அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

தமிழ்நாட்டில் சுற்றுலா போகிற ஒவ்வொருவருக்கும் ஏமாந்த அனுபவம் ஒன்றாவது இருக்கும். நிச்சயம் ஒருமுறையாவது ஏமாந்திருப்பார்கள். தமிழ்நாட்டின் சுற்றுலா தளங்களில் ஒரேமாதிரியாக யாரும் ஏமாற்றுவதில்லை. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு டெக்னிக். ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு விஷயம் என இதில் ஏகப்பட்ட வெரைட்டி உண்டு. சம்மர் லீவில் சுற்றுலாவுக்கும் திட்டம்போட்டிருக்கிற உங்களிடம் ஆட்டையை போட காத்திருக்கும் இந்த கழுகுகளிடமிருந்து உங்களை எப்படி காத்துக்கொள்வது.. அதற்குத்தான் இந்த அதிரடி தொடர். தினமும் 2 ஊர்கள் பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்.


1. ராமேஸ்வரம்

ரயிலிலோ, பேருந்திலோ ராமேஸ்வரம் வருபவர்களை போட்டி போட்டு வரவேற்பவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள். இந்த ஆட்டோவிற்கு நீங்கள் கொடுக்கும் கட்டணம் என்பது குறைந்த அளவில்தான் இருக்கும். ஆனால், உங்கள் மூலம் அவர்கள் அடையும் பலனோ அதிகமாக இருக்கும். உங்களை நல்ல லாட்ஜில் தங்க வைப்பதாக சொல்லி அழைத்து செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள், கோயிலுக்கு வெகு தொலைவிலோ அல்லது நல்ல வசதிகள் இல்லாத லாட்ஜ்களிலோ இறக்கி விடுவார்கள். அவர்கள் அழைத்தும் செல்லும் லாட்ஜில் நீங்கள் தங்கி விட்டால் அவர்களுக்கு லாட்ஜ் தரப்பில் குறைந்தது ரூ.100 முதல் ரூ.300 வரை கமிஷன் கிடைக்கும். இந்த கமிஷன் தொகையும் சேர்த்து ரூம் வாடகையாக அநியாய தொகை வாடகையும் உங்கள் தலையில் கட்டப்படும். அடுத்ததாக 'சைட் சீன்' என்ற பெயரில் ஆட்டோவில் செல்ல லோக்கல் மற்றும் அவுட்டர் (தனுஷ்கோடி, பாம்பன் பாலம்) என இரு வகையான கட்டணம் வசூலிப்பார்கள்.

சைட் சீன் செல்லும் முன்னரே பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து தெளிவாக விசாரித்துக் கொள்ளாவிட்டால், கண்ட இடத்திற்கும் அழைத்து சென்றுவிட்டு இரண்டாயிரம் கொடு, மூவாயிரம் கொடு என பிடுங்குவார்கள். முழுமையாக விசாரித்துக் கொண்டு ஆட்டோவில் கால் வைக்க வேண்டும். இல்லை என்றால் உங்களுடைய பர்ஸ் காலியாவது உறுதி.

ராமேஸ்வரத்தில் ஷாப்பிங் பண்ணும்போது கவனமாக இருக்கவேண்டும். இங்கும் ஆட்டோ ஓட்டுநர் கூட்டி செல்லும் கடையில் நீங்கள் பொருள் வாங்க கூடாது. ஆட்டோ ஓட்டுனர்கள் கமிஷன் வாங்கிக்கொண்டு மொக்கையான கடைகளுக்கு நம்மை அழைத்து சென்றுவிடுவார்கள். நாமாகவே தேடிப் பிடித்து வாங்குவது நல்லது.

