அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் மாணவ-மாணவிகளின் பெயரை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி முதல்வர்களுடனான கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் பேபி ஆலோசனை வழங்கினார்.

ஆலோசனை கூட்டம்

தமிழகம் முழுவதும் வருகிற மே மாதம் 16-ந்தேதி சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் பெரம்பலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 18 வயது பூர்த்தியடைந்த கல்லூரி மாணவ-மாணவிகளை வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க அறிவுறுத்த வேண்டும் என்பதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் பேபி தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

மாணவ-மாணவிகளின் பெயர்

இந்த கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் பேபி பேசியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 46 கல்லூரிகள் உள்ளன. செந்துறை வட்டத்தில் ஒரு ஐ.டி.ஐ.யும் சேர்த்து மொத்தம் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் 47 கல்லூரிகள் உள்ளன.

1.1.2016 அன்று 18 வயது பூர்த்தியடைந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் அனைவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

எனவே, உங்கள் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளின் பெயர், பிறந்த ஊர், பிறந்த தேதி, வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளாரா?, ஆம் எனில் வாக்காளர் அடையாள அட்டையின் எண், இல்லை எனில் படிவம் 6 பூர்த்தி செய்து வழங்கியுள்ளாரா?, ஆம் எனில் அந்த படிவத்தின் எண் போன்ற தகவல்களை கேட்டறிந்து அதை உங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து வருகிற 14-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதன் மூலம் உங்கள் கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகளில் வாக்காளர்களாக பதிவு செய்யாதவர்களின் தகவல்களை எளிதில் அறிய முடியும். அப்படி உள்ள மாணவ-மாணவிகளுக்கு படிவம் 6-ஐ வழங்கி பூர்த்தி செய்து பெற்றால் அவர்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.

தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

மேலும், தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாணவ-மாணவிகளின் பங்கு அளப்பரியது. எனவே, தங்கள் கல்லூரி மாணவ-மாணவிகளை வாக்காளர் விழிப்புணர்வு பேரணிகள், மனிதச்சங்கிலிகள், உறுதிமொழி எடுத்தல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள வாக்காளர் அடையாள அட்டை எண்ணை 1950 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பினால், உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் எந்த பகுதியில், எந்த வரிசை எண்ணில் உள்ளது என்ற தகவல்கள் உடனடியாக உங்களுக்கு அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் அனைத்துக்கல்லூரிகளின் முதல்வர்கள், கல்லூரிகளின் பிரதிநிதிகள், வட்டாட்சியர் தமிழரசன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-