அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...  


வெளிநாட்டில் வாழும் என் போன்றவர்கள் பெரும்பாலும் சம்பாத்தியம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சாய்ந்து கொள்ளக் கிடைத்த ஒரு தோளாக நமக்குக் கிட்டிய இந்த அந்நிய மண்ணிலான நம் பொருள் தேடலில், நாம் நிறைய இழந்து கொண்டிருக்கிறோம்.

அவை நமது தனிப்பட்ட உணர்வு சார்ந்த மகிழ்ச்சியும் அன்பும் ஒருங்கே அமைந்த உறவுகளின் அருகாமை என்பதில் தொடங்கி, நம் உடல் ஆரோக்கியம் வரை நமக்கு இழப்புகள் இருந்தாலும், நாம் நம்மை நம்பி நமக்காக வாழும் நம் உறவுகளுக்காக அவற்றை மிக இலேசாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கடந்து செல்கிறோம்.

இங்கே மறுபூமியில் அன்றாடம் நமது வாழ்வை நாமே செப்பனிடுகிறோம். நமக்கு நாமே சுகமா? எனக் கேட்டு கண்ணாடி முன் நின்று, நம் தலையில் புதிதாக முளைத்த வெள்ளை நரை முடிகளைக் கண்டு ப்ச் ன்னுசொல்லிட்டு, நம் பொழுதுகளை தொடங்கி பருவங்களை இங்கே கழிக்கிறோம்.

இதில், நாம் கிளம்பிவந்ததன் நோக்கமாக, மிக முக்கியமாக நாம் நம்மை நம்பியுள்ள உறவுகளுக்கு கண்ணியமாக வாழக் கற்றுக் கொடுக்கிறோமா? நமது கடின உழைப்பால் ஈட்டும் செல்வத்தை நாம் முழுமையாக எந்த சேமிப்பும் இல்லாமல் ஊருக்கு அனுப்பி அவர்களை செல்வந்தர்களாக வாழச் செய்வதற்கு பதிலாக அவர்களை பாதுகாப்பான எதிர் காலமுள்ள நம்பிக்கையுள்ள மக்களாக ஆக்கினால் என்ன. நாம்அவர்களுக்கு, நமது சேமிப்பு போக மீதமாக கொஞ்சத்தை மட்டுமே அனுப்பி ஆடம்பரம் தவிர்த்து, அடுத்தவர்களைக் கண்டு பேராசை கொள்ளாமல் தனக்குக் கிடைத்தவற்றைக் கொண்டு திருப்தியுள்ள வாழ்க்கை வாழச் செய்தால் என்ன…

நாம் நமது சம்பாத்தியத்தின் காசு உண்டாக்கும் கஷ்டத்தை உணர்த்திக் கற்பித்து அவர்களுக்கு நம்மீது நாம் படும்துன்பம் உணர்ந்து, நமது அனுப்பித் தரும் காசுக்கு தகுந்த செலவைச் செய்து வாழும் நல்ல எதிர்காலம் ஏற்படுத்தித் தரலாமே.

அன்பு மக்களுக்கு அவர்கள் ஆசைப்படுகிறார்கள் என்பதற்காக மோட்டார் வாகனங்கள் அதன் பயன்பாடு இல்லாத நிலையில் விலையுயர்ந்த செல்போன் வாங்கித் தந்து விடாமல், சைக்கிளில் பயணிக்க செய்யச் சொல்லலாமே? அவனது நண்பர்கள் சேர்க்கை பழக்க வழக்கம் கண்காணித்து, கண்டிக்கலாமே… அவனது வரும்படி சம்பாத்தியம் வரும் போது அதீத வாகன மற்றும் மின்னணுப் பொருட்களின் வசதியை அவன் ஏற்படுத்திக் கொள்ள சொன்னால் நலம் தானே…

ஊரில் உள்ள மருத்துவ சேவைகளைக் கொண்டு திருப்தி கொண்டு, இயன்ற வரை சமையல் தொடங்கி, ஜவுளி வாசலில் வரும் அனைத்து பண்டங்கள் வாங்குவதிலும், அடுக்களை பயன்பாட்டில் புதிதாக வரும் புதிய டிசைன் பாத்திர வகையறா வரை, நாம் தேவைக்கு அதிகமானவற்றை வாங்குவதை, அதை வாங்க ஆலோசிப்பதை முதலிலேயே கடுமையாக தடுக்கலாமே.

இல்லாள் நமது பொருளை இல்லாமல் ஆக்கிய பாவத்தை நாம் தடுத்த மாதிரி இருக்குமல்ல்லவா… நானும் தான்குற்றவாளி… இங்கே என் எண்ணத்தை பதியும் நானும் அந்த மாதிரியாக என்னை மாற்றிக் கொண்டு மனைவியை மக்களை நல்ல பாதுகாப்பான எதிர்காலத்தை உண்டாக்க சேமிப்பில் இன்னும் கவனம் செலுத்த ஆர்வம் கொள்கிறேன்…

நான் பெற்ற மகன் ஏதேனும் ஒரு காவல் நிலையத்தில் ஒரு விபத்தை ஏற்படுத்திக் குற்றவாளியாக நிற்பதையும், நமது மனைவியோ மக்களோ இந்த மாதிரி விபத்து போன்ற துயரசம்பவம் மூலம் நட்டநடு வீதியில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையோ நாம் இனிமேலும் அனுமதிக்கப் போகிறோமா?தடுக்க வேண்டாமா?

நமக்கான பாதுகாப்பை நாம் உணர்வோம் அதற்காக நம்மை தயார் படுத்துவோம்… நம்மக்களைஆடம்பர வளர்ப்பு மற்றும் அழிச்சாட்டிய செலவீனங்களில் இருந்து பாதுகாப்போம்.

கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-