே, நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளருக்கு சொந்தமான வீடு, குடோனில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ரூ.5 கோடி பணம் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் பிரிவு சாலையில் அதிமுக முக்கிய பிரமுகரான அன்புநாதன் என்பவருக்கு சொந்தமான குடோனில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணத்தை ஏற்றிக்கொண்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு ரகசிய தகவல் சென்றது. இதன் அடிப்படையில் அவர் கரூர் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டேவுடன் தொடர்பு கொண்டு, சோதனை நடத்தி கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து நேற்று காலை 11 மணிக்கு எஸ்.பி., அவரது அதிரடிப்படை போலீஸ், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் அங்கு விரைந்தனர். இதுபற்றி அறிந்த பத்திரிகையாளர்களும் அங்கு சென்றபோது இரும்புகேட் பூட்டப்பட்டிருந்தது. கேட்டில் வரிசையாக துளைகள் இருந்தன. அதன்வழியாக புகைப்படம் எடுக்க முயன்றனர். உள்ளே எஸ்.பி.யுடன் இருந்த ஒரு போலீஸ் அதிகாரி உத்தரவின்பேரில் அந்த துளைகளை தரைவிரிப்புகளால் அதிகாரிகள் மூடினர். இதுபற்றி அறிந்து அங்கு பொதுமக்களும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர் சில்ஆசிஷ் வந்தார். பின்னர் வருமானவரித்துறை இணை ஆணையர் மணிகண்டன், அதிகாரிகள் ராஜசேகர், நடராஜன் ஆகியோர் வந்தனர். மதியம் 1 மணியளவில் மாவட்ட தேர்தல் நடத்தும் துணை அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான அருணா உள்ளே சென்றனர். மாலை 4 மணி அளவிலும் தொடர்ந்து ஆய்வு நடத்திக்கொண்டிருந்தனர். உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. இந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. மேலும், 12 பணம் எண்ணும் இயந்திரங்கள் மற்றும் பணத்தை கட்டுகளாக கட்ட வைத்திருந்த ரப்பர் பேண்ட்கள், காலி பெட்டிகள் கைப்பற்றப்பட்டது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த 4 கார்கள், ஒரு டிராக்டர், ஒரு ஆம்புலன்ஸ் ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தநிலையில், அன்புநாதன் வீட்டுக்கு வருமானவரித்துறை அதிகாரி நடராஜன் மற்றும் போலீசார் சென்றனர். பூட்டிக் கிடந்ததால் வீடு முன் கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அந்த வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. மாலை 4.45 மணி அளவில் எஸ்.பி. குடோனில் இருந்து புறப்பட்டு சென்றார். அவரிடம் சோதனை பற்றி கேட்டபோது, ‘’விசாரணை நடந்து கொண்டிருக்கிறது’’’’ என்று மட்டும் கூறினார். 5.30 மணி அளவில் டி.ஆர்.ஓ. அருணா புறப்பட்டார். அவரும் எதுவும் கூற மறுத்துவிட்டார். உள்ளே இருந்த அதிகாரிகள் ெதாடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு, கட்டுக்கட்டாக பணம் பிடிபட்டது குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இந்தநிலையில், அன்புநாதன் வீட்டில் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரி நடராஜன் தலைமையில் அதிகாரிகள் வந்தனர். அங்கிருந்த வக்கீல்கள் சிலர், அன்புநாதன் இரவு 10 மணிக்கு வருவார். அதன்பின் சோதனை நடத்துங்கள் என்றனர். நாங்கள் சோதனை நடத்துவதற்கான நீதிமன்ற உத்தரவுகளை பெற்றுள்ளோம். இரவு 7.30 மணி வரை பார்ப்போம். அதற்குள் வராவிட்டால் சோதனை செய்வோம் என்றனர். இரவு 7.40 மணிக்கு அன்புநாதன் வந்தார். அதைத் தொடர்ந்து வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. வீட்டில் கட்டுக் கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அதில் சுமார் ரூ.5 கோடி இருந்தது. இதைப் பார்த்ததும் அதிகாரிகளுக்கு மயக்கம் வராத குறையாகிவிட்டது. அதன்பின் வீட்டில் சல்லடை போட்டு தேடினர். அதன்பின், வீட்டின் எதிரே உள்ள மற்றொரு குடோனில் சோதனையை தொடர்ந்தனர். அதில் எவ்வளவு பணம் கிடைத்தது என்பது தெரியவில்லை. இந்தச் சோதனை விடிய விடிய நடந்தது. பறிமுதல் செய்யப்பட்ட இத்தனை கோடி பணம், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கி வைக்கப்பட்டதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சோதனை முடிந்த பிறகுதான் மொத்தமாக எவ்வளவு கிடைத்து என்பது தெரியவரும்.

