அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

கல்வி மற்றும் மருத்துவ சேவை இலவசமாக வழங்கப்பட வேண்டும் : கல்வியாளர் சி.எம்.என். சலீம் பேட்டிசமுதாய கல்வி மேம்பாட்டுக்காக சமூக நீதி அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் கீழ் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இயங்கி வருகிறது. இந்த இயக்கத்தின் நிறுவனர் சி.எம்.என். சலீம் அவர்கள் சமீபத்தில் துபாய் வந்தார்.

சமுதாய மக்கள் கல்வியில் மேம்பட வேண்டும் என்ற ஒற்றை சிந்தனையுடன் செயல்பட்டு வரும் அவரை முதுகுளத்தூர்.காம் ( www.mudukulathur.com ) இணையதளத்தின் சார்பில் சந்தித்தோம்.

அவருடன் நடத்திய உரையாடலில் இருந்து :

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு நமது நடைமுறை கல்வியுடன், இஸ்லாமிய பாடத்துடன் சேர்த்து ஆரம்ப கல்வியை வழங்குவதே நோக்கமாகும். இதன் மூலம் மாணவர்கள் இஸ்லாமிய வழிகாட்டுதல் அடிப்படையில் ஆய்வு கல்வியை கற்க வேண்டும்.

சமுதாயத்தில் பல்வேறு அமைப்புகளும் பல்வேறு தளங்களில் செயல்பட்டு வந்தாலும் கல்வி என்ற ஒற்றை இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். மேலும் நமது சமுதாயத்துக்கு வழிகாட்டியாக ஒரு சிறந்த தலைவர் இல்லாததும் கல்வியிலும், இன்ன பிற துறைகளிலும் நமது பின்னடைவுக்கு ஒரு காரணமாகும்.

கல்வி இன்று காசு பார்க்கும் ஒரு வர்த்தகமாக இருந்து வருகிறது. இதனை மாற்றி கல்வி மற்றும் மருத்துவம் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறோம்.

கடந்த 1400 ஆண்டுகளாக நமது சமுதாயத்தின் சார்பில் கல்வியும், மருத்துவமும் இலவசமாக வழங்கப்பட்டு வந்துள்ளன. அப்போதெல்லாம் சமுதாயம் இந்த துறைகளில் மேலோங்கி இருந்துள்ளது. ஆனால் கடந்த 70 ஆண்டுகளில் அதிலும் குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளில் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் காசு பார்க்கும் நிலையங்களாக மாறிவிட்டதே சமுதாயம் கல்வியில் பின்தங்கியுள்ள நிலைமைக்கு முக்கிய காரணமாகும்.

இந்த சூழ்நிலையை மாற்றுவதற்கு தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையை அடுத்த 30 ஆண்டுகளுக்குள் மாற்றியமைக்கும் வகையில் திட்டமிடப்பட்டு செயல்பட்டு வருகிறது.

பன்மை சமூகத்தின் மத்தியில் வாழ்ந்து வரும் நாம் வெறுப்புணர்வு மூலமாக வளர்ச்சியை அடைய முடியாது. பொருளாதாரம், அறிவு உள்ளிட்ட துறைகளில் சமூகம் முன்னேற இன்றியமையாதது கல்வியே.

தமிழகத்தில் பல்வேறு இயக்கங்களும், அமைப்புகளும் ஏற்பட்டுள்ளதும் ஒரு நன்மையே. இதன் காரணமாக விழிப்புணர்வும் ஏற்பட்டது. சமீபத்தில் வெள்ள நிவாரணப் பணிகளில் சமுதாய அமைப்புகளின் பணிகளும், சேவைகளும் நம்மீதான ஒரு வித வெறுப்புணர்வினை போக்க உதவியுள்ளது. ஒரு மாதத்தில் மட்டும் நமது சேவைகளை சகோதர சமுதாய மக்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர். இதனை இன்னும் திட்டமிட்டு செயலாற்றினால் சமுதாயத்தின் மீதான பார்வை இன்னும் மேம்படும்.

