அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 
பெரம்பலூரில் வெவ்வேறு இடங்களில் நடந்த வாகன சோதனையில் ரூ.25 லட்சத்து 54 ஆயிரம் சிக்கியது.

வாகன சோதனை

தமிழகத்தில் அடுத்த மாதம் (மே) 16-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் விலையுயர்ந்த ஆபரணங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழுவினர் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பெரம்பலூர் அருகே லெப்பைக்குடிக்காடு பெண்ணகோணம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்துக்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அந்த நபர் கைப்பையில் ரூ.25 லட்சம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒப்படைப்பு

இதைதொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் அப்துல் பாரிக் என்பதும், அவர் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் என்பதும் தெரியவந்தது. மேலும் அந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை அவர் முதலில் காண்பிக்கவில்லை. இதையடுத்து உடனடியாக பணத்தையும், அப்துல் பாரிக்கையும் மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அப்போது அப்துல் பாரிக் தன்னிடம் இருந்த ஆவணங்களை வருமான வரித்துறை துணை ஆணையர் ராமலிங்கத்திடம் கொடுத்தார். அதனை சரிபார்த்த அவர் ஆவணங்கள் சரியாக இருந்ததால் பணத்தை திரும்ப அவரிடம் ஒப்படைத்தார்.

பறிமுதல்

இதேபோல் பெரம்பலூர் கோனேரிபாளையம் பிரிவு சாலையில் பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். இதில் கீழப்புலியூரை சேர்ந்த ரத்தினம் காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.54 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் ரூ.54 ஆயிரத்தை பறிமுதல் செய்து வருவாய் கோட்டாட்சியர் பேபியிடம் ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று வெவ்வேறு இடங்களில் நடந்த வாகன சோதனையில் ரூ.25 லட்சத்து 54 ஆயிரம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-