அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

இளைய தலைமுறை வாக்காளர்கள் சமூக பொறுப்புடன் இருக்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பேபி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலரின் அறிவுரையின் படி வளாக முகவர்களாக செயல்படும் கல்லூரி மாணவ, மாணவிகளுடனான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான பேபி தலைமையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் பேசியதாவது:-

நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் உணர்த்தும் வகையிலும், கல்லூரி மாணவ, மாணவிகளாகிய உங்களின் ஒத்துழைப்புடன் மனித சங்கிலி, வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம், வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

விழிப்புணர்வு பணி

மேலும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை சமூகத்தின் கடைநிலை மனிதனுக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக தங்களின் வாக்காளர் விழிப்புணர்வு பணி அமைய பெற வேண்டும். தங்களின் கிராமங்களில் 18 வயது நிரம்பிய அனைவரும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதையும், வாக்காளர் அடையாள அட்டை பெற்று விட்டனரா என்பதையும் முதலில் உறுதி செய்ய வேண்டும்.

அவ்வாறு தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்காத நபர்களும் தாமாக முன்வந்து சேர்க்கும் அளவிற்கு உங்களது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அமைய வேண்டும். உங்கள் கல்லூரியின் தாளாளர்கள் மற்றும் முதல்வர்களின் ஆலோசனை பெற்று, அவர்களின் அனுமதியுடன் உங்கள் கல்லூரி அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த உங்களின் பங்கு அளப்பரியது.

எனவே, உங்களின் பணியினை செம்மையாக செயல்படுத்த வேண்டும். இளைய தலைமுறை வாக்காளர்கள் சமூக பொறுப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாவேந்தன், வட்டாட்சியர் (தேர்தல்) செல்வராஜ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பாரதி, சுதாகர், அனைத்து கல்லூரி வளாக முகவர்கள், ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் சந்திரமவுலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு குழுக்களின் செயல்பாடுகளை...

அதனை தொடர்ந்து பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதியின் உதவி தேர்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான பேபி தலைமையில் வளாக முகவர்களாக செயல்படும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வீடியோ கண்காணிப்புக்குழு, சேவை மையம், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உள்ளிட்ட குழுக்களின் செயல்பாடுகளை பார்வையிட்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-