அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 


தமிழகத் தேர்தல்ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவைப் பெறுவதற்குத் திட்ட மிட்டு, அதற்கான ஆயத்தப் பணிகளை அனைத்து மாவட்டங்களிலும் முடுக்கிவிட்டுள்ளது. இதற்காக மாநில அளவில் முன்னணி நடிகர்களின் மூலம் வீடியோ பிரசாரத்தை மேற்கொள்வதோடு, அனிமேஷன் படக்காட்சிகளையும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் வாகனங்களைக் கொண்டு ஒளிபரப்பி வருகிறது. மேலும் கல்லூரிகளுக்கு அரசுத்துறையினரை அனுப்பி வைத்து, முதலாமாண்டு பயிலும் 18 வயது நிரம்பிய மாணவ, மாணவியரை விடுபாடின்றி வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அதோடு விட்டு விடாமல், கல்லூரி மாணவ, மாணவியர், மகளிர் சுயஉதவி குழுவினரைக் கொண்டும் பேரணிகளை நடத்தி வாக்காளர்களுக்கான விழிப் புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களின் முகப்புகளில், பஸ் கண்டக்டர்களின் பைகளில், காஸ் சிலிண்டர்களில், அனைத்துத்துறை அரசு அலுவலகங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களையும், வீடுவீடாக போஸ்டர்களையும் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதோடு திருமண அழைப்பிதழைப்போல் வாக்களிக்க வருவதற்கான அழைப்பிதழ் அச்சடித்துத் தருவது, விழிப்புணர்வுப் பேரணியில் ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டத்துடன் கலாச்சாரத் திருவிழாவைப் போல் நடத்துவதென ஒரு ஆளுங்கட்சி, மக்களின் வரிப்பணத்தை வாரிஇறைத்து விளம்பரப்படுத்துவதற்கு இணையாகச் செலவு செய்து, தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு ஊரிலிருந்தும் கூலித்தொழிலாளர்களாக மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளான சவுதிஅரேபியா, துபாய், கத்தார், ஏமன், ஓமன் போன்றவற்றிற்கும், படித்துப் பட்டம் பெற்று இதர நாடுகளிலும் பணிபுரியும் நபர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டுமே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், தமிழக அளவில் பல லட்சம் பேர்களும் வெளிநாடுகளில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வாக்காளர்களாக உள்ள நிலையில், இவர்களின் வாக்குகளைப் பெற வழி காணாமல், தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குகளைப் பெற முண்டிக்கொண்டிருப்பது, உடலெங்கும் எண்ணையைத் தடவிக்கொண்டு தரை யில் உருண்டாலும், ஒட்டுகிற மண்தான் ஒட்டுமென்ற பழமொழியைத்தான் நினைவூட்டுகிறது என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

அரசியல் பிரமுகர்கள் பிரசாரத்திற்குப் பயன்படுத்துகிற வாகனங்களைக் கூட ஆன்லைனில்தான் பதிவு செய்ய வேண்டுமென அடம் பிடிக்கும் தேர்தல் ஆணையம், வெளிநாட்டிலுள்ள வாக்காளர்களுக்கு ஆன்லைனில் வாக்களிக்க ஏற்பாடு செய்யாமல், 100 சதவீத வாக்குகளைப் பெறுவதுதான் லட்சியமென முயன்று வருகிறது. இது எப்படி சாத்தியமாகுமென வருவாய்த்துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது காணாமல் போனவர்கள், இறந்தவர்கள், வெளிநாடு சென்றவர்களைக் கழித்துவிட்டு கூட 100சதவீத வாக்குப்பதிவு என கணக்கிடலாம் என்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-