அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


‘‘சாதாரண தலைவலின்னு போனாலே ஏதாவது பிரச்னைன்னு சொல்லி பயமுறுத்திருவாங்க. ‘டெஸ்ட் பண்ணுங்க, ஸ்கேன் எடுங்க’ன்னு பணத்தையும் காலி பண்ணிருவாங்க… ஓடற வரைக்கும் வண்டி ஓடட்டும்... நிம்மதியாகவாவது இருக்கலாம்...’’ பலரிடம் இந்த வசனத்தைக் கேட்க முடிகிறது. உண்மையில் மருத்துவர்கள் அச்சுறுத்துகிறார்களா அல்லது எச்சரிக்கிறார்களா? ஒரு மூத்த மருத்துவர் என்ற முறையில் மக்களின் இந்த மனோபாவம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று டாக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டோம்.


‘‘ஒரு குற்றச்சாட்டாகவே பலரும் இந்த விஷயத்தைச் சொல்கிறார்கள். ஒன்றுமே இல்லாததைப் பெரிதுபடுத்தி பணம் சம்பாதிப்பது மருத்துவத்துறையில் நடக்கிறதுதான். இல்லையென்று சொல்ல முடியாது. பொருளாதார நோக்கத்தோடு மட்டுமே செயல்படுகிற மருத்துவர்களோ, மருத்துவமனைகளோ இதுபோன்ற நேர்மையற்ற செயல்களைச் செய்யலாம்.


வருமுன் காப்போம் என்ற அடிப்படையிலும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஏற்படுகிற தலைவலியோ, வயிற்றுவலியோ, எடைகுறைவோ, அடிக்கடி ஏற்படும் காய்ச்சலோ, ரத்தம் கலந்து மலம் வெளியாதலோ இருந்தால் பரிசோதனைகள் செய்துகொள்வதுதான் நல்லது. சிறுநீர் கழிப்பதில் பிரச்னை இருந்தாலும் எச்சரிக்கையாகிவிட வேண்டும்.


இல்லாவிட்டால் ஆரம்பநிலையிலேயே பிரச்னையை சரி செய்துவிடும் வாய்ப்பைத் தவறவிட்டுவிடுவோம். நாம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள செலவு செய்வதில் தவறு இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. இதுதான் நல்ல அணுகுமுறை. புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் அவசியமானது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்’’ என்பவர் எந்த நேரத்தில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறார்.


‘‘வெயிலில் அலைந்துவிட்டு வந்த பிறகு தலைவலி ஏற்படுகிறது, இரவில் சரியாகத் தூங்கவில்லை என்பது நமக்கே தெரிந்து தலைவலி வந்தால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், அடிக்கடி தலைவலி வருகிறது. இதற்கு முன்பு இதுபோல வந்ததில்லை, தலைவலி வருகிற போது பார்வை சரியாகத் தெரிவதில்லை என்ற வழக்கத்துக்கு மாறான பிரச்னைகள் வந்தால் பரிசோதனை செய்துகொள்வதே நல்லது. மூளைக்காய்ச்சலாக இருக்கலாம் அல்லது மூளையில் கட்டியாகக் கூட இருக்கலாம். உடலில் ஏற்படும் சில அசாதாரண மாற்றங்கள் நமக்கே தெரியும். புதுவித உணர்வு ஏற்படும்போது மருத்துவ ஆலோசனை கட்டாயம் தேவை.


உயிர் என்பது விலை மதிப்பில்லாதது. காலம் கடந்து ஒரு பிரச்னையைக் கண்டுபிடித்து, உடல்ரீதியாகத் துன்பங்களை அனுபவித்து, உறவுகளையும் சிரமப்படுத்தி, சேர்த்து வைத்த பொருளாதாரத்தையும் செலவழித்துவிட்டு பலர் இறப்பதைப் பார்க்கிறோம்.


இதுபோன்ற அலட்சியம் தனிப்பட்ட ஒருவரை மட்டும் பாதிக்காமல் அவரது குடும்பத்தையுமே பாதிக்கும். நம்மை ஏமாற்றிவிடுவார்கள் என்று சந்தேகப்பட்டால் தெரியாத மருத்துவரிடம், தெரியாத மருத்துவமனையில் சென்று பார்ப்பதைத் தவிர்ப்பதுதான் ஒரே வழி. உங்களுக்கு நன்கு தெரிந்த குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். பிரச்னை சாதாரணமானதுதானா அல்லது கவனிக்க வேண்டியதா என்பதை அவர் சொல்லிவிடுவார். கொஞ்சம் சந்தேகம் இருந்தால் அவரே சிறப்பு மருத்துவரிடம் அனுப்புவார்.


ஒரு பிரச்னையை இதுபோல் புத்திசாலித்தனமாக அணுகாமல், தானாகவே மருந்துக்கடைகளில் சென்று மருந்து வாங்கி சாப்பிடுவது தவறானது. ஏற்கெனவே இருக்கும் பிரச்னையும் தீராமல், எடுத்துக் கொள்ளும் மருந்தால் புதிதாக பக்கவிளைவும்தான் வந்து சேரும். எது வந்தாலும் அலட்சியப்படுத்துகிற இவர்கள் ஒருவகை என்றால், டாக்டருக்கே ஆலோசனை சொல்கிற இன்னொரு வகையினரும் இருக்கிறார்கள். இன்டர்நெட்டில் படித்துவிட்டு, அரைகுறையாக யாரிடமாவது கேட்டுக் கொண்டு மருத்துவர்களையே பாடுபடுத்துவார்கள். ‘என்ன... மருந்து மட்டும் எழுதிக் கொடுக்குறீங்க? எக்ஸ்ரேயாவது எடுங்க’ என்று சொல்வார்கள்.


மருத்துவக் காப்பீடோ அல்லது தங்கள் அலுவலகத்தின் மூலமோ மருத்துவ செலவுகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிற வசதியோ இருப்பவர்களுக்கு பொருளாதார இழப்பு ஒன்றுமில்லை. ஆனால், கஷ்டப்படுகிறவர்களாக இருந்தால் இதுபோன்ற காஸ்ட்லியான பரிசோதனைகள் பெரிய வலியை உண்டாக்கிவிடும். இவர்களில் மூன்றாவது Hypochondriac என்ற வகையினரும் இருக்கிறார்கள். ஒரு தும்மல் வந்துவிட்டால் கூட எனக்கு காசநோய் இருக்குமோ’ என்று பயப்படுவார்கள்.


அவர்களே பரிசோதனை செய்துகொண்டு அதன் பிறகு எங்களிடம் வருவார்கள். இன்டர்நெட்டில் படித்துவிட்டு ஒரு கம்ப்யூட்டரை ரிப்பேர் செய்ய முடியாது, கார் ஓட்டக் கற்றுக் கொள்ள முடியாது. நமக்குத் தேவைப்படுவது பற்றிய சில அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். அவ்வளவுதான். அதேபோல்தான் மருத்துவமும் என்பது புரியாதவர்கள் இவர்கள்’’ என்கிறார்.


தனிப்பட்ட வாழ்வில் இதுபோன்ற மறக்க முடியாத அனுபவம் இருந்தால் சொல்ல முடியுமா என்றதும் தன்னுடைய அப்பாவையே இதுபோன்ற சூழலில் இழந்தது பற்றிக் கூறுகிறார். ‘‘என்னுடைய அப்பாவுக்கு 72 வயது இருந்தபோது திடீரென்று எடை குறைந்தது. ஆனால், தினமும் என்னுடன் டென்னிஸ் விளையாடும் அளவுக்கு ஆரோக்கியமாகவே இருந்தார். சரி, வயோதிகத்தால் வரும் எடை குறைவு போல் இருக்கிறது என்று கவனக்குறைவாக இருந்துவிட்டேன்.


உடல்நிலையில் வேறு எந்த தவறான அறிகுறியும் இல்லை. ஒருநாள் விளையாடிவிட்டு வந்தபோது காயம் உண்டாகி. ரத்தத்தழும்பு போல் தெரிந்தது. பரிசோதனை செய்துபார்த்த போதுதான் ரத்தப்புற்றுநோய் (Leukemia) என்று தெரிந்தது. புற்றுநோய் ரத்தம் முழுவதும் பரவி அபாய கட்டத்தில் நிலைமை இருக்கிறது என்றார்கள். அதன்பிறகு, தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அடுத்த இரண்டு மாதத்தில் இறந்துவிட்டார்.


ஒரு மருத்துவராகப் பலரைக் காப்பாற்றும் நிலையில் இன்று கடவுள் வைத்திருக்கிறார். ஆனால், என் வீட்டிலேயே என் தகப்பனாரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் எப்போதும் என் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது. ஒருவேளை ஆரம்பநிலையிலேயே கண்டுபிடித்திருந்தால் அவரை குணப்படுத்தியிருக்கலாம். அவர் இன்னும் 5 ஆண்டுகளாவது வாழ்ந்திருப்பாரே என்ற குற்ற உணர்வு இன்னும் மனதை அரிக்கிறது.


எல்லா வகையிலும் ஆரோக்கியமாக இருந்ததால் அப்பாவின் உடல் எடை குறைவை நாங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டோம். அதனால் அசாதாரணமான நிலை உடலில் தெரிந்தால் நம்பிக்கைக்குரிய மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வதே சரியானது’’ என்கிறார் நெகிழ்வான குரலில்!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-