ஆம்புலன்சில் பணம் பரிமாற்றம்

அன்புநாதனுக்கு சொந்தமான ஷெட்டில் 4 சொகுசு கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் ஆம்புலன்ஸ் வேன் ஒன்றும் நின்றது. இந்த ஆம்புலன்ஸ் வேன் மூலம்தான் பணத்தை வெளியே கொண்டு சென்றிருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த ஆம்புலன்சில் மத்திய அரசுக்கு சொந்தமானது என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. கடந்த 4 நாட்களாகவே இந்த ஆம்புலன்ஸ் வேன் இங்கு வந்துபோவதும் உடன் போலீஸ்கார்களும் வந்து சென்றதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் வேனில் தேர்தலில் பட்டுவாடா செய்வதற்காக பணம் கொண்டுசென்றதாக சந்தேகப்பட்ட ஒருவர்தான், தலைமைத்தேர்தல் அதிகாரிக்கு ரகசிய தகவல் அனுப்பியுள்ளார்.

12 நோட்டு எண்ணும் மிஷின் காலி பெட்டிகள், ரப்பர் பேண்டு

சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்ட அறிக்கையில், கரூரில் குடோன் ஒன்றில் நடத்திய சோதனையில் ரூ.10.3 லட்சம் பணம் சிக்கியது. மேலும், அங்கே 12 நோட்டு எண்ணும் இயந்திரங்கள், காலி பெட்டிகள், ரப்பர் பேண்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குடேனில் நின்றிருந்த மத்திய அரசுக்கு சொந்தமான ஆம்புலன்ஸ், ஒரு டிராக்டர்கள், 4 சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டது” என்று கூறியுள்ளார்.

யார் இந்த அன்புநாதன்

அன்புநாதன், அதிமுகவில் நீண்டகாலமாக இருப்பவர். அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர். சீட்வாங்கி தருவதாக கூறி அமைச்சர்கள் ஓ.பி.எஸ் மற்றும் நத்தம் கோஷ்டியினர் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்த செய்தி பரபரப்பாக வெளியானது. அப்போது முதல்வர் ஜெயலலிதா, ஓபிஎஸ் மற்றும் நத்தம் ஆகியோருடன் சேர்த்து அன்புநாதனையும் விசாரித்ததாக கூறப்படுகிறது.

கலெக்டருக்கு மிரட்டல்?

அன்புநாதன் வீட்டில் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, கரூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ், சென்னைக்கு வந்திருந்தார். அவரது போனுக்கு ஒரு மூத்த அமைச்சர் பேசியுள்ளார். சோதனையை இதற்கு மேல் தொடரக் கூடாது. அம்மா, டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரியான நம்ம ஆளிடம் பேசுவார் என்று கூறியுள்ளார். இதை நம்பிய கலெக்டரும், சோதனையை தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதோடு, டிஜிபி அலுவலகத்தில் இருக்கும் உயர் அதிகாரிகள் சிலரும் சத்தம்போட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணைய அதிகாரிகள், வருமான வரித்துறையினரும் நேர்மையாக செயல்பட்டதால் இவ்வளவு பெரிய பணம் சிக்கியுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-