அரசு உதவி பெற்று நடத்தப்பட்டு வரும் பள்ளிகள் எதிர்காலத்தில் அரசின் உதவி கிடைக்க முடியாத சூழ்நிலை உருவாகலாம். தன்சொத்தை பொதுசொத்தாக வழங்கி கல்வி மான்கள் பலர் இத்தகைய கல்வி நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர். அப்போது நாம் அத்தகைய கல்வி நிலையங்களை சிறப்பான முறையில் நடத்தக்கூடிய அளவுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு அமைப்புகளும், இயக்கங்களும் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப தனது பணிகளை அமைத்துக் கொள்கின்றன. இதன் காரணமாகவே அவை கல்வி நிறுவனங்களை நடத்துவதில் கவனம் எதுவும் செலுத்தவில்லை. பாபர் மசூதி இடிப்புக்கு பின்னர் ஒவ்வொருவரும் இயக்கம் அல்லது அமைப்புகளுடன் தங்களை இணைத்துக் கொள்வதன் மூலமே பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படும் என நம்பினர்.

வரும் ஏப்ரல் மற்றும் மே மாதம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன.

நமது சமுதாயத்தால் நடத்தப்படும் பயிற்சி நிலையங்கள் அனைத்து துறைகளிலும் பயிற்சி அளிக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றன. இதனை தவிர்த்து குறிப்பிட்ட ஆறு துறைகளை தேர்ந்தெடுத்து நாம் இளைஞர்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் சமுதாய மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என்றார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு அன்னை கதீஜா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகில் ஏற்படுத்தப்பட்டது. இங்கு இளநிலை மற்றும் முதுநிலை பாடங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல் அங்கு அன்னை கதீஜா அகாடமி என்ற கல்வி நிறுவனம் இஸ்லாமிய கல்வியுடன் போதிக்கப்பட்டு வருகிறது. பாண்டிசேரியில் இஸ்லாமிய கல்வி நிலையம் ஏற்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகின்றது. சமீபத்தில் லெப்பைகுடிக்காட்டில் அன்னை கதீஜா பெண்கள் கல்லூரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை துபாயில் செயல்பட்டு வரும் அந்த ஜமாஅத்தின் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் செயல்பட்டு வரும் அய்மான் சங்கம் தமிழகத்தில் அய்மான் மகளிர் கல்லூரியை ஏற்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது. வெளிநாட்டில் செயல்பட்டு வரும் சமுதாய அமைப்பு ஒன்று இத்தகைய கல்வி நிலையத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பிற சமுதாய அமைப்புகளும் கல்வி நிலையங்களை தொடங்கி சமுதாயத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்த முன்வரவேண்டும்.

சமீபத்தில் செய்தித்தாள்களில் மயிலாடுதுறையைச் சேர்ந்த டாக்டர் ராமசாமி குறைந்த கட்டணத்தில் சிகிச்சை பெற்று வருவதாக செய்தியினை பார்த்தோம். இத்தகைய நடைமுறைகள் நமது சமுதாய மக்கள் மத்தியில் உருவாக வேண்டும்.

கல்வி மற்றும் மருத்துவம் சேவையின் அடிப்படையில் இயங்க வேண்டும் என்பதே நமது ஆசை. அதற்கேற்ப சமுதாயத்தில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். இத்தகைய இலக்கை அடைய அனைவருடைய ஒத்துழைப்பும் தேவை என்று கூறி விடைபெற்றார்.அன்னை கதீஜா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இணையத்தளம்

http://annaikhadeeja.in/

இந்த சந்திப்பின் போது சமுதாய கல்விப் பணியில் பல்வேறு தளங்களில் செயல்பட்டு வரும் திருச்சி பைசுர் ரஹ்மான், பூதமங்கலம் முகைதீன் அப்துல் காதர், திருச்சி ஜாபர் சித்திக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

CMN Saleem:+91 98401 82251

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-