ராமேஸ்வரத்தை பொருத்தமட்டில் ஆண்டு முழுக்க சீசன் காலம்தான். அதிலும் அமாவாசை போன்ற நாட்களில் பல மடங்கு பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால், இங்குள்ள தங்கும் விடுதிகளில் ஒரு சிலவற்றை தவிர மற்ற தங்கும் விடுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் கிடையாது. இதனால் உங்களின் நடை, உடைகளை கொண்டு கட்டணம் வசூலிக்கப்ப்படும். குறிப்பாக அமாவாசை தினங்களில் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பார்கள். அமாவாசைக்கு முந்தைய நாள் ரூம் கேட்டு போனால், ரூம் காலி இல்லை என்ற பதிலே வரும். அன்றைய தினம் நள்ளிரவுக்கு மேல் அதே தங்கும் விடுதியில் ரூம் கேட்டு சென்றால் உடனே கிடைக்கும். அதற்கு நீங்கள் அவர்கள் கேட்கும் கட்டணத்தை கொடுக்க சம்மதிக்க வேண்டும். இது போன்ற இன்னலை தவிர்க்க, ராமேஸ்வரம் வரும் முன்பாகவே தங்குவதற்கான ஏற்பாடுகளை முடிந்த மட்டும் இணையத்தின் மூலம் செய்து கொண்டால் நலம். திடீர் பயணமாக வருபவர்கள், கோயிலுக்கு சொந்தமான விடுதிகளில் (நீங்கள் எதிர்பார்க்கும் தரத்தில் இருக்காது) தங்குவதற்கு கோயில் அலுவலகத்தை நாடலாம். மலிவாகவும் இருக்கும்.

முடிந்தவரை ராமேஸ்வரம் பயணத்தை முறையாக திட்டமிட்டுக்கொள்ளுங்கள். ஏற்கனவே போய் வந்தவர்களிடம் விசாரித்து எப்படி செல்வது , எங்கே தங்குவது, என்ன வாங்குவது என்பதை விசாரித்துக்கொள்ளுங்கள். முக்கியமாக ஆட்டோக்காரர்களை நம்பாதீர்கள். ராமேஸ்வரத்தில் நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விதி அதுதான்.பாவங்களை போக்கும் இடமாக மட்டுமல்ல, நல்ல சுற்றுலா தலமாகவும் விளங்கி வருவது ராமேஸ்வரம். ஆனால், இந்த எண்ணத்துடன் வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஆட்டோவில் துவங்கி அர்ச்சகர் வரை எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள் என்பதை சற்று விவரமாக பார்க்கலாம்.

ராமேஸ்வரம் கோயில் சாமி தரிசனம் செய்யும் முன் அக்னி தீர்த்த கடலிலும், அதனைத் தொடர்ந்து கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராட செல்வது வழக்கம்.

இதில், 22 தீர்த்தங்களில் நீராட கோயில் நிர்வாகம் சார்பில் நபர் ஒருவருக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ.25 தான். ஆனால், உங்களை அணுகும் தனிநபர்கள் சிலர், உங்களை தனி வழியில் அழைத்து செல்வதாகவும், ஒவ்வொரு தீர்த்தத்திலும் ஒரு வாளி தண்ணீர் ஊற்றுவதாகவும் சொல்லி அழைப்பார்கள்.

இதற்கு நீங்கள் உடன்பட்டால் நபர் ஒருவருக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை கொடுக்க வேண்டியிருக்கும். இதேபோல் கடற்கரை மற்றும் பிற இடங்களில் தோஷம் கழிக்க, முன்னோர்கள் நினைவாக வழிபாடு செய்ய என பல வகையான பூஜைகள் புரோகிதர்களால் சொல்லப்படும். இவர்கள் சொல்லும் ஒவ்வொரு பூஜைக்கும் ஒரு ரேட் உண்டு.

நம்பிக்கை அடிப்படையில் நாம் இதனை ஏற்றுக் கொண்டால் உங்களிடம் இருந்து பெரும் தொகை பூஜைக்காக பிடுங்கப்படும். எடுத்துக்காட்டாக திலகோமம் எனும் பரிகார பூஜை ஒன்று உள்ளது. இதனை ஆயிரம் ரூபாய்க்கும் செய்யலாம், 50 ஆயிரம் ரூபாய்க்கும் செய்யலாம். இதில் உங்களின் மனது மற்றும் பர்சை பொறுத்து ஏமாற்றப்படலாம்.

அடுத்தது சாமி தரிசனம். கோயிலுக்குள் உள்ள சுவாமி சன்னிதியில் இலவச தரிசனம், சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம் என பல வகை உண்டு.

ஆண்டவனின் முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் இங்கு வார்த்தையாகத்தான் உள்ளது. இதில் இலவச தரிசனம் செய்யும் பக்தர்களை வேக வேகமாக விரட்டிவிடும் கோயில் ஊழியர்கள், சிறப்பு தரிசனத்தில் கட்டணம் செலுத்தி வருபவர்களை சிறப்பாக கவனிப்பார்கள். கோயிலின் உண்டியலில் காணிக்கை செலுத்தாமல், பூஜை செய்யும் அர்ச்சகரின் கையில் காணிக்கையை திணித்தால் போதும், சிவலிங்கத்துக்கு அணிவிக்கப்பட்டிருந்த மாலை அடுத்த நிமிடம் உங்கள் கழுத்துக்கு மாறிவிடும். இதில் அதிகபட்சம் ஏமாற்றப்படுவது வடநாட்டு பக்தர்களே. அவர்கள்தான் எதிர் கேள்வி கேட்காமல், கையில் வரும் பணத்தை பக்தியின் பெயரால் தாரை வார்ப்பார்கள்.

இது தவிர கடைகளில் வலம்புரி சங்கு வாங்க செல்லும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்தச் சங்கை வீட்டில் வாங்கி வைத்தால் வளம் தடையில்லாமல் பெருகும் என்பதாக இருக்கும் நம்பிக்கையை பயன்படுத்திக்கொள்ளும் சிலர், இந்த சங்கிற்கு கிராம் கணக்கில் விலை சொல்வார்கள்.

இவர்கள் பேசும் பேச்சில் மயங்கி சங்கை வாங்க நீங்கள் ஒத்துக் கொண்டால், அடுத்து உங்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான். சதுரங்க வேட்டை படத்தில் கோயில் கலசத்தை வாங்க செல்லும் தொழில் அதிபரை போல் நீங்கள் மாற்றப்படுவீர்கள்.

சங்கு கடையின் உள் அறைக்கு அழைத்து செல்லப்படும் உங்களுக்கு முன், அந்த வலம்புரி சங்கிற்கு சூடம் காட்டி சிறப்பு பூஜை செய்து, பயங்கர பக்தியுடன் உங்களிடம் அளிக்கப்படும். நீங்கள் கொடுக்கும் காசு அந்த சங்கின் தரத்திற்கு அல்ல, கடைகாரர்கள் காட்டும் நடிப்பிற்குதான். எனவே, இதிலும் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும்.2. ஊட்டி

ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, முதுமலை என நீலகிரி மாவட்டம் முழுக்க சுற்றுலாவுக்கான ஏரியாக்கள்தான். உங்களை மகிழ்விக்க வேண்டிய இந்தச் சுற்றுலா தலங்கள், சில நேரங்களில் தவறான நபர்களால் உங்களை எரிச்சலடையவும் வைத்து விடும். கிடைக்கும் வாய்ப்பிலெல்லாம் நீங்கள் ஏமாற்றப்படக்கூடிய வாய்ப்புகள் இங்கு மிக அதிகம். வழக்கமான சுற்றுலா தலங்களில் உள்ள பிரச்னைதான் என்றாலும், குறைந்தபட்சம் இரு நாட்கள் தங்கி பார்க்க வேண்டிய நீலகிரி மாவட்ட சுற்றுலா பயணத்தில், நீங்கள் கவனமாய் இருக்க வேண்டிய விஷயங்கள் நிரம்ப இருக்கின்றன.

முதலில் நீங்கள் கவனமாய் இருக்க வேண்டியது தங்கும் ஓட்டல் விஷயத்தில்தான். உங்களுக்கோ, உங்கள் நண்பருக்கோ தெரிந்த ஓட்டலில் தங்குவதுதான் உங்களுக்கு நல்லது. ஊட்டியை பொறுத்தவரை மதியம் 12 மணியில் இருந்து மறுநாள் மதியம் 12 மணி வரைதான் அறை வாடகை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதாவது நீங்கள் காலையில் 9 மணிக்கு அறைக்கு சென்றீர்கள் என்றால், முதல் 3 மணி நேரத்துக்கு ஒரு நாள் வாடகை தர வேண்டியிருக்கும். இதை பெரும்பாலும் விடுதியினர் சொல்ல மாட்டார்கள். அறையை விட்டு நீங்கள் காலி செய்யும் போதுதான் உங்களுக்கு இது தெரியவரும். எனவே, எந்த நேரத்தில் செக் அவுட் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தெளிவாக கேட்டுக்கொள்வது நல்லது.

ரூம் விஷயத்தை அடுத்து நீங்கள் கவனிக்க வேண்டியது வாடகை. ஊட்டி, குன்னூர், முதுமலை, கோத்தகிரியில் பெரும்பாலான ஓட்டல்களில் ரேட் கார்டு இருக்காது. அவர்கள் சொல்வதுதான் வாடகை. வழக்கமாக ரூ.500 முதல் 800 ரூபாய் வரை வாடகைக்கு விடும் அறையை, 2 ஆயிரம் ருபாய் எனக்கூட சொல்வார்கள். எனவே, ஒன்றுக்கு இருமுறை வாடகை விஷயத்தில் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.
தெரிந்தவர்கள் மூலம் சென்றால், அவர்கள் கேட்கும் தொகையில் பாதி தொகையை மட்டுமே செலுத்த வேண்டி வரும். எனவே, ரூம் வாடகையில் உங்கள் தலையில் மிளகாய் அரைக்க அனுமதிக்காமல் ஜாக்கிரதையாய் இருங்கள்.

அறை எல்லாம் போட்டாச்சு. அடுத்து சாப்பாடு. சாப்பிட ஓட்டலுக்கு போன உடன் நீங்கள் ஆர்டர் செய்யும் உணவு என்ன விலை, அதற்கான சைட் டிஷ் என்ன விலை என்பதையெல்லாம் தெளிவாக கேட்டுக்கொள்ள வேண்டும். நீங்கள் எந்த கேள்வியும் கேட்காமல் போய் அமர்ந்து 2 பரோட்டா ஆர்டர் செய்து சாப்பிட்டால், பரோட்டாவுக்கு 40 ரூபாயும், அதற்கான குருமாவுக்கு 100 ரூபாயும் பில் வரும். எனவே அதில் கவனமாக இருக்க வேண்டும்.அடுத்து கைடு விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஊட்டிக்கு நீங்கள் செல்வது முதல் முறை என்றால், ஓரளவு பெரிய ஓட்டல்களில் தங்கினால் அங்கே கைடுகள் இருப்பார்கள். இல்லையெனில் தெரிந்த நபர்கள் மூலமாக எங்கு செல்ல வேண்டும் என்ற விவரத்தை அறிந்து செல்வது நல்லது. இதில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் உங்களை பர்ஸை பதம் பார்த்து விடுவார்கள். எனவே, கவனமாக இருக்க வேண்டும்.

அடுத்து வாகன விஷயத்தில் கவனம் தேவை. ஊட்டியில் சீசனின் போது நீங்கள் ஒரு காரை வாடகைக்கு அமர்த்துகிறீர்கள் என்றால் கடுமையான வாடகையைதான் சொல்வார்கள். வழக்கமாக தின வாடகை ஆயிரம் ரூபாய் என்றால், சீசனில் இது இரு மடங்காக இருக்கும்.

தெரிந்தவர்கள் மூலம் புக் செய்வதன் மூலம் நியாயமான வாடகையில் செல்லலாம். அதேபோன்று முதுமலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் போது தெரிந்த நபர்கள் மூலம் கார்களை புக் செய்து கொள்வது தான் வசதி.

ஊட்டி குளிருக்கு ஸ்வெட்டர், குல்லா போன்றவை தேவைப்படும். ஸ்வெட்டர் விலையை கேட்டால் சில நூறுகளில்தான் ஆரம்பிப்பார்கள். ஒரு ஸ்வெட்டர் 700 ரூபாய் என்றால் 70 ரூபாய்க்கு கொடுப்பியா என நீங்கள் பேரத்தை துவக்கலாம். அந்த அளவு பல மடங்கு லாபம் வைத்துதான் விற்பார்கள். 700 ரூபாய் சொல்லும் ஸ்வெட்டரை 100 ரூபாய்க்கு கொடுத்து விடுவார்கள். எனவே, இது போன்ற பொருட்களை வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். நீலகிரி தைலம், ஹோம் மேட் சாக்லேட், ஊட்டி வர்க்கி என நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே கிடைக்கும் பொருட்களை வாங்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு படத்தில் வடிவேலுவிடம் மல்லிகை வாசனை காட்டி விட்டு, 'மல்லிகை பூவை முகர்ந்துட்டே... எனவே வாங்கித்தான் ஆக வேண்டும்' என கட்டாயப்படுத்துபவரிடம் சிக்கிக்கொள்வாரே அதுமாதிரியும் இங்கு நடக்கும். நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் தரமில்லாத டூப்ளிகேட் பொருட்களை உங்கள் தலையில் ஈசியாக கட்டி விடுவார்கள் ஜாக்கிரதை.

டென்ஷனை குறைக்க ஜாலியா டூர் போறீங்க. டென்ஷனை குறைச்சு, ஜாலியா இருக்கணும்னா நீங்க இதுலயெல்லாம் ஜாக்கரதையா இருக்கணும் பாஸ். இல்லைனா கஷ்டம்தான்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-