அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


மும்பையில் டிக்கெட் இன்றி ரெயிலில் பயணம் செய்துவிட்டு ‘மல்லையாவை பிடியுங்கள், பிறகு நான் அபராதம் செலுத்துகிறேன்’ கோடீஸ்வர பெண் பிடிவாதத்தால் பரபரப்பு!

 

மும்பை,

டிக்கெட் இன்றி ரெயிலில் பயணம் செய்துவிட்டு, முதலில் ‘மல்லையாவை பிடியுங்கள் பிறகு நான் அபராதம் செலுத்துகிறேன்’ என ரெயில்வே அதிகாரிகளிடம் கோடீஸ்வர வீட்டு பெண் பிடிவாதம் பிடித்தார். 

பிடிபட்ட பெண்

தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய ரூ. 9 ஆயிரம் கோடி கடனை செலுத்தாமல் சமீபத்தில் தலைமறைவானார். கடனை செலுத்தாமல் அவர் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் விவசாய கடனை செலுத்தவில்லை என வங்கி அதிகாரிகள் அவரின் டிராக்டரை பறிமுதல் செய்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போது மல்லையாவையும், விவசாயிகளையும் ஒப்பிட்டு பல்வேறு கேலி சித்திரங்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. மேலும் மல்லையாவை தப்பவிட்டதாக மத்திய அரசையும், வங்கிகளையும் கேலி செய்தும் படங்கள் (மீம்ஸ்) உலா வந்தன. இதையெல்லாம் மிஞ்சும் வகையில் மும்பையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

நேற்று முன் தினம் மகாலெட்சுமி ரெயில்நிலையத்தில் பெண் டிக்கெட் பரிசோதகர் தீவிரமாக தனது பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது பிளாட்பாரத்தில் பிரேமலதா (வயது 44) என்ற பெண் வந்தார். அவரை மறித்து டிக்கெட் பரிசோதகர் பயணம் செய்தற்கான டிக்கெட்டை கேட்டார். ஆனால் அவரிடம் டிக்கெட் இல்லை.முதலில் மல்லையாவை பிடியுங்கள்

இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் பிரேமலதாவிடம் டிக்கெட் இன்றி பயணம் செய்தற்காக ரூ. 260 அபராதமாக செலுத்தும்படி கூறினார். ஆனால் பிரேமலதா ரூ. 9 ஆயிரம் கோடி கடனை செலுத்தாமல் தப்பியோடிய விஜய் மல்லையாவை பிடியுங்கள் பிறகு நான் அபராதம் செலுத்துகிறேன் என்றார். பிரேமலதா விளையாட்டிற்காக அப்படி சொல்வதாக நினைத்து டிக்கெட் பரிசோதகர் முதலில் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

இந்தநிலையில் நேரம் சென்று கொண்டே இருந்தது. 15 நிமிடம், 30 நிமிடம் ஆனது. 30 நிமிடம் ஒரு மணி நேரம் ஆனது. ஆனால் பிரேமலதா தான் கூறியதையே கூறினார். இதனால் பொறுமையிழந்த அந்த பெண் டிக்கெட் பரிசோதகர் பிரேமலதாவை ஸ்டேசன் மாஸ்டர் அறைக்கு அழைத்து சென்றார்.சொன்னதையே சொன்னார்

அங்கு ரெயில்வே அதிகாரிகள் எடுத்துக்கூறியும் அவர் அபராதம் செலுத்துவதாக இல்லை. இதனால் இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு பெண் ரெயில்வே போலீஸ் மற்றும் அக்ரிபாடா போலீசார் பிரேமலதாவிடம் அபராதம் செலுத்திவிட்டு செல்லுமாறு அறிவுரை கூறினர். இல்லாவிடில் ஜெயிலுக்கு செல்ல வேண்டி இருக்கும் மிரட்டியும் பார்த்தனர். ஆனால் பிரேமலதா மசிவதாக இல்லை. வேறு வழியில்லாமல் ரெயில்வே போலீசார் அவரிடம் கெஞ்சியும் பார்த்தனர். ஆனால் அவர் உடைந்த டேப் ரிக்கார்டர் போல சொன்னதையே சொன்னார். இதையடுத்து ரெயில்வே போலீசார் கடைசியாக பிரேமலதாவின் கணவருக்கு போன் செய்து நடந்ததை கூறினர். ஆனால் பிரேமலதாவோ இதில் நீங்கள் தலையிட வேண்டாம் என கணவரிடம் ஒரே போடாகப் போட்டார். இதையடுத்து எப்படி அவரிடம் இருந்து அபராதத்தை வசூலிப்பது என போலீசார் தீவிரமாக யோசித்து வருகின்றனர். 

ஏழை இல்லை...

ரூ. 260 அபராதம் செலுத்தாமல் சுமார் 12 மணி நேரம் போராடிய பிரேமலதாவை நீங்கள் ஏதோ பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை வீட்டில் இருந்து வந்தவர் என்று நினைத்துவிட வேண்டாம். தென்மும்பை, பூலேஷ்வர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பிரேமலதாவின் வீடு மட்டும் ரூ. 5 முதல் ரூ. 7 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இவரது கணவர் தொழில் அதிபர் ஆவார். இவ்வாறு நடந்து கொண்டது குறித்து பிரேமலதாவிடம் கேட்டபோது, ‘‘ எனக்கு தெரிந்த வகையில் நான் ஏழைகளுக்காக போராடுகிறேன். ஒருவேளை என்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தினால் என்னிடம் அவர்கள் (ரெயில்வே அதிகாரிகள், போலீசார்) எப்படி அநாகரீகமாக நடந்து கொண்டார்கள் என்பதை நீதிபதியிடம் கூறுவேன்’’ என்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-