அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...







* விருத்தாசலத்தை அடுத்து சேலத்திலும் கொடுமை
* கலெக்டர் எச்சரித்தும் 4 மணி நேரம் காக்க வைத்ததால் விபரீதம்
* இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு

சேலம்: சேலத்தில் நேற்று முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் வெயில் கொடுமைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 2 பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் எஸ்.ஐ உட்பட சிலர் மயக்கம் அடைந்தனர். கடும் வெயில் இருக்கும்; பகலில் வெளியில் வர வேண்டாம் என்று கலெக்டர் எச்சரித்தும், 4 மணி நேரம் காக்க வைத்ததால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா கூட்டத்தில் விருத்தாசலம் சம்பவத்தை தொடர்ந்து வெயிலில் சிக்கி தொண்டர்கள் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தமிழக சட்டசபைக்கு வரும் மே மாதம் 16ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து கட்சி தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மாவட்டம் வாரியாகவோ அல்லது இரண்டு மாவட்டங்களுக்கு சேர்த்து ஒரே இடத்தில் தொண்டர்களை திரட்டி பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

பிரசாரத்திற்கு தேர்வு செய்யப்படும் இடங்கள் அனைத்தும் நகருக்கு வெளியே பொட்டல் காடுகளாகவும், விவசாய நிலங்களாகவும் அமைந்துள்ளன. இதற்காக சம்பந்தப்பட்ட தொகுதிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள் மூலம் தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பணம் மற்றும் உணவு பொட்டலங்கள் கொடுத்து கூட்ட மைதானத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர். தொடரும் கொடுமை: தமிழகம் முழுவதும் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக 100 டிகிரிக்கு மேல் வெயிலும், அனல் காற்றும் அடிப்பதால் வீடுகளில் இருந்து வெளியே வரவே மக்கள் தயங்குகின்றனர். இதனால் சில மாவட்டங்களில் கலெக்டர்கள் வெயிலின் காரணமாக பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் ஜெயலலிதா பொதுக்கூட்டம் சென்னையிலும், காஞ்சிபுரத்திலும் தான் இரவு நேரத்தில் நடந்தது. மற்ற பகுதிகளில் நன்பகல் நேரம் நல்ல வெயில் கொளுத்தும் 2 மணிக்குத்தான் பிரசார கூட்டத்தில் பேசினார். இதனால் தான் அடித்தட்டு மக்களை பணத்தாசை காட்டி, அழைத்து வந்து அவதிக்குள்ளாக்குகின்றனர். வெயிலின் கொடுமையினால் தான் உயிரிழப்புகளும், மயங்கி விழுந்து உடல்நிலை பாதிக்கும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுவரை பயங்கரம்: அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 9ம் தேதி சென்னையில் பிரசாரத்தை துவக்கினார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் கடந்த 11ம் தேதி தேர்தல் பிரசார கூட்டம் நடந்தபோது, ஜெயலலிதா பேசிக்கொண்டிருக்கும் வேளையில் வெயில் கொடுமை தாங்க முடியாமல் பெண்கள் பலர் வெளியேற முயன்றனர்.

ஆனால் அவர்களை போலீசார் தடுத்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் சிக்கி, சிதம்பரத்தை சேர்ந்த அதிமுக தொண்டர் கருணாகரன், ஜெயம்கொண்டம் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கடந்த 15ம் தேதி நடந்த பிரசாரத்தில் வெயில் கொடுமை தாங்கமுடியாமல் கூட்ட மைதானத்தை விட்டு பலர் வெளியேற முயன்றதில் ெநரிசலில் சிக்கி 3 பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
11 மணியில் இருந்தே: சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 16 தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது.

திடீரென ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் கேரள மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் அவசரமாக நேற்று வரவழைக்கப்பட்டனர். முன்னதாக காலை 11 மணியிலிருந்தே தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களில் அழைத்து வரப்பட்டு பொதுகூட்ட மைதானத்தில் இருக்கைகளில் வரிசையாக அமர வைக்கப்பட்டனர். 108 டிகிரி வெயில்: தமிழகத்திலேயே நேற்று சேலத்தில்தான் அதிகபட்சமாக 108 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போதும், மைதானத்தை விட்டு யாரும் வெளியேற முடியாத காரணத்தால் அவதியுடன் பொறுத்திருந்தனர். மீறி வெளியேறினால் போவதற்கு வாகன வசதியும் கிடையாது, கூறிய படி உணவு பொட்டலமோ, பணமோ தரப்பட மாட்டாது என அதிமுகவினர் மிரட்டியதால் வேறு வழியின்றி வெயிலின் கொடுமைக்குள்ளாகி அவஸ்தையுடன் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். ஜெயலலிதா சரியாக 3.20 மணிக்கு மேடைக்கு வந்தார்.

அடுத்தடுத்து: அவர் பேசிக்கொண்டிருக்கும் போது சேலம் அடுத்த மகுடஞ்சாவடி குப்பாண்டபாளைத்தை சேர்ந்தவர் பச்சியண்ணன் (55). என்ற அதிமுக தொண்டர், திடீரென இருக்கையில் இருந்தபடியே சுருண்டு மயங்கி கீழே விழுந்தார். பின்னர் வாந்தி எடுத்தார். உடனே அங்கிருந்த சிலர், அவரை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் பச்சியண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபோல் சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி(65), வெயிலில் அமரமுடியவில்லை எனக்கூறி கூட்டம் நடக்கும் இடத்திலிருந்து வெளியேறி, அவர் ஊரிலிருந்து அழைத்துவரப்பட்ட லாரியில் வந்து அமர்ந்தார். கூட்டம் முடிந்ததும் அவருடன் வந்தவர்கள் லாரிக்கு வந்தனர். அப்போது பெரியசாமி மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில் பெரியசாமி இறந்திருந்தது தெரியவந்தது.

இதனிடையே பிரசார கூட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்காக 8 மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டிருந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி டவுன் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ கற்பகம் என்பவரும் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்தார். பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர் நேற்று காலை முதல் பணியில் ஈடுபட்டிருந்தார். ஜெயலலிதா வருவதற்கு முன்பாக அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். வேறு சில பெண்களும் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் பிரசார பொதுக்கூட்டங்களில் தொடர்ந்து வெயில் கொடுமையால் உயிரிழப்பு ஏற்படுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வெயில் அதிகமாக உள்ள நிலையில், மதிய ேநரத்தில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோரை வரவழைத்து கூட்டம் நடத்துவதே உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-