அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சென்னை,


தமிழக சட்டசபைக்கு மே 16-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.


பல முனைப் போட்டி


தேர்தலை சந்திப்பதற்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ளன. கிட்டத்தட்ட கூட்டணிகள் முடிவாகி விட்டன.


இந்த தேர்தலில் முதல் முறையாக பல முனைப் போட்டி ஏற்பட்டு உள்ளது. ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய குடியரசு கட்சி, கொங்கு இளைஞர் பேரவை ஆகியவை இடம்பெற்று உள்ளன.


தி.மு.க. கூட்டணி


தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் இடம் பெற்று உள்ளன. இந்த கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.


ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் அடங்கிய மக்கள் நல கூட்டணி விஜயகாந்தின் தே.மு.தி.க. வுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. இந்த அணியில் தே.மு.தி.க. 124 தொகுதிகளிலும், மக்கள் நல கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


பா.ம.க. தனித்துப் போட்டி


பாரதீய ஜனதா கூட்டணியில் பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி, ஏ.சி.சண்முகம் தலைமையிலான புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம் பெற்று உள்ளன. பாரதீய ஜனதா ஏற்கனவே 54 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.


பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்து களம் இறங்கி உள்ளது.


தொகுதி பங்கீடு


கடந்த சில நாட்களாக கூட்டணிகளில், தொகுதி பங்கீடு தொடர்பாக மும்முரமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து தேர்தல் வியூகம் பற்றியும், தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.


காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை இன்னும் 2 நாட்களில் முடிவு செய்யப்பட்டுவிடும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.


எந்தெந்த தொகுதிகள்?


ம.தி.மு.க. தலைவர் வைகோ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தே.மு.தி.க. எந்தெந்த தொகுதிகளில் போட்டிடுவது? மக்கள் நல கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து வருகிற 31-ந்தேதி (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும், அப்போது தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.


ஜி.கே.வாசனின் த.மா.கா, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் எந்த கூட்டணியில் சேரும் என்பது இன்னும் முடிவாகவில்லை.


சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற ஏப்ரல் 22-ந்தேதி தொடங்குகிறது. எனவே அதற்கு இன்னும் கணிசமான நாட்கள் இருப்பதால் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவாவதில் தாமதம் ஏற்படலாம் என்று தெரிகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-