அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...





 

அரியலூர்: அரியலூர் அருகே விவசாயி கடன் பாக்கியை கட்டாததால், தனியார் நிதி நிறுவனம் டிராக்டரை பறிமுதல் செய்தது. இதனால் விரக்தியடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தஞ்சை விவசாயி பாலன் டிராக்டரை பறிமுதல் செய்ததுடன், அவரை போலீஸ் மூலம் கொடூரமாக தாக்கிய செயலை தொடர்ந்து விவசாயிகளுக்கு கடன்பாக்கி கெடுபிடி அதிகரித்து வருகிறது. தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அடுத்த சோழகன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் பாலன் (40). விவசாயி. தஞ்சையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.3.8 லட்சத்துக்கு டிராக்டர் கடன் வாங்கி இருந்தார். இதற்காக அவர் 6 தவணைகள் செலுத்தி உள்ளார். இன்னும் 2 தவணைகள் மட்டும் (ரூ.1.3 லட்சம்) செலுத்த வேண்டி இருந்தது. இதை செலுத்தாமல் பாலன் காலம் கடத்தி வந்தார். இதனால் கடந்த 4ம் தேதி வங்கி அதிகாரிகள், பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரவேல், ஏட்டுகள் ராஜா, ஏசுராஜ், குமாரவேல் ஆகிய 4 பேரும் பாலனின் சொந்த ஊருக்கு சென்றனர்.

வயலில் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்த விவசாயி பாலனிடம் இருந்து டிராக்டரை பறிமுதல் செய்ய அதிகாரிகளும், போலீசாரும் முயன்றனர். டிராக்டரில் இருந்து இறங்க மறுத்த பாலனை போலீசார் கடுமையாக தாக்கி கைது செய்து அழைத்து சென்றனர். இந்த காட்சி வாட்ஸ்அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. முற்றுகை: இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து பாப்பாநாடு ஏட்டுகள் ராஜா, ஏசுராஜ், குமாரவேல் ஆகிய 3 பேரை தஞ்சை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. மயில்வாகனன் உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் குமாரவேலும் தஞ்சை காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். ஆனால், இது கண்துடைப்பு நடவடிக்கை என்றுகூறி மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தை நேற்று விவசாயிகள் முற்றுகையிட்டனர். தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடத்தினர்.

இந்தநிலையில், அரியலூர் அருகே கடனை செலுத்தாததற்கு டிராக்டரை ஜப்தி செய்ததால் விரக்தியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அடுத்த ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் அழகர் (26). விவசாயி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் (சோழ மண்டலம்) டிராக்டர் கடன் ரூ.7 லட்சம் பெற்றார். இதில் ரூ.5 லட்சம்
வரை செலுத்தி உள்ளார். மீதமுள்ள ரூ.2 லட்சத்தை அவரால் கட்ட முடியவில்லை. மீதமுள்ள பணத்தை கட்ட வேண்டும். இல்லையென்றால் டிராக்டர் பறிமுதல் செய்யப்படும் என்று அழகரிடம் நிதிநிறுவனத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்சரித்தனர். ஆனால், நஷ்டம் காரணமாக அழகரால் குறிப்பிட்ட தேதிக்குள் கடனை கட்டமுடியவில்லை.

தகாத வார்த்தைகளால்: கடந்த 10ம் தேதியன்று தனியார் நிதி நிறுவனத்தின் சார்பில் 7 பேர் கொண்ட கும்பல் அழகர் வீட்டிற்கு சென்றனர். அப்போது அழகரிடம், ‘பணம் கட்டாததால் டிராக்டரை பறிமுதல் செய்கிறோம்’ என்றனர். அதற்கு அழகர், கொஞ்ச காலஅவகாசம் கேட்டார். இதனால், அழகரை தகாத வார்த்தையால் திட்டித் தீர்த்தனர். இதில் மனமுடைந்த அழகர் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை வாங்கி குடித்தார். உறவினர்கள் அவரை கீழப்பழுவூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் அதிகாலை அழகர் இறந்தார். அன்றைய தினம் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த அழகருக்கு அகிலா என்ற மனைவி உண்டு. குழந்தைகள் இல்லை. அவரது வீட்டுக்கு திமுக எம்எல்ஏ சிவசங்கர் நேற்று சென்று ஆறுதல் கூறினார்.
கெஞ்சியும் பலனில்லை: விவசாயி அழகரின் உறவினர் பாக்யராஜ் கூறுகையில், “கடந்த 10ம் தேதி மாலை பெரம்பலூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் 7 பேர் அழகர் வீட்டுக்கு வந்தனர்.

அப்போது வாங்கிய கடனை செலுத்துமாறு கேட்டனர். இல்லையென்றால் டிராக்டர் பறிமுதல் செய்யப்படும் எனக்கூறினர். அதற்கு அழகர் நான் பணத்தை கட்டி விடுகிறேன். டிராக்டரை பறிமுதல் செய்யாதீர்கள் என கெஞ்சினார். அதற்கு மறுத்த அவர்கள் டிராக்டரை எடுத்து செல்ல முயன்றனர். அப்போது ஊழியர்களுக்கும், அழகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நிதிநிறுவன ஊழியர்கள் அழகரை தகாத வார்த்தைகளால் திட்டினர். பின்னர் அங்கிருந்த டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். இதில் மனமுடைந்த அழகர் வீட்டைவிட்டு வெளியே சென்றார். வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பின்னர்தான் அவர் விஷம் குடித்தது தெரியவந்தது. அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு அவர் இறந்தார்’’ என்று கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-