அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

மும்பை : ‘பாரத் மாதா கி ஜெய்’ என சொல்ல மறுத்ததால், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமின் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சி எம்.எல்.ஏ. வாரீஸ் பதான் மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, ‘‘என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினாலும் நான் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று கூற மாட்டேன்’’ என்றார்.
இதுபற்றி நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரபல திரைப்பட கவிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜாவேத் அக்தர், ‘‘ஷெர்வானி (முஸ்லிம்கள் அணியும் உடை) மற்றும் தலையில் தொப்பி அணிவதை இந்திய அரசியல் சட்டம் கட்டாயப்படுத்தவில்லை. ஆனாலும் அவர்கள் அணிகிறார்கள். அதே போன்று பாரத் மாதா கி ஜெய் என்று சொல்வதையும் அரசியல் சட்டம் கட்டாயப்படுத்தவில்லை என்றாலும், அவ்வாறு சொல்வதை ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறான்’’ என்றார்.

ஜாவேத் அக்தரின் இந்த பேச்சுக்கு நேற்று காலை எதிர்ப்பு தெரிவித்த ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி எம்.எல்.ஏ., வாரீஸ் பதான், ‘‘நாங்கள் ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத், ஜெய் ஹிந்த் என்று கூறுவோம்’’ என்றார். மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நேற்று இந்த பிரச்னையை பாஜ உறுப்பினர் ராம் கதம் எழுப்பினர். வாரீஸ் பதானுக்கு கண்டனம் தெரிவித்த அவர், ‘‘பாரத் மாதா கி ஜெய் என வாரீஸ் பதான் இந்த அவையில் அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையில் கூற வேண்டும்’’ என்று வலியுறுத்தினார். மற்ற கட்சி உறுப்பினர்களும் ராம் கதமின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், வாரீஸ் பதான் கூற மறுத்து விட்டார்.

இந்த பிரச்னையால் ஏற்பட்ட அமளி காரணமாக அவை மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. நான்காவது முறை அவை கூடிய போது, பாரத் மாதா கி ஜெய் என கூற மறுத்த வாரீஸ் பதானை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கிட்டத்தட்ட எல்லாக்கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினர். இதையேற்று வாரீஸ் பதானை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவது வாரீஸ் பதான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-