அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறுகளில் சென்னைவாசிகளின் கட்டணமில்லா கோல்டன் பீச், மெரீனா கடற்கரைதான். கடற்கரை மணற்பரப்பில் காலாற நடந்தபடி, மலரும் நினைவுகளை புரட்டிப் போடும் சென்னை நண்பர்களுக்கு மெரீனாதான் அழகான, செலவில்லாத ஒரு இடம்.

அரசுப்பேருந்தில் ஏறி குடும்பத்தோடு பயணித்தால், அதிகபட்சமாக போக வர ஐம்பது ரூபாய் கையில் இருந்தால் போதும். சென்னையின் மறுமுனையில் இருந்து வருகிற நிலை என்றால், ப்ளஸ் 50 ரூபாய் கூடுதல் செலவு அவ்வளவுதான். ஒரு நாளின் மாலைப் பொழுதைக் கழித்து விடலாம்.தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களாக பெரும்பாலும் கடற்கரைகள்தான் உள்ளன. அந்த வகையில், வங்காள விரிகுடாவை தன்னகத்தே கொண்டிருக்கும் சென்னை மெரீனா கடற்கரைதான் உலகின் மிக அழகான நீண்ட கடற்கரையாக இருக்கிறது.

கடற்கரையோர மணற்பரப்பில் சின்னச் சின்ன ராட்டினங்கள், ராட்டினம் ஏறி ஐந்து சுற்று சுற்றி விளையாட நபர் ஒன்றுக்கு 25 ரூபாய். பூமராங் தட்டைகள் தலா ஒன்று 25 ரூபாய். விளையாட்டுத் துப்பாக்கிக்கு காத்திருக்கும் பலூனை சுட்டுத்தள்ள 20 ரூபாய் கட்டணம்.அதேபோல், சுட்டு விற்கப்படும் கடல் மீன்கள் 30 ரூபாய் முதல் அளவைப் பொறுத்து விலையில் மாற்றம் இருக்கும். கொண்டைக் கடலை, சுண்டல்கள் 20 ரூபாய்க்கு கிடைக்கிறது, பஞ்சு மிட்டாய்கள், வாட்ச் மிட்டாய்கள் இரண்டுமே விலை 20 ரூபாய்தான். ஆக, பேருந்து பயணக் கட்டணம் இல்லாமல் நூறு ரூபாய் அடக்க விலையில் ஒரு நாள் மாலைப் பொழுதை பிள்ளைகளோடு மெரீனாவில் கழித்து விடலாம்.

மெரீனா கடற்கரை கொஞ்சம் ஓப்பனாக இருக்கிறதே என்று கவலைப்படும் இளசுகளுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் மெரீனாவிற்கு மிக அருகில் இருக்கும் பெசன்ட்நகர் எலியட்ஸ் பீச் அமைந்திருக்கிறது. பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி இது அமைந்துள்ளதால், அடித்தட்டு மக்களை இது அவ்வளவாக கவரவில்லை எனலாம்.இங்கே மெரீனாவின் சுண்டல், ராட்டினம் உள்ளிட்ட அம்சங்கள் இங்கே மிஸ்சிங் ஆகியிருப்பதைக் காணமுடியும். ஒரு பக்கம் உள்ளூர் மீனவ மக்கள் இங்கே வசித்தாலும், மறுபக்கம் வி.ஐ.பி.களின் குடியிருப்புகள் இங்கு இருப்பதால் எலியட்ஸ் பீச் தன்னுடைய வித்தியாசத்தை மாற்றிக் காட்டுவதை இங்கே காணலாம்.

200 ரூபாய் பயணச் சுற்றுலா

மெரீனாவிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கோவளம் கடற்கரை. இங்குள்ள கோவளம் தர்கா உலகப் புகழ்பெற்ற தர்காக்களில் ஒன்று என்பதால், பல மாநில மக்கள் மட்டுமல்லாது, பல உலக நாடுகளில் இருந்தும் இங்கே விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வந்து விடுகிறார்கள்.

அவர்கள் தங்கிச் செல்ல, குறைந்த நாள் வாடகையாக ரூ. 300 முதல் சொகுசுக்கேற்றளவில் தங்கும் விடுதிகள் இங்கே கிடைக்கின்றன. பிள்ளைகளோடு வந்து சுற்றுலா போல அனுபவித்துச் செல்லும் சென்னை வாசிகளுக்கு 200 ரூபாயே போதுமானது.மெரீனாவைப் போன்றே அத்தனை பொழுது போக்கு விஷயங்களோடு, அப்போதே பிடித்து சமைத்துக் கொடுக்கும் கடலுணவுகளும் இங்கே சாதாரணமாகக் கிடைக்கிறது. விலையும் பயமுறுத்தும் அளவில் இருப்பதில்லை.

சென்னையின் எந்த முனையிலிருந்தும் ஒரு மணி நேரத்தில் வந்து விடக் கூடிய அளவில் பேரூந்து வசதிகள் கோவளத்துக்கு உண்டு என்பதை வைத்தே, அங்கு வருகிறவர்களின் எண்ணிக்கையை நாம் உணரமுடியும். உயரமான பனை, தென்னை, யூகலிப்டஸ் உள்ளிட்ட மரங்கள் கண்கொள்ளாக் காட்சிகளாக மிக நெருக்கத்தில் இங்கு வளர்ந்து நிற்பது ரசிக்கத்தக்க ஒன்று எனலாம்.

500 ரூபாயில் சுற்றுலா போய்வர...

சென்னை மெரீனா கடற்கரையில் இருந்து சரியாக 63-வது கிலோ மீட்டரில் வருகிறது மாமல்லபுரம். பல்லவ மன்னர்களின் கைவண்ணத்தை, சிற்பக் கூடங்களை இங்கே கடற்கரையோடு ஒட்டி ரசிக்கலாம் என்பதே மாமல்லபுரத்தின் சிறப்பு.

அதேபோன்று கடற்கரை பூமியாகவும் சுற்றுலாவுக்கு அதிக அளவில் உள்ளூரை விட வெளிநாட்டுப் பயணிகளை கவர்ந்திழுக்கும் இடமாகவும் மாமல்லபுரம் திகழ்கிறது.சென்னைக்குள் எங்கும் விருப்பம் போல் பயணம் செய்ய, அரசு பேருந்துகளில் வழங்கப்படும் 50 ரூபாய் விலை டிக்கெட்டை வாங்கிக் கொண்டு காலையில் பயணித்தால், அன்றிரவு வரையில் அதே பயண டிக்கெட்டை பயன்படுத்தி வீடு திரும்பலாம்.

ஐந்து பேர் கொண்ட குடும்பம், மாமல்லபுரத்துக்கு புளியோதரை அல்லது கட்டுச் சோற்றுடன் பயணப்பட்டால் ஐநூறு ரூபாயே அதிகம்தான். செலவிட பணம் கையில் இருக்கிறது என்கிறவர்கள், இதில் சொல்லியிருப்பதை படித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெறுமனே தகவலை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றாலும் படித்து வைத்துக் கொள்ளலாம்.

-ந.பா.சேதுராமன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-