அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சாலை விபத்தினை தடுக்க சிறுவாச்சூர்-ஆலத்தூர் கேட்டில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய மந்திரியிடம் முறையிட்டதால்...

திருச்சி-சென்னை 4 வழிச்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் - பாடாலூர் இடையே துறைமங்கலத்தில் ரூ.350 கோடியில் அமைக்கப்பட்ட மேம்பாலங்கள் மற்றும் நான்கு வழி சாலை கடந்த 2009 பிப்ரவரி 15-ந் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டன. இதைத்தொடர்ந்து வாலிகண்டபுரம் பகுதியில் 2 மேம்பாலங்கள் அமைக்கவேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டதால் பாலங்கள் கட்டப்பட்டது. இதனால் விபத்துக்கள் நடப்பது கணிசமாக குறைந்துள்ளது.

தொடர்ச்சியாக விபத்துக்கள்

அதேநேரத்தில் புண்ணிய ஸ்தலமான பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூருக்கு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தருவதால் சிறுவாச்சூரில் மேம்பாலம் அமைக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அங்கு மேம்பாலம் அமைக்கப்படாததால், நான்குவழிச்சாலையில் அதிக அளவில் வாகன விபத்துக்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருப்பதும், இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும் தொடர்கிறது.

இதேபோல திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் ஆலத்தூர்கேட்டில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு புண்ணிய ஸ்தலமான செட்டிக்குளத்திற்கு 4 வழிச்சாலை பிரியும் இடமான ஆலத்தூர் கேட்டில் சுரங்கத்துடன் கூடிய மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

சிறுவாச்சூர் பகுதியில் விபத்துக்களை தவிர்க்க சாலை நடுவே இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தும் வாரத்திற்கு ஒரு முறை விபத்து நிகழ்ந்தவண்ணமாக இருக்கிறது. இதனால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும், கிராம மக்களும் அவ்வப்போது சாலைமறியலில் ஈடுபடுவதும், போலீசார் அங்கு சென்று சமாதானம் செய்வதும் நடந்துவருகிறது. மேலும் அப்பகுதியில் அச்சத்துடனேயே பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

மேம்பாலங்கள் அமைக்க கோரிக்கை

சிறுவாச்சூரில் மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். சாலை விபத்துக்கள் அதிகம் நிகழ்வதற்கு டிரைவர்களின் கவனக்குறைவு ஒருபுறம் இருந்தாலும், பொதுமக்களின் அஜாக்கிரதையும் விபத்துக்கள் நிகழ்வதற்கு காரணமாக அமைகிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, வாகனங்கள் வந்து வளைந்து, திரும்பி செல்வதற்கு சரியான அனுமானம் இல்லாததாலும் அடிக்கடி விபத்துகள் நேரிடுகிறது.

விபத்துக்களை தவிர்க்கவும், அதனால் உயிரிழப்புகளை தவிர்க்கவும் மத்திய அரசு ரூ.51 ஆயிரம் கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் பாலங்கள் கட்டுவதற்கான சேதுபாரதம் திட்டத்தை இம்மாதம் 4-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடியும், மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின்கட்காரியும் தொடங்கிவைத்துள்ளனர். சேதுபாரதம் திட்டத்தின்கீழ் சிறுவாச்சூர் மற்றும் ஆலத்தூர் கேட்டில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-