அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வேலூர்: தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச சேர்க்கைக்கான புதிய விண்ணப்பங்கள், இந்த ஆண்டு முதன்முறையாக வரும் மே 1ம் தேதி முதல் ஆன்லைனில் வினியோகம் செய்யப்பட உள்ளது. அனைத்து குழந்தைகளும் கல்வி பெறுவதை உறுதி செய்வதற்காக கடந்த 2009ம் ஆண்டு இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாகவும், கட்டாயமாகவும் கல்வி பெறுவதற்கு உரிமை உண்டு. மேலும் ஒவ்வொரு குழந்தையும் தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள எந்தவொரு பள்ளியில் சேரவும், அரசு நிதியுதவி பெறாத தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீதம் இலவசமாக இடம் ஒதுக்கவும் இச்சட்டம் வலியுறுத்துகிறது.

மேலும் இலவச ஒதுக்கீட்டின் மூலம் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசு வழங்கும். எனவே உரிய தகுதிகள் இருந்தும் மாணவர்களை சேர்க்க மறுத்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யவும் இச்சட்டத்தில் இடம் உண்டு. வரும் 2016-2017ம் கல்வியாண்டுக்கான 25 சதவீத இலவச ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இலவச ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க அடுத்த மாதம் 2ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும்.

தொடர்ந்து மே 3ம் தேதி முதல் 18ம் தேதி வரை சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு அறிக்கை பிறப்பித்துள்ளது. அதில் வரும் 1ம்தேதி முதல் 25 சதவீத இலவச சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தாங்கள் தேர்ந்தெடுத்த தனியார் சுயநிதி பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இணையதள